பல தலைமுறைகளாக கொண்டாடப்படும் சிங்கப்பூரின் 80 ஆண்டுக் காற்பந்து வரலாற்றை மக்களிடம் பகிர்ந்துகொண்டு காற்பந்தின் வரலாறு குறித்து கலந்துரையாட தேசிய நூலக வாரியம் ‘லோக்கல் ஃபுட்பால் ரோர் ஓவர் தி ஜெனரேஷன்’ என்ற கலந்துரையாடலுக்கு ஜூலை 17ஆம் தேதியன்று ஏற்பாடு செய்தது.
சிங்கப்பூர் காற்பந்தின் பிரம்மாண்டமான வரலாற்றை ‘ரோர்’ என்ற நூலாகத் தொகுத்த திரு தியாகராஜு ஆறுமுகம் ‘ஸூம்’ வழியாக நடத்தப்பட்ட இக்கலந்துரையாடலை வழிநடத்தினார். இவருடன் நூலின் பதிப்பாசிரியர் திரு கேரி கோவும் கலந்துகொண்டார்.
காற்பந்து எப்படி சிங்கப்பூரில் அறிமுகமானது, உலக நாடுகளுடன் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவுக்கு இருக்கும் தொடர்பு, விளையாட்டு வீரர்களைப் பற்றியும் இருவரும் பகிர்ந்துகொண்டனர். சிங்கப்பூரை காற்பந்து வரைபடத்தில் நிலைநிறுத்திய விளையாட்டு வீரர்களைக் கௌரவித்து அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்தக் கலந்துரையாடல் நடந்தது.
இனி சிங்கப்பூரில் காற்பந்தின் நிலை என்ன, உலகளவில் போட்டியிடத் தேவையான முயற்சிகள் யாவை என்ற பிற்கால ஆசைகளும் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது.
காற்பந்து விளையாட்டு மீதான அதிகளவு நாட்டத்தால் ‘ரோர்’ நூலை சென்ற ஆண்டு வெளியிட்ட திரு தியாகராஜு சிங்கப்பூர், மலேசிய முன்னாள் காற்பந்து வீரர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர்.
இந்த தகவல்களைச் சேகரிக்கும் பயணத்தில் திரு தியாகராஜு சந்தித்த மனிதர்களைப் பற்றியும் கேட்ட கதைகளையும் இந்தக் கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
இந்நாட்டின் காற்பந்து வரலாற்றை நூலாகத் தொகுத்து வெளியிட இத்தொடர்புகள் பெரிதும் உதவின என்பதை திரு தியாகராஜு குறிப்பிட்டார்.
பல தலைமுறையாக காற்பந்து உலகத்திற்கு தங்களின் பங்கை ஆற்றிய ஃபாண்டி அஹ்மத், வி சுந்திர மூர்த்தி, ஆர் சூரியமூர்த்தி, டெர்ரி பத்மநாதன் போன்ற பல காற்பந்து வீரர்களும் அவர்களின் குடும்பத்தாரும் இக்கலந்துரையாடலில் பேசப்பட்ட தகவல்களைச் சேகரிக்க உதவியுள்ளதாகக் குறிப்பிட்டார் திரு தியாகராஜு.
தொடர்புடைய செய்திகள்
“இந்நூலில் அடங்கிய பல தகவல்களை இந்தக் கலந்துரையாடலில் விளக்கினேன். காற்பந்து பிரியர்கள் உலக காற்பந்து மட்டுமின்றி உள்ளூர் வரலாறு பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். கொடி கட்டிப் பறந்த சிங்கப்பூர் காற்பந்து இவ்விடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும்.
அதற்கு சிங்கப்பூர் என்ன செய்ய வேண்டும், காற்பந்து அமைப்பு எப்படி தொடர்ந்து புதிய வீரர்களை ஊக்குவிக்கலாம் என்று பலவற்றை கலந்துரையாடினோம்,” என்றார் திரு தியாகராஜு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர் முழுநேரமாக காற்பந்து வரலாறு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.
காற்பந்து பிரியர்களோடு முன்னாள் காற்பந்து வீர்கள், அவர்களின் குடும்பத்தார் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் காற்பந்துத் துறை மேலும் வளர வேண்டும், இதுபோன்ற கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று விரும்புகிறார் திரு தியாகராஜு.

