அன்று ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்; இன்று உணவுக்கடை முதலாளி

தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடந்தபோது அதனால் பாதிக்கப்பட்ட ஊழியர் பழனி பாண்டி, உணவங்காடி நிலையத்தில் இந்திய உணவுக்கடை முதலாளியாக இன்று உருவெடுத்துள்ளார்.  

தொழில்நுட்பத் துறை மேற்கொள்ளும் ஆட்குறைப்பு நடவடிக்கை, ஊழியர்கள் மீது தொடர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த 47 வயதுடைய திரு.பழனி பாண்டி, பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது நிறுவனம் வெளியிட்ட பணி நீக்கப் பட்டியலில் தமது பெயர் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.

இருப்பினும் சில மாதங்களில் அதிலிருந்து மீண்டு மனம் தளராமல் உணவங்காடி நிலையம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து, அனுபவம் பெற்று, தாமான் ஜூரோங் உணவங்காடி நிலையத்தில் இந்திய உணவுக் கடை ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் பாண்டி.

கடந்த 1999ஆம் ஆண்டு வேலை அனுமதி அட்டையில் கப்பல் பட்டறைக்கு வேலை செய்ய வந்த இவர், தொடர்ந்து வேலை அனுமதிச்சீட்டு (எம்பிளாய்மென்ட் பாஸ்) பெற்று இயந்திர வல்லுநராகப் பணியாற்றி வந்தார். 2004ஆம் ஆண்டு நிரந்தரக் குடியுரிமை பெற்ற பின்னர், தம் திறமைகளை வளர்த்துக்கொள்ள தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் துல்லியப் பொறியியல் துறையில் சான்றிதழ் படிப்பு மேற்கொண்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.

அங்கு தமது பணி மதியம் மூன்று மணிக்கெல்லாம் நிறைவு பெற்றதால், நேரத்தை வீணடிக்காமல் உணவங்காடி நிலையத்தில் பகுதிநேர வேலை செய்து வந்துள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்டும் வேறு வேலை தேடியவாறு உணவங்காடி நிலையத்தில் முழுநேரமாகப் பணியாற்றி வந்துள்ளார். அங்கு கிடைத்த அனுபவமே சொந்தமாகக் கடை தொடங்கும் தைரியத்தை அவருக்கு அளித்ததாகக் கூறுகிறார்.

பணி நீக்கம் செய்யப்பட்டு, அதே போன்ற வேறு வேலை எளிதில் கிடைக்காததால், செய்வதறியாது திகைத்த இவர் குடும்பத்தினரிடம் சொந்தமாக உணவுக்கடை தொடங்கும் யோசனையைப் பகிர்ந்தார். தொடக்கத்தில் தயக்கம் காட்டிய குடும்பத்தினர், இவரது தன்னம்பிக்கையைக் கண்டு தங்களது ஆதரவைக் கொடுக்கத் தொடங்கினர்.

மனைவி திருவாட்டி நதியாவுடன் பாண்டி. படம்: பே.கார்த்திகேயன்

வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பழகும் பாண்டியன், வருபவர்களிடம் பேசி பழகி ‘மலாய்’ மொழி கற்றுக்கொண்டுள்ளார். சீன மொழி கற்கும் முயற்சியை மேற்கொள்ள உள்ளதாகக் கூறுகிறார்.

தம் மனைவியும் உடன் வேலை பார்ப்பதாகக் கூறும் இவர், தமது இரு மகன்களில் ஒருவர், ‘ஃபுட்பாண்டா, கிராப்’ போன்ற உணவு விநியோக செயலிகளில் பதிவு செய்யவும், ‘பேநவ்’ உள்ளிட்ட பணம் செலுத்தும் கியூஆர் குறியீட்டுப் பதிவு போன்றவற்றிலும் பெரிதும் உதவி செய்து வருவதாகக் கூறுகிறார்.

ஆட்குறைப்பு நடவடிக்கை சிறிது பின்னடைவை ஏற்படுத்தினாலும் முற்றிலும் வேறுபட்ட பாதையில் தம்மை நடைபோட வைத்ததாகக் கூறும் இவர், “முன்பு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும்போது நேர நிர்வாகம் எளிதாக இருந்தது. குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிந்தது. ஆனால் தற்போது காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை கடை செயல்படுவதால், அதிகப் பணிச்சுமை உள்ளது. வாரத்தில் ஏழு நாட்களும் கடையைத் திறப்பதால் விடுமுறை எடுக்கவும் முடியாது. எனினும், தொழிலை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருப்பதால் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் உழைத்து வருகிறேன்,” என்று தெரிவித்தார்.

தாஜ் கிச்சன்@தாமான் ஜூரோங் என்ற தமது கடைக்குத் தீவெங்கிலும் கிளைகளைத் திறப்பதே தமதூ எதிர்கால இலக்கு என்று கூறிய பாண்டி, அந்த இலக்கை நோக்கிக் கடினமாக உழைப்பதாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!