நடைபயிற்சி என்பது உடற்பயிற்சி செய்வதற்கான மிக எளிய வழி. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு துணை புரியும் இந்தப் பயிற்சியை நாளும் பின்பற்றி வந்தால் ஆயுள் கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஓட்டம், மெதுவோட்டப் பயிற்சிகளைப் போலவே நடைபயிற்சியும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளை வலுப்படுத்துவதுடன் நன்றாகத் தூங்கவும் மன அழுத்தம் நீங்கவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இவ்வளவு நன்மைகள் கொண்ட உடற்பயிற்சி குறித்து இன்னும் ஒரு சிலர் விழிப்புணர்வு இன்றி உள்ளனர். போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் இறப்புகள் பதிவாவதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் குறிப்பிட்டுள்ளது.
உலகளவில் உடல் இயக்கம் குறிப்பாக நடைபயிற்சி இல்லாமல் இருப்பதன் காரணமாக மனிதர்கள் உயிரிழப்பது நான்காவது இடத்தில் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போலந்து நாட்டைச் சேர்ந்த லோட்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆகியவற்றின் குழுவினர் ஒன்றிணைந்து, பொதுவாக ஒரு தனி நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கவேண்டும், அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதற்காக ஏறத்தாழ 2 லட்சத்து 26 நபர்களிடம் இக்குழுவினர் ஆய்வுகள் நடத்தினர்.
பொதுவாக ஒருநாளைக்கு 10,000 அடிகள் வரை நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என கூறுவதுண்டு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அன்றாடம் 10,000 அடிகள் எடுத்து வைப்பது என்பது பெரும் சவாலான காரியம்.
இந்தச் சூழலில், ஒருவர் ஒரு நாளில் 5,000 அடிகள் வரை நடந்தாலும் கூட உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக ஒருவர் 4,000 அடிகளுக்கு மேல் கூடுதலாக 1,000 அடிகளை எடுத்துவைத்தால் அவர்கள் நீண்டநாள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் 15 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் இதயம், இரத்த நாளங்களுக்கு நன்மை செய்ய தினமும் 2,300 அடிகளுக்கு மேல் நடந்தால் போதுமானது எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒருவர் எங்கு வாழ்ந்தாலும் அனைத்து பாலினங்கள், வயதினருக்கும் நடைபயிற்சி நன்மைகளை அளிப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து லோட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மசீஜ் பனாச் கூறுகையில், “அறுபது வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 5,000 அடிகள் எடுத்து வைப்பதால் அவர்களின் வாழ்நாளும் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.
“இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் ஒருவர் நடந்தால் இதய ஆபத்தை குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்.
“மேலும், அதிக நேரம் உட்கார்ந்திருப்பது எல்லா வகையான முதுகுப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். அலுவலக வேலைகளில் இருப்பவர்களிடம் இதை அதிகம் காண்கிறோம், அவர்களின் முதுகு தொடர்ந்து அழுத்த நிலையில் வைக்கப்படுவதால், இது பிற்காலத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது,” என்கிறார் அவர்.
நடப்பதற்கான வழிமுறைகள்
[ο] பேருந்து அல்லது காரில் செல்வதைவிடவும் ரயில் நிலையம், பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்லுங்கள்.
[ο] நீங்கள் நீண்டநேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்யும் நபராக இருந்தால் இருக்கையில் இருந்து சிறிது நேரத்துக்கு ஒரு சிறு நடை மேற்கொள்ள கைப்பேசியில் அலாரம் வைத்துக்கொள்ளுங்கள்.
[ο] நீங்கள் கர்ப்பமாக இருந்தால் நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சியாகும்.
[ο] தினமும் 30 நிமிட நடைபயிற்சியை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.
[ο] பூங்கா அல்லது வனப் பாதைகளில் நண்பர்களுடன் நடந்து செல்லுங்கள் அல்லது உங்களிடம் செல்லப்பிராணியான நாய் இருந்தால் அதனையும் அழைத்துக்கொண்டு நடைபயிற்சி செல்லலாம்.

