தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோயாளிகளின் முகங்களில் சிரிப்பை வரவழைக்கும் தேவதைகள்

3 mins read
ea309937-43df-4828-afee-6fe80e44a7ec
திருவாட்டி பிரான்சிஸ் மேரி மசரெல்லோ - படம்:

சிறுவயதில் அருகிலுள்ள தேவாலய மருத்துவமனையில் வலியுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் கிறிஸ்தவப் பெண்துறவிகள் என் கண்களுக்கு தேவதைகளாகத் தெரிந்தனர்.

அது முதல் தாதியாகும் கனவை என் மனத்தில் விதைத்துக்கொண்டேன் என்கிறார் திருவாட்டி பிரான்சிஸ் மேரி மசரெல்லோ.

நோயாளிப் பராமரிப்பு, மருத்துவ நடைமுறைகளில் தாதிகளின் சாதனைகளை கொண்டாடுவதற்காக சுகாதார அமைச்சு சிறந்த தாதிகளுக்கு வழங்கும் உயர்தகுதி விருதை இவ்வாண்டு மனநலக் கழகத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் மேரி மசெரெல்லோ பெற்றுள்ளார்.

சுகாதார அமைச்சு சிறந்த தாதிகளுக்கு வழங்கும் ‘மெரிட்’ விருதை  இவ்வாண்டு மனநலக் கழகத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் மேரி மசெரெல்லோ பெற்றுள்ளார்.
சுகாதார அமைச்சு சிறந்த தாதிகளுக்கு வழங்கும் ‘மெரிட்’ விருதை இவ்வாண்டு மனநலக் கழகத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் மேரி மசெரெல்லோ பெற்றுள்ளார். - படம்: மனநலக் கழகம்

இந்தியாவில் தேவாலயத்தில் பெண் துறவிகளைப் பார்த்து வளர்ந்த மேரி, பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தாதிமைப் பட்டயப் படிப்பில் சேர விரும்பினார்.

குடும்பத்தினர் ஆதரவு இல்லாததால் தாதிமைக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பட்டப் படிப்பில் சேர்ந்தார் மேரி. ஆனாலும், அதில் நாட்டமில்லாததால் ஓராண்டுடன் அதற்கு மூட்டைகட்டினார்.

பின்னர் தொடர்ந்து முயன்று, தன் மாமாவின் உதவியோடு பெற்றோரை இணங்க வைத்து 1995ஆம் ஆண்டில் தாதிமைப் பட்டயக் கல்வியில் சேர்ந்தார்.

தனது கனவைத் தொடர முதற்படி எடுத்து வைத்ததை நினைவுகூரும் மேரி, சில ஆண்டுகள் இந்தியாவில் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தாதியாகப் பணிபுரிந்தார். பின்னர், தனது 20களின் முற்பகுதியில் சிங்கப்பூரில் பணிபுரியும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, சிங்கப்பூர் மனநலக் கழகத்தில் பணியில் சேர்ந்தார்.

தொடக்கத்தில் ஈராண்டு அனுபவம் பெற்றபின் உடல்நலம் சார்ந்த தாதிப் பணிக்குச் செல்ல எண்ணியதாகக் குறிப்பிட்ட மேரி, மனநோயாளிகள் தன்னுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதைக் கண்டு, அவர்கள் குணமடைவதற்கும் அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் உதவுவதில் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து தன் தகுதியை வளர்த்துக்கொள்ள மனநலத்தில் உயர்நிலை பட்டயமும்  தாதிமைத் துறையில் இளநிலைப் பட்டமும் பெற்றார் மேரி.  

தன்னிடம் கண்டிப்பாக நடந்துகொண்ட தன் தாயாரைப் பார்ப்பதையும் அவருடன் பேசுவதையும் தவிர்த்த ஒரு பெண்ணைக் கையாண்ட ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்த மேரி, தொடக்கத்தில் பிடிவாதத்துடன் இருந்த அப்பெண்ணிடம் தொடர்ந்து அன்புகாட்டி, அவரின் நம்பிக்கையைப் பெற்றதைக் குறிப்பிடுகிறார்.

அடிக்கடி தாயாரைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்குள் பிணைப்பு ஏற்படுத்த முயன்றதாகவும் கூறுகிறார். ஒருநாள் அந்தப் பெண்ணிடம் அவரின் தாய் பேசிவிட்டு கிளம்புகையில், தாயாரை அப்பெண் கட்டியணைத்ததையும் அந்தத் தாய் கண்ணீர் சிந்தியதையும் கூறுகிறார்.

மேலும், அந்தத் தாய் தன்னை ஆரத்தழுவி கண்ணீர் வடித்ததாகவும், நன்றி சொல்லியதோடு, வாழ்வின் சிறந்த தருணங்களில் இது ஒன்று என்று குறிப்பிட்டதாகவும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார் மேரி.

தற்போது குறுகியகால நெருக்கடியில் உள்ள நோயாளிகள் பிரிவில் (Short Stay Unit) பணியாற்றும் மேரி, நோயாளிளை நெருக்கடிநிலையிலிருந்து மீட்டு நிலைபெற உதவுவதோடு தங்களது மனநலத்தைப் பேணுவதற்கான திறன்களை வழங்கும் பணியில் ஈடுபடுகிறார்.

தமது 22 ஆண்டு தாதிப்பணி அனுபவத்தில், பல நோயாளிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள மேரி, “உடல்நலக் கோளாறு உள்ள நோயாளிகளுக்குச் சேவையாற்றுவதிலிருந்து, மனநோயாளிகளைக் கையாள்வது முற்றிலும் வேறுபட்டது. இங்கு நான் அவர்களுடன் செலவிட வேண்டிய நேரம் அதிகம். அவர்களது அன்பையும் நம்பிக்கையையும் பெறுவது முக்கியம்,” என்கிறார்.

ஆர்வத்துடன் செய்தால் எந்தப் பணியும் எளிதாகத்தான் இருக்கும் என்று சொல்லும் மேரி, தன் பணியில் சிறப்பாகச் செயலாற்ற உறுதுணையாக இருக்கும் பணி மேற்பார்வையாளர்கள், நிர்வாகத்தினர், குடும்பம், நண்பர்கள் என அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்