சமகாலச் சிங்கப்பூர் இலக்கியம் புதியவர்களின் வரவால் புத்துணர்ச்சி பெற்று வருவதைக் குறிப்பிட்டு, அன்றாடம் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் நம்மைக் கடந்து செல்லும் மனிதர்களையும் அவதானித்தால் பல கதைகள் நமக்குக் கிடைக்கும் என்று கூறினார் எழுத்தாளர் திரு. ஷாநவாஸ்.
தான் சந்தித்த மனிதர்களுடனான கலந்துரையாடல் குறித்த பல சுவையான கதைகளை அவர் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 110வது கதைக்களம் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.
சென்ற ஜூலை 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 - 6 மணிவரை தேசிய நூலகத்தில் இடம்பெற்ற கதைக்களம் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ஷாநவாசின் ‘மூன்றாவது கை’ சிறுகதைத் தொகுப்பு நூல் கலந்துரையாடல் நடைபெற்றது.
சிங்கப்பூரின் அழகிய நிலப்பரப்பும், பல்வேறு இன மக்களின் கலாசார விழுமியங்களையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ளும் சாளரமாக ‘மூன்றாவது கை’ சிறுகதைத் தொகுப்பு நூல் இருப்பதாக தமிழ் ஆர்வலர் திருவாட்டி அ.மஹ்ஜபீன் தெரிவித்தார்.
நூலில் ஆங்காங்கே வரும் மலாய்ச் சொற்களுக்குத் தமிழில் விளக்கம் கொடுத்திருந்தால் அயலகத் தமிழ் வாசகர்களுக்குப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்று திருவாட்டி இசக்கி செல்வி கூறினார்.
கதைகளில் வரும் கதைமாந்தர்கள் பலரும் பண்பட்டவர்களாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதில் ஏதேனும் நோக்கம் இருக்கிறதா என்று வினவினார் திருவாட்டி எழிலி கருணாகரன்.
இலக்கியத்தில் ஆர்வமுள்ள இளையர்களுக்காக இளையர் பிரிவு ஒன்றைத் தொடங்க சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் விழைவதாகக் கூறினார் கழகத்தின் தலைவர் திரு நா.ஆண்டியப்பன். ஆர்வமுள்ள இளையர்கள் செயலாளர் திருவாட்டி பிரேமாவைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கதைக்களம் மாதாந்திர போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலுடன் வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை செல்வி இலக்கியா நெறிப்படுத்தினார்.

