தன் வாழ்க்கை 2022ஆம் ஆண்டு தலைகீழாக மாறியது என்று கூறியுள்ளார் ஸ்டேசி பேட்டன் என்னும் 56 வயது அமெரிக்கப் பெண்.
புற்றுநோயால் அவருடைய கணவர் காலமானார்; தந்தையும் பார்கின்சன் நோய் காரணமாக மாண்டுபோனார்; தாயையும் புற்றுநோய் விட்டுவைக்கவில்லை.
துன்பங்கள் இப்படி அடுத்தடுத்து தம்மை வாட்டியதால் கவலையில் மூழ்கிய பேட்டன், தாம் 26 ஆண்டுகாலமாக வாழ்ந்த சியாட்டல் நகரில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் ஃபேர்பீல்டில் உள்ள கிராமத்துக்குச் சென்றார்.
இவ்வளவு கடினமான சூழலிலும் தனது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நல்ல நிகழ்வுகளைக் கவனிக்கத் தொடங்கினார் பேட்டன்.
தம் வீட்டிலிருந்த ஒரு பெரிய கண்ணாடிக் குவளையை எடுத்து, அதற்கு நன்றியுணர்வுக் குவளை எனப் பெயரிட்டார்.
அன்றாடம் இரவு தூங்குவதற்கு முன்னர் அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் அந்தக் குவளையில் அவர் எழுதி வைக்கத் தொடங்கினார்.
“இன்று புதிதாக ஒருவரைச் சந்தித்தேன், நாய்க்குட்டியுடன் நடைபயணம் சென்றேன்,” என்பன, போன்றவற்றையெல்லாம் எழுதிவைத்தார் பேட்டன்.
மனதில் வலி இருந்தாலும் இப்படி எழுதுவது ஆறுதல் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் நன்றியுணர்வால் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பது பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில் நன்றியுணர்வு கொண்டவர்களின் மனநிலை நன்றாக இருப்பதாகவும் அது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக வைக்க உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், உடல்ரீதியான பலன்கள் ஏதும் கிடைக்கிறதா என்பது பற்றிய விவரங்கள் ஆய்வில் குறிப்பிடப்படவில்லை.
மனதில் உள்ள காயங்கள் ஆறவும் வாழ்க்கையில் புத்துணர்ச்சி பெறவும் நன்றி உணர்வுகள் உதவுவதாக ஆய்வாளரும் பேராசிரியருமான ராபர்ட் எம்மன்ஸ் கூறுகிறார்.
நன்றி உணர்வு என்பது ஒரு நேர்மறையான உணர்வு. அது மனிதர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் நல்ல நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து, புத்துணர்வு பெறுவதற்குக் கிடைத்த ஒரு பரிசு என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருவர் நம்மிடம் கனிவாக நடந்துகொண்டால் அதை நாம் நன்றி உணர்வுடன் நினைத்துப் பார்ப்போம்.
ஆய்வுகளில் பங்கேற்றவர் சிலரிடம் நன்றிக் கடிதங்கள் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவர்களிடம் நடக்கும் மனமாற்றங்கள், செயல்கள் குறித்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டன.
ஆய்வின் முடிவில் நன்றிக் கடிதங்கள் எழுதியவர்களுக்கு மனப் பிரச்சினைகள் குறைவாக இருந்தன என்றும் தங்கள் வாழ்க்கை குறித்து நல்ல எண்ணம் கொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மற்ற சில ஆய்வுகளில் நன்றி உணர்வுடன் உள்ளவர்கள் நன்கு தூங்குகிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டது.
ஒருவருக்கு ஒருவர் உதவுவது போன்ற நன்றியுணர்வுக் காட்சிகளை நேரடியாகப் பார்க்கும்போதும் ஒருவரின் மனத்தில் அமைதி ஏற்படுவதாகத் தெரிவித்தார் பேராசிரியர் ராபர்ட் எம்மன்ஸ்.
நாள் ஒன்றுக்கு ஒருமுறை நன்றி உணர்வுடன் இருந்தாலே போதுமானது. இருப்பினும், அதனை நீண்ட நாள்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் ஜோயல் வோங்.
“வீட்டில் உள்ள பெற்றோருக்கு உதவுவது, சமையல் அறையைச் சுத்தம் செய்ய மனைவிக்கு உதவுவது போன்றவையும் நன்றி உணர்வுகள்தான். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அந்த மகிழ்ச்சி சமூகத்திலும் பரவும்,” என்கிறார் மருத்துவர் ஜோயல் வோங்.

