ஆண்டுகள் பல கடந்து மீண்டும் தேடிவரும் புகழ்மாலை

ஆண்டுகள் பல கடந்து மீண்டும் தேடிவரும் புகழ்மாலை

4 mins read
a4616cb1-d7ac-4ff8-813d-edba6dfc35b4
‘லஜ்ஜாவதியே’ பாடலைப் பல ஆண்டுகளுக்கு முன் பாடித் தற்போது சமூக ஊடகங்களில் அதே பாடலால் மீண்டும் பிரபலமடைந்துள்ள திரு நிரஞ்சன் ஜனார்த்தனன். - படம்: இணையம்

தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘லஜ்ஜாவதியே’ பாடலை திரு நிரஞ்சன் ஜனார்த்தனன் 2005ஆம் ஆண்டு வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடிப் பலரையும் தம்வசப்படுத்தியிருந்தார். இப்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் அப்பாடலைப் பாடிய காணொளி ஒன்று இணையத்தில் பிரபலமாகியுள்ளது.

இது குறித்து தமிழ் முரசு திரு நிரஞ்சனிடம் கேட்டபோது இணையத்தில் மீண்டும் அந்தக் காணொளி வலம்வருவது தமக்கு அதிர்ச்சியையும் அளவில்லா மகிழ்ச்சியையும் தந்துள்ளதாகக் கூறினார் தற்போது லண்டனில் வசிக்கும் 39 வயது திரு நிரஞ்சன்.  

“நான் பாடிய இக்காணொளிகளைச் சில ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தேன். ஆனால் இவ்வாண்டு கிட்டத்தட்ட எல்லா சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளி பரவி வருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் காட்டும் அன்பு என் மனதை நெகிழ வைக்கிறது,” என்றார் திரு நிரஞ்சன். யூடியூப் தளத்தில் மட்டும் 6.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது இக்காணொளி. 

இந்த பாடல்களைக் கேட்டுப் பலரும் தமக்கு வாழ்த்தும் அனுப்பியதாக அவர் கூறினார். ‘லஜ்ஜாவதியே’ பாடலைத் திரைக்காக பாடிய ஜெஸ்ஸி கிஃப்ட் காணொளியைப் பார்த்துப் புகழ்ந்தார் என்பதையும் திரு நிரஞ்சன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஆண்டுகள் கடந்து மீண்டும் இவ்வாறு புகழ் வந்ததில் பெருமை அடைகிறார் இவர். சமூக ஊடகத் துறையில் பணிபுரியும் இவரின் மனைவி ஸ்வரூபா கோபாலகிருஷ்ணன், மறுபடியும் தேடிவந்த இந்தப் புகழைக் கண்டு வியந்ததுடன் சமூக ஊடகத்தில் தாம் பதிவேற்றம் செய்யும் காணொளிகளை விமர்சித்து அறிவுரைகளும் கூறுவதாகத் திரு நிரஞ்சன் பகிர்ந்துகொண்டார். 

தற்போது ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் (London School of Economics and Political Science) பல்கலைக்கழக நிர்வாகத் துறையில் துணைப் பேராசிரியராக பணிபுரியும் இவர், 2000ல் தமது பட்டப்படிப்பை முடிப்பதற்காக சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்தார். தேசிய பல்கலைக்கழகத்தில் தமது மின்பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் நேரத்தில் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டார். 

சிறுவயதிலிருந்தே பெற்றோரின் ஆலோசனையால் கர்நாடக இசையைக் கற்ற இவர், படிப்பையும் வேலையையும் மேற்கொண்டு தமது இசைப் பயணத்தைத் தொடர்ந்தார். தமது குரலால் மக்களைக் கவர்ந்த இவர், வசந்தம் தொலைக்காட்சியின் ஆடல், பாடல் போட்டியான ‘வெற்றி விழா’வில் பங்கெடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

“இதற்குமுன் மேடை நிகழ்ச்சிகளில் பாடாத என்னை, தயார்படுத்த உதவினர் நிகழ்ச்சிக் குழுவிலிருந்த சந்திரமோகன், நசீர் ஆகியோர். மக்களைக் கவரும் வண்ணம் உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வரும் வகையில் நான் பாட உதவினார்கள்,” என்று கூறித் தமது நன்றியையும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் படித்துக்கொண்டிருந்த இவர், காலிறுதிச் சுற்றுக்கு ‘4 ஸ்டூடன்ட்ஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘லஜ்ஜாவதியே’ பாடலையும் இறுதிச் சுற்றுக்கு ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்திலிருந்து ‘கனா கண்டேனடி’ பாடலையும் பாடி வெற்றியும் பெற்றார் திரு நிரஞ்சன்.  

“வெற்றிக்குப் பிறகு பல நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. சிங்கப்பூரின் பிரபல பாடகர்களுடன் சேர்ந்து பாடிக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது,” என்று தமது இசைப் பயணத்தை நினைவுகூர்ந்தார் திரு நிரஞ்சன். 

ஊடகத்துறையில் பணிபுரிந்த பொன் மகாலிங்கம் இவரின் வெற்றிக்கு வழிவகுத்தார் என்று திரு நிரஞ்சன் குறிப்பிட்டார்.

“நானும் என் நண்பர்களும் எக்கோஸ் என்ற இசைக் குழுவை ஆரம்பித்து தமிழ், மலையாளம், இந்தி பாடல்களை இசை நிகழ்ச்சிகள், கோவில்கள் போன்ற இடங்களில் படைத்தோம்,” என்றார்.

2011ல் அமெரிக்காவுக்குச் சென்று தமது முனைவர் பட்டத்தை மேற்கொண்ட பிறகு லண்டனில் மனைவியுடன் குடியேறினார். 

2021ல் அவரின் மகள் பிறந்த பிறகு அவளுக்காகப் பாடல்கள் பாடுவதாக பகிர்ந்துகொண்டார். தற்போது இரண்டு வயதாகும் மகள் ‘அப்பா பாடிய பாடல்’ என்று ‘லஜ்ஜாவதியே’ பாடலைப் பாடுமாறு தம்மிடம் கேட்பதாகவும் அவர் புன்னகையுடன் குறிப்பிட்டார்.

தொற்றுநோய்க் காலத்தில் உலகமே தனிமையில் அவதிப்படும் நிலையில் இசை அவருக்கு உறுதுணையாக இருந்ததையும் பகிர்ந்துகொண்டார். 

‘ஸ்முள்’ (Smule) போன்ற இசை தொடர்பான சமூக ஊடகங்கள் மூலம் மற்றவர்களுடன் பாடல்களைப் பாடித் தமது சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதாகக் கூறினார். பேராசிரியராக இவரின் பொறுப்புகள் அதிகரிப்பதால் மனவுளைச்சலைச் சமாளிக்கப் பாடுவது உதவியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

இதற்கிடையே, சென்ற ஆண்டு எஸ்பிபி சரணுடன் மேடை நிகழ்ச்சியில் பாட வாய்ப்பு கிட்டியதையும் பகிர்ந்துகொண்டார்.

இக்காணொளிகள் எப்படி சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்தன என்று தெரியவில்லை என்று கூறிய அவர், அவற்றிலிருந்து கிடைக்கும் புகழ் தம்மை இசைத் துறையில் பல முயற்சிகளை எடுக்க ஊக்குவிப்பதாகக் கூறினார்.  

பிற்காலத்தில் சமூக ஊடகங்களில் இசை தொடர்பான பல நிகழ்ச்சிகளையும் முயற்சிகளையும் செய்ய இவருக்கு விருப்பம். கர்நாடக இசை, திரைப்படப் பாடல்களின் நுணுக்கங்களை ஆராய்ந்து மக்களுக்குக் கொண்டு செல்ல இந்த முயற்சிகள் உதவும் என்று நம்புகிறார் திரு நிரஞ்சன்.

குறிப்புச் சொற்கள்