இனம், சமயம் சார்ந்த உரையாடல்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி

இனம், சமயம் சார்ந்த உரையாடல்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி

2 mins read
f1ca3ad7-3d1e-4f1c-956f-8563218d4991
இன நல்லிணக்க மாதத்தை முன்னிட்டு தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் இனம், சமயம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி உதவியது. - படம்: தேசிய இளையர் மன்றம்

இன நல்லிணக்க மாதத்தை முன்னிட்டு தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் இனம், சமயம் சார்ந்த பிரச்சினைகளை ஆராய ‘வேறுபாடுகளுக்கு அப்பால்:  இனம், சமயம் பற்றிய ஓர் உரையாடல்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை நடந்தது. 

தேசிய இளையர் மன்றம், தொழில்நுட்பக் கல்விக் கழகம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) ஆகிய சமூக அமைப்புகளுடன் தொடர்பு, தகவல் அமைச்சின் ‘ரீச்’ அமைப்பும் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. 

மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். இவருடன் சிண்டாவின் தலைமை செயலாக்க அதிகாரி தம்பிராஜா நிகழ்வை வழிநடத்தினார். 

கலந்துரையாடலில் பலர் தங்களின் இனம், சமயம் தொடர்பான வருத்தங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். 

உரையாடல் அட்டைகள் மூலம் விளையாட்டுகளில் பங்கேற்கச் செய்து, இனம் தொடர்பான சிக்கல்கள் குறித்துக் கலந்துரையாட தேசிய இளையர் மன்றம் உதவியது.  

‘குடிமை உரையாடல்’ என்ற பெயர்கொண்ட இந்தத் திட்டத்தின்கீழ் இரண்டாவது கட்டமாக இந்த உரையாடல் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன, சமயப் பாகுபாடுகள் தொடர்பான எடுத்துக்காட்டுகளை சித்திரித்த அந்த அட்டைகள், பங்கேற்பாளர்களைச் சிந்திக்கவும் அவர்களின் அனுபவங்களைப் பகிரவும் வழிவகுத்தது. 

அத்துடன், சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த புதிய உரையாடல் திட்டம் ஒன்றை விரைவில் அறிவிக்கவுள்ளதாக திரு எரிக் சுவா குறிப்பிட்டார். 

இந்தக் கலந்துரையாடல் மூலம் இன, சமயப் பாகுபாடுகள் தொடர்பான கசப்பான உரையாடல்களை எப்படி மனத்தைப் புண்படுத்தாத வகையில் கொண்டுசெல்லலாம் என்று சிண்டா இளையர் பிரிவில் தொண்டூழியராக இருக்கும் ரிதி ராஜேஷ் ரஷிவாலா, 17 கற்றுக்கொண்டார் . 

‘மேற்பரப்புக்கு அடியில்’ என்ற புதிய வளத்தைப் பயன்படுத்தி இனம் தொடர்பான உரையாடல்களை இன்று ஊக்குவித்தோம். ஓர் இளம் தொண்டூழியராக இதுபோன்ற கலந்துரையாடல்களை எப்படி உணர்வுப்பூர்வமாக வழிநடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொண்டேன்,” என்று தொழில்நுட்பக் கல்விக் கழக (கிழக்கு வளாகம்) கட்டுமானப் பொறியியல் வடிவமைப்புப் படிப்பை மேற்கொள்ளும் ரிதி கூறினார். 

இதுபோன்ற நிகழ்ச்சிகள் சிங்கப்பூரிலுள்ள இன நல்லிணக்கத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர் நம்புகிறார்.  

குறிப்புச் சொற்கள்