வார இறுதிக்குள் நிறைவடையும் வாசிப்பு விழா

2 mins read
2cc3cc2b-ae5f-4118-9164-a14f362b7156
‘ரௌத்திரம் பழகு’ நூலின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை வழிநடத்தும் லலிதா ஸ்ரீனிவாசன், விஜி ஜெகதீஷ். - படம்: தேசிய நூலக வாரியம்

தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் வாசிப்பு விழா, கடந்த மூன்று வாரங்களாக நேரடியாகவும் மின்னிலக்கத் தளத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இவ்விழாவின் தமிழ் நிகழ்ச்சிகள், ஜெயமோகனின் ‘அறம்’, சுமதியின் ‘ரெளத்திரம் பழகு’ ஆகிய நூல்களை ஒட்டி கலந்துரையாடல்களும் போட்டிகளும் நடந்தேறி வருகின்றன.

சனிக்கிழமையன்று (ஜூலை 8) எழுத்தாளர் ஹேமலதா, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதை தொகுப்பையொட்டிய கலந்துரையாடல் அங்கத்தை நடத்தினார். மனிதர்களிடையே சொல்லளவில் சாதாரணமாக ஒலிக்கும் அறம், தனிமனித வாழ்வில் எத்தகைய வடிவம் எடுக்கிறது என்பது பற்றி அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 47 பேர் கலந்துரையாடினர்.

அதே நாளில் ‘நமது சமூகத்தின் பச்சாதாப மனப்பாங்கு: ஒரு கருத்தரங்கம்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடந்தது. பிறர் மீது நாம் உணரும் பச்சாதாபம் எத்தகைய தன்மைகளைக் கொண்டுள்ளது, அதை எப்படி மேம்படுத்தலாம் போன்ற கேள்விகள், 55 பேர் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடலில் எழுந்தன.

‘ரெளத்திரம் பழகு’ நூலாசிரியரான வழக்கறிஞர் சுமதி, ‘ஸூம்’ வழியாக தமது படைப்பு பற்றி உரையாற்றினார். சமூகத்தில் பரவலாக உள்ள பிரச்சினைகள் இதில் பேசப்பட்டன. 85 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண்களின் பிரச்சினைகள், சொந்த உயிரை மாய்த்துக்கொள்ளுதல் போன்ற விவகாரங்கள் பேசப்பட்டன.

அதே நூல் பற்றி வழக்கறிஞர் லலிதா ஸ்ரீனிவாசனும் விஜி ஜெகதீஷும், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) காலை தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் கலந்துரையாடலை நடத்தினர். இதில் 62 பேர் பங்கேற்றனர்.

ஜூன் 23ஆம் தேதி தொடங்கிய வாசிப்பு விழா, ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திங்கட்கிழமை (ஜூலை 10) மாலை எழுத்தாளர்கள் சுனில் கிருஷ்ணனும் திரு சிவானந்தம் நீலகண்டனும், வாசகர்கள் தங்களுக்குள் இருக்கும் அறக்குழப்பங்களையும் சோர்வையும் ஊசலாட்டங்களையும் அறம் சிறுகதைகள் போக்க வல்லன எனப் பேசவுள்ளனர்.

சிங்கப்பூரில் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய இணையச் செயல் திட்டங்கள், நூல் பரிந்துரைகள் முதலான பலவற்றோடு இந்த ஆண்டு வாசிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று ரெளத்திரம் பழகு புத்தகத்தின் சுவாரஸ்யமான வழக்குகள் பற்றியும் அவை என்னென்ன வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத் தருகின்றன என்பது குறித்தும் பேசும் வழக்கறிஞர் சுமதியுடன் உள்ளூர் பிரபலங்கள் வடிவழகன், ஜெயசுதா ஆகியோர் இணைகின்றனர்.

மறுநாள், மாணவர்களால் நடத்தப்படும் ‘வெற்றிக் கொடிக்கட்டு! ஒரு கொண்டாட்டம்’ இசை நிகழ்ச்சி வாசிப்பு விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது.

மாற்றங்களுக்கு மத்தியிலும் ஏற்றங்களைப் பெற்றுச் ‘செழிப்பதற்கான வழிமுறைகள்’ (Flourish) என்ற கருப்பொருளுடன் 70க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளில் நடைபெற்று வருகின்றன.

இலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க https://www.eventbrite.com/cc/read-fest-23-flourish-2188599 என்ற இணைப்பின்வழி பதிவு செய்யுமாறு தேசிய நூலக வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்