சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்ற ‘லோன் போல்ஸ் ‘விளையாட்டுகளில் பொழுதுபோக்காக ஈடுபட்டு வந்த திரு மகேந்திரன் பசுபதி தனது 76வது வயதில் ஆசிய பேரா விளையாட்டுகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
சீனாவின் ஹங்சோ நகரத்தில் அக்டோபர் மாதம் 22 இதிலிருந்து 28 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான ‘ஆசிய பேரா’ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் ஆக வயதான விளையாட்டு வீரர் திரு மகேந்திரன்.
“ஜாக்” அல்லது “கிட்டி” என்று அழைக்கப்படும் சிறிய பந்துக்கு அருகில் நிற்கும் வகையில் ஒரு பெரிய பந்தை உருட்ட வேண்டும். திடலில் விளையாடப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் பார்வைக் குறைபாடு உள்ள நண்பர்களிடம் பேரா லோன் பவுலிங் விளையாட்டை கற்றுக்கொண்ட திரு மகேந்திரன், அதில் திறன் பெற அன்றாடம் பயிற்சி செய்கிறார்.
“தினமும் காலாங் அல்லது யன் கிட் திடலுக்கு சென்று பயிற்சி செய்வேன். ஒவ்வொருநாளும் இதை விளையாட ஆர்வத்துடன் இருக்கிறேன்,” என்று சொன்னார் திரு மகேந்திரன்.
குடும்பம், பயிற்றுவிப்பாளர்கள், சக விளையாட்டாளர்கள், உடற்குறையுள்ளவர்களுக்கான லோன் போல்ஸ் சங்கம் வழங்கும் ஆதரவு இப்போட்டியில் கலந்துகொள்ளும் தன்னம்பிக்கையை அளித்தது என்றார் இவர்.
“புதியவற்றைக் கற்றுக்கொள்ள வயது, கண்பார்வை குறைபாடு எதுவும் தடையல்ல என்பதை இந்த அனுபவம் உணர்த்தியுள்ளது. வாழ்க்கையில் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது,” என்றார் அவர். மற்றவர்களுடன் சேர்ந்து போட்டியிடும் புத்துணர்ச்சி இந்த வயதில் தமக்குக் கிடைத்திருப்பதாகக் கூறிய அவர், உலகத்தில் உள்ள மற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களைச் சந்தித்து தன் திறனை மேம்படுத்த இப்போட்டி ஒரு நல்ல தளம் என்று ஆர்வத்துடன் சொன்னார்.
“ஹாங்சோ கேம்ஸ் போட்டியில் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். போட்டியில் பதக்கம் வெல்லாவிட்டாலும் என் நாட்டைப் பிரதிநிதித்து விளையாடுவதில் பெருமை கொள்கிறேன்,” என்ற திரு மகேந்திரன், விளையாட்டுகள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியைத் திறனுள்ள மாற்றுத்திறனாளிகள் எல்லாருமே அனுபவிக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

