மாவிலைத் தோரணம் கட்டுவது எதற்காக?

2 mins read
408554ff-c553-4db1-bce8-19c2a6730e21
சந்தனம், குங்குமம் வைக்கப்பட்ட மாவிலைத் தோரணம். - படம்: ஊடகம்

பொதுவாக விழாக்காலங்கள், கொண்டாட்டத் தருணங்களில் வீட்டின் வாயிலில் தோரணமாகவும் பூசைகளின்போதும் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல், மாவிலை பயன்படுத்தப்படுவதற்கான காரணம் என்னவென தெரிந்துகொள்வோம்.

வீட்டில் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியம் பெறவேண்டும் என்பதற்காக இதுபோன்ற பழக்கங்களை பின்பற்றச் செய்துள்ளனர் நமது முன்னோர்கள்.

நூலை மஞ்சளில் தோய்த்து எடுத்து, மாவிலைகளை ஒரே அளவு உள்ளதாக எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு அதனை சுத்தம் செய்து துடைத்து, அதில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து நன்கு காயவைத்து கட்டவேண்டும். இதனுடன் வேப்பிலைகளையும் சேர்த்து கட்ட வேண்டும்.

மாவிலைகளுக்கு ஒரு சிறப்புத் தன்மை உண்டு. அவை மரத்தில் இருந்து பறித்த பிறகும் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராணவாயுவை வெளிவிடும் தன்மை கொண்டவை.

பொதுவாக வீட்டு விசேஷங்கள் என்றாலும் கோவில்கள் என்றாலும் அங்கு மக்கள் அதிகம் கூடுவதுண்டு. இதனால் அங்கு சூழ்ந்திருக்கும் நல்ல காற்றானது அதிக மக்கள் விடும் மூச்சுக் காற்றால் அசுத்தமாகி மாசுபடும். இப்படி சூழும் அசுத்தக்காற்றை தூய காற்றாக மாற்ற உதவுகிறது மாவிலைகள்.

விழாக்களில் கலந்துகொள்ளும் குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தடுக்க இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் ‘மாவிலை’ தோரணம்.

மாவிலைக்கு நோய் பரப்பும் அணுக்களை அழிக்கும் ஆற்றல் உண்டு என அறிந்ததால்தான் அதைப் பின்பற்றக் கற்றுத் தந்துள்ளனர் நமது முன்னோர்கள். ஆனால், தற்போது அதற்குப் பதிலாக மாவிலை வடிவில் விற்கும் நெகிழித் தோரணங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுக்கு வழிவகுக்கிறது.

கலசம் வைத்து வழிபாடு செய்தபின் மாவிலை மூலம் கலச நீரை தெளிப்பது, கலச நீரை அருந்துவது போன்றவற்றால் ஆரோக்கியம் மேம்படும். மாவிலை போடப்பட்ட கலச நீரில் பிராண வாயுவின் அளவு அதிகமாக இருக்கும்.

அதேபோல் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவதால் எதிர்மறை சக்திகள் வீட்டில் நுழைவதைத் தடுக்க முடியும்.

மாவிலை தோரணம் வீட்டில் இருக்கும் காற்றினை சுத்தம் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். விழாக்களின்போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் பக்தர்களின் எதிர்மறை எண்ணங்களை நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். இதற்கு 11 அல்லது 21, 101, 1001 மாவிலைகளை தோரணமாக கட்டுவது நல்லது. காய்ந்த மாவிலையாக இருந்தாலும் அதன் சக்தி குறையாது.

குறிப்புச் சொற்கள்