சிங்கப்பூரில் ஒற்றைத் தாய்மார்களுக்கும், விலங்குக் காப்பகங்களுக்கும் உதவும் நோக்கத்தில் ‘லவ் அண்ட் லைட்’ அறநிறுவனத்தை ஜூலை 1ஆம் தேதி தொடங்கினார் 36 வயது கனகேஸ்வரி மோஹன தாஸ்.
அத்துடன் சென்னையில் உள்ள ‘உதவும் கரங்கள்’ என்ற ஆதரவற்றோர் இல்லத்திற்கும் உதவ இந்த அறநிறுவனம் திட்டமிடுகிறது.
ஒற்றைத் தாய்மார்களுக்கு மளிகைப் பொருள்கள், பற்றுச்சீட்டுகள் போன்ற நிதி தொடர்பான உதவி செய்வதோடு அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி தொடர்பான ஆதரவை இந்த அறநிறுவனம் மூலம் வழங்கத் திட்டமிடுகிறார் கனகேஸ்வரி.
சன்டெக் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பேசிய கனகேஸ்வரி, “கல்வியின் முக்கியத்துவத்தையும் அதனால் கிட்டும் வாய்ப்புகளையும் ஒற்றைப்பெற்றோருக்கு எடுத்துக்கூற, இந்த அறநிறுவனம் மற்ற நிறுவனங்களுடனும் அமைப்புகளுடனும் இணைந்து செயல்படும். மேலும் தாய்மார்களுக்கு வேலை வாய்ப்புகளை தேடித்தரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் ‘சுவிஃப்ட் அக்கவுண்டிங் பிஐ’ என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வரவுசெலவு நிறுவனத்தையும் தொடங்கினார் குமாரி கனகேஸ்வரி. இந்த நிறுவனம் மூலமும் தாய்மார்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது இவரது நோக்கம்.
பதின்ம வயதிலிருந்து ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடை அளிப்பதோடு ஆண்டுதோறும் அங்குள்ள குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிப்பார் கனகேஸ்வரி. தனக்கு கிடைத்த வசதிகளை, வசதி இல்லாமல் வளர்ந்தவர்களுக்குப் பெற்றுத்தருவதில் இவருக்கு மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.
“சிரமப்படுவோருக்கும் விலங்குகளுக்கும் அன்பு காட்டி, அவர்கள் வாழ்க்கைக்கு ஒளியூட்டுவது இந்த அறநிறுவனத்தின் இலக்கு,” என்று கூறினார்.
தொடக்கநிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக ஒப்பனை தொழில்துறையைச் சேர்ந்த திருவாட்டி ஷர்மிளா லோகன், திருமதி மஹாலட்சுமி, ஊடகத்துறையைச் சேர்ந்த திருவாட்டி மகேஸ்வரி, வழக்கறிஞராகப் பணிபுரியும் ரெபெக்கா ஸ்மித் ஆகிய நால்வரும் பங்கேற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
அறநிறுவனப் பணிகள் பற்றிய அந்தக் கலந்துரையாடலில் பேசிய நால்வரும், மற்ற சமூக அமைப்புகள் போல் அல்லாமல், இந்த அறநிறுவனம் விளம்பர நோக்கமில்லாமல் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
வாழ்க்கையில் தாங்கள் கடந்துவந்த பல சிக்கல்களையும் தடைகளையும் பகிர்ந்துகொண்ட அவர்கள், பல சமூக உதவி அமைப்புகளும் நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகளை விளம்பரப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாக எடுத்துரைத்தனர். அதனால் பயனாளர்களுக்கு ஏற்படும் சங்கடங்களையும் மூவரும் சுட்டினர்.
மேலும் விளம்பரத்தை நோக்கமாகக் கொள்ளும்போது, அடிப்படையான செயலில் கவனம் குறைந்துபோவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கலந்துரையாடலில் ஒற்றைப் பெற்றோர் சந்திக்கும் சிக்கல்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
ஒற்றைத் தாயார் என்ற பட்டத்தை எதிர்மறையாகப் பார்க்கும் சமுதாயப் பிரச்சினையை இதுபோன்ற அறநிறுவனங்கள் தீர்க்கும் என்று பேச்சாளர்கள் கூறினர்.

