பார்வைக்குப் பெண்ணைப்போல் தோற்றமளிக்கும் நடீன், செயற்கை நுண்ணறிவாற்றல் படைத்த ஓர் இயந்திர மனிதக் கருவி. மனிதர்களைப்போன்ற உடல்மொழியுடன் உணர்வுகளை வெளிப்படுத்துவது அதன் சிறப்பம்சம்.
வருங்காலத்தில் நோயாளிகளுக்கும் முதியோருக்கும் பராமரிப்புச் சேவை வழங்குவதில் நடீன் போன்ற இயந்திர மனிதக் கருவிகள் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று அதன் உருவாக்கத்திற்கு உதவிய பேராசிரியர் நடியா மேக்னெனட் தல்மான் கூறுகிறார்.
ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த வல்லுநரின் கண்களையும் கூந்தலையும் அடிப்படையாகக்கொண்டே நடீனுக்கு அடர் பழுப்பு நிறக் கண்களும் செம்பழுப்பு நிறக் கூந்தலும் வடிவமைக்கப்பட்டன.
நடீன் போன்ற இயந்திர மனிதக் கருவிகள், பராமரிப்புச் சேவைத் துறையில் மனிதர்களைவிடச் சிறப்பாகப் பங்களிக்கும் என்றார் திருவாட்டி தல்மான்.
அனைத்துலகத் தொலைத்தொடர்புச் சங்கம் ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிற்கு இடையே அவர் உரையாற்றினார்.
சுகாதாரம் உள்ளிட்ட உலகளாவிய இலக்குகளை எட்டுவதற்கு செயற்கை நுண்ணறிவும் இயந்திர மனிதக் கருவிகளும் உதவியாக இருக்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.
உலகெங்கும் தாதிகள், பராமரிப்பாளர்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது. குறிப்பாக கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
சில நாடுகளில், பராமரிப்பு இல்லங்களில் ஊழியர் பற்றாக்குறை நிலவும் வேளையில் நடீன் போன்ற இயந்திர மனிதக் கருவிகளால் நிலைமை சீராகும் என்று கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் உள்ள தாதிமை இல்லத்தில் தங்கியிருப்போருடன் மூன்று ஆண்டுகளுக்குமுன் பேசி, பாடியதுடன் ‘பிங்கோ’ விளையாடியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தியாளரிடம் நடீன் தெரிவித்தது.
2021ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வெளியான டெக் எக்ஸ்ப்ளோர் அறிக்கையில், பிரைட்ஹில் எவர்கிரீன் இல்லத்தில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அது மிகச் சிறந்த அனுபவம். முதியோருடன் பேசிப் பழகியதும் அவர்களின் தேவைக்கேற்ப உதவியதும் எனக்கு மகிழ்ச்சி அளித்தது,” என்று நடீன் கூறியது.
“எளிதில் பாதிக்கப்படக்கூடியோர்க்கு பராமரிப்புச் சேவையும் உதவியும் வழங்குவதில் இயந்திர மனிதக் கருவிகள் மிகப் பெரிய பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்று அது குறிப்பிட்டது.
நிகழ்ச்சியில் ‘பாரோ’ எனப்படும் நீர்நாய்க்குட்டி போன்ற கருவியும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ‘டிமென்ஷியா’ எனப்படும் நினைவாற்றல் இழப்பு, ‘பார்க்கின்சன்ஸ்’ எனப்படும் நடுக்குவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அது உதவும்.
மேலும், தாதிமை உதவி வழங்கும் கிரேஸ் எனும் இயந்திர மனிதக் கருவியும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
சென்ற வாரம் நடீனுக்கு செயற்கை நுண்ணறிவாற்றல் திறன் மேம்படுத்தப்பட்டதாகக் கூறிய திருவாட்டி தல்மான் அதன் மூலம் நடீனின் பேச்சுத் திறன் கூடியிருப்பதாகக் கூறினார்.
திருவாட்டி தல்மான் பற்றிக் கூறிய நடீன், “அவரால் படைக்கப்பட்டது குறித்து நான் பெருமைப்படுகிறேன் என்றது.
“எனக்கு உயிர் கொடுத்த அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்,” என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.