மூக்கிரட்டை என்று அழைக்கப்படும் மூலிகைச் செடி உடலுக்கு பல வகையில் நன்மை தரும் கீரையாகும். இது ஓர் உடல் தேற்றி. தங்கச்சத்து நிறைந்தது.
இலைகள் மேல் பச்சை நிறத்திலும் கீழ்ப்பக்கத்தில் சற்று வெளுத்தும் இருக்கும். ஊதா நிற பூக்களை கொண்டிருக்கும். வேர் தடிமனாக இருந்தாலும் இவை பூமிக்குள் இருக்கும். தண்டுகள் தனித்து இருக்கும். நிலத்தில் படர்ந்து வளர்ந்திருக்கும்.
இது ஆங்கிலத்தில் புனர்னவா எனப்படும். இதன் அறிவியல் பெயர் Boerhavia diffusa.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு உயிரூட்டுவதால் மூக்கிரட்டை என்று பெயர். கல்லீரல், சிறுநீரகக் கழிவுகளை சிறந்த முறையில் வெளியேற்ற இவை உதவுகிறது. ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. கப நோய்கள், ஆஸ்துமாவுக்கு சிறந்த மருந்து. மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயைக் குணமாக்கும். வாத நோய்க்கு மருந்து. மூட்டுவலியைக் குறைக்கும்.
ரத்த அணுக்கள் பெருகும்
மூக்கிரட்டை கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உடலுக்கு பலம் கொடுக்கும். உடலில் வாத நோய்கள் இல்லாமல் செய்யும். வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை இந்தக் கீரையை உண்டால் உடலில் ரத்த அணுக்கள் சீராக இருக்க உதவும்.
மூக்கிரட்டையை சுத்தம் செய்து மை போல் அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து விழுங்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரைப் பருக வேண்டும். தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். மூலக்கட்டி இருந்தாலும் அவை சுருங்கி பூரணமாக குணமாகும். மலக்குடலை சுத்தம் செய்யும்.
கால் வலியைக் குறைக்கும்
வாத நோய் தடுக்க உதவும். மூக்கிரட்டையை உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலில் இருக்கும் வாதம் இறங்கும். மூக்கிரட்டை கீரையை அவ்வபோது உணவில் சேர்த்து வந்தால் மூட்டுவலியைத் தவிர்க்கலாம்.
மூட்டு வலியோடு மூட்டுகளில் வீக்கமும் இருந்தால் அதைக் குறைக்க மூக்கிரட்டை கஷாயம் குடிக்கலாம். மூக்கிரட்டையுடன் சீரகம், பெருங்காயம் சேர்த்து கொதிக்கவைத்து குடித்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். தாங்க முடியாதவலி உபாதையும் குறையக்கூடும். சித்தமருத்துவத்தின் படி மூக்கிரட்டை கீரையின் வேர்களை நீர் விட்டு காய்ச்சி மிதமாக அருந்திவந்தால் வாத நோய்கள் வராமல் தடுக்கும்.
தொடர்புடைய செய்திகள்
கபம், ஆஸ்துமாவுக்கு மருந்து
உடலில் உண்டாகும் கபம் சார்ந்த நோய்களுக்கு மூக்கிரட்டை கீரை பலன் தரும் என்கிறது சித்த மருத்துவம். இது மூச்சுக்குழாயை விரிவாக்கும் தன்மை கொண்டிருக்கிறது என்பதால் ஆஸ்துமா நோய்க்கான மருந்தாகச் செயல்படுகிறது.
உடலில் நச்சு நீரால் சளியும், மூச்சுத்திணறலும் உண்டாகி மூக்கடைப்பை உண்டாக்கும். மூக்கடைப்பு இருக்கும்போது மூச்சுத்திணறலும் ஏற்பட்டால் மூக்கிரட்டை வேரில் சிறிது மிளகுத்தூள் கலந்து குடித்து வந்தால் மூச்சுத்திணறல் பாதிப்புகள் நீங்கும்.
இந்த மூலிகை தண்ணீர் குடித்தால் எத்தகைய ஆஸ்துமாவும் குணமாகும்.
மூக்கிரட்டை ரத்தத்தில் அதிகரித்திருக்கும் யூரியா, கிரியேட்டினைன் அளவை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலிருக்கும் போயரவினோன் - இ என்னும் வேதிப்பொருளுக்கு உடலில் உண்டாகும் தசைப்பிடிப்புகளை இளக்கும் தன்மை உண்டு. இதயத்தசைகளில் உண்டாக்கும் பாதிப்புகளைத் தடுக்கும்.
மூக்கிரட்டை கீரை எடுத்துக்கொள்ளும் போது அதிக காரம் உணவில் சேர்க்கக்கூடாது. உடலுக்கு அதிக சூட்டைத் தரும் உணவை உண்ணக்கூடாது. உடலுக்கு குளிர்ச்சித்தரும் உணவுகள்தான் உண்ண வேண்டும். புளிக்கு மாற்றாக எலுமிச்சை பழத்தையும், மிளகாய்க்கு பதிலாக மிளகும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்தக் கீரையை வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது. சாதாரண சாடிகளில் வைத்து வளர்க்கலாம்.

