கலை ஓவியம் நிகழ்ச்சியை வழி நடத்திய ‘தமிழ் இயந்திரா’

கலை ஓவியம் நிகழ்ச்சியை வழி நடத்திய ‘தமிழ் இயந்திரா’

2 mins read
89b9a535-b346-45e6-9633-31452732e2ea
நிகழ்ச்சியைப் படைப்பதற்கு செயற்கை நுண்ணறிவுக் கதாபாத்திரம் ‘தமிழ் இயந்திரா’ ஏற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்டது. - படம்: ரச்சனா வேலாயுதம்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புத்தாக்க முறையில் இசையைப் படைக்க ‘கலை ஒவியம்’ என்ற நிகழ்ச்சிக்குப் புத்தாக்க இந்திய கலையகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

பாடகர்களின் பாட்டில் சுருதி, ராகம், தாளம் போன்ற  நுணுக்கங்களின் குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்ய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.

இத்தொழில்நுட்பத்தின் பயன்களை ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு விவரித்தனர்.

ஸ்டாம்ஃபர்ட் கலை மையத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட நூறு பேர் வருகை புரிந்து ஆடல் பாடல் அங்கங்களை கண்டு ரசித்தனர். 

‘தமிழ் இயந்திரா’ என்ற செயற்கை நுண்ணறிவுக் கதாபாத்திரம் இந்த நிகழ்ச்சியை வழிநடத்தியது.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான திரு குணசேகரன், தமிழ் இயந்திராவை உருவாக்கி அதனுடன் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

எழுத்தாளர் சுஜாதாவின் இயந்திரா கதையில் வரும் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த செயற்கை நுண்ணறிவுப் பெண்மணியை உருவாக்கியதோடு பாடல் அம்சங்களில் இசை சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர், கணினி இசையமைப்பாளரான திரு சி குணசேகரன்.  

“ஒரு பாடலைப் பாடும்போது பாடகர்கள் அவரவர்களின் பாணியில் பாடலை மாற்றியமைத்து பாடுவது வழக்கம். இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பாடலின் நுணுக்கங்களை சரி செய்து அழகு சேர்கிறது,” என்று திரு குணசேகரன் சொன்னார்.

இசையில் பல உணர்வுகளை செயற்கை நுண்ணறிவு எப்படி வெளிக்கொண்டுவர உதவுகிறது என்பதை மக்களுக்குக் காண்பிக்க பலவிதமான பாடல்களை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்த அனுபவத்தையும் இவர் விளக்கினார்.

இதில் புதிய இளம் பாடகர்களை இந்த நிகழ்ச்சி மூலம் அறிமுகப்படுத்தி அவர்களின் திறமையை வெளிப்படுத்த இந்த மேடை உதவியதாக திரு குணசேகரன் நம்புகிறார்.

அதிலொருவரான அனன்யா சனூப்,12, செயற்கை நுண்ணறிவு வைத்து பாடும் முதல் அனுபவத்தை விவரித்தார். 

“இதற்குமுன் பல மேடைகளில் பாடிய எனக்கு மக்கள் முன் பாடுவது புதிதல்ல. எனினும் இந்த தொழில்நுட்பத்தை வைத்துப் பாடுவது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பாடும்போது நான் செய்த தவறுகளை இந்தத் தொழில்நுட்பம் திருத்தி சரியான இசை நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தது,” என்று இதற்கு முன் தேசிய மலையாள டெலண்டைன் போட்டியில் கலந்துகொண்டு மூன்று விருதுகளை பெற்ற அனன்யா கூறினார். 

இசை மீதான நாட்டத்தால் அனன்யாவை ஏழு வயதிலிருந்தே கர்நாடக இசை வகுப்புகளில் சேர்த்த அவரின் தாயாரான, திருமதி நிதா இந்த புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் கண்டு வியந்தார். 

“ஒரு திரைப்படத்தை திரையங்கில் பார்ப்பதற்கும் வீட்டில் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது. அதேபோல இந்த செயற்கை நுண்ணறிவு இசையைச் சீர்படுத்தி மெருகூட்டுகிறது.

“வந்தோரை கவர்ந்து இசை விருந்து அளித்தது இந்நிகழ்ச்சி. இசை, நாடகம், நடனம் என்ற மூன்று அங்கங்களையும் சேர்த்து எங்களை மகிழ்வித்தனர் ஏற்பாட்டாளர்கள்,” என்றார் 38 வயதான திருமதி நிதா.

குறிப்புச் சொற்கள்