தமிழின் அழகைப் போற்றும் அழகுத் தமிழ் இளையர் விழா

2 mins read
a0561d04-9198-492b-8dfb-ac2a2d7cdc87
வளர்தமிழ் இயக்கம் மூன்றாம் முறையாக தமிழ் இளையர் விழாவை செப்டம்பர் 2 முதல் 10 வரை நடத்தவுள்ளது. - வளர்தமிழ் இயக்கம்

வளர்தமிழ் இயக்கம் மூன்றாம் ஆண்டாக தமிழ் இளையர் விழாவை செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. இவ்விழாவின் நோக்கம் இளையர்களிடம் தமிழ்மொழி, கலாசாரத்தின் அழகை உணர்த்துவதே.

இவ்வாண்டு விழா இளையர்களின் ஒட்டுமொத்த முயற்சியில், பத்து பங்காளிகள் வழங்கும் பத்து நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும். அவற்றுள் ஒன்பது நேரடியாகவும் ஒன்று மட்டும் ஸூம் ஊடகம் வழியாகவும் நடைபெறும்.

பாரம்பரிய நிகழ்ச்சிகளிலிருந்து நவீனக் கலை வடிவங்கள்வரை இவ்விழா இளையர்களின் திறனை வெளிக்காட்ட நல்வாய்ப்பாக அமையும். அனைத்து நிகழ்ச்சிகளும் 35 வயதைவிடக் குறைந்த மாணவர்களையும் இளையர்களையும் சென்றடைவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

இவ்வாண்டின் மையப்பொருள் ‘அழகு’. இதற்கேற்ப, பங்காளிகள் தமிழின் அழகை வருணித்துக் காட்டவுள்ளனர். கலாசார, இலக்கிய நிகழ்ச்சிகள், மொழிசார்ந்த பயிலரங்குகள், போட்டிகள் மற்றும் நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம்.

“தமிழ் இளையர் விழா வெறும் நிகழ்ச்சிக் கோவை மட்டுமல்ல; தமிழ் மீதான பற்றால் ஒத்த கருத்துடைய மக்கள் ஒன்றிணையும் சிறப்பு நிகழ்வாகும். இவ்விழா நம் மொழியைப் பாராட்டுவது மட்டுமல்லாது, நம் இளையர்களின் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துகிறது.

அனைத்து இளையர்களையும் எங்களோடு இணைந்து தமிழ்மொழியைக் கொண்டாட வரவேற்கிறோம்,” என்றார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் சு மனோகரன்.

“தமிழ் அமைப்புகள் புத்தாக்கமிக்க, சுவாரசியமான அனுபவங்களை நம் இளையர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்துவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

“வருங்காலத் தலைமுறையினருக்குத் தமிழ் தொடர்ந்து தேவையானதாக, துடிப்புமிக்கதாக நிலைக்க நம் மொழியைக் கொண்டாடுவதில் பங்களிக்க இளையர்களை ஊக்குவிக்கிறோம்,” என்றார் வளர்தமிழ் இயக்க உறுப்பினர் சுந்தர் பிலவேந்தர்ராஜ்.

தமிழ் இளையர் விழா தொடர்ந்து புதிய பங்காளிகளிடமிருந்து ஆதரவு பெற்றுவருகிறது. இவ்வாண்டு இரு புதிய பங்காளிகள் இடம்பெறுகின்றனர்.

ஒன்று, பாலர் பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பூமலையில் கதைசொல்லுதலையும் புதையல் தேடலையும் நடத்தவுள்ள ‘கிரியைடி எஸ்ஜி’ (KriyaiD SG). இயற்கை, பூச்சிகள், வண்ணங்கள் சார்ந்த தமிழ்ச் சொற்களுக்கு மாணவர்களை அறிமுகப்படுத்தி, வீட்டில் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்கவும் செய்யும் இந்நிகழ்ச்சி.

‘இன்ஃபோனிட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Infonitics Pte Ltd) தமிழ் இளையர் விழாவிற்கு மற்றுமொரு புதிய பங்காளி. இந்நிறுவனம் மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் பேச்சுப் போட்டியை நடத்தி அவர்களது புத்தாக்கத் திறனை மேம்படுத்தவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு செந்தமிழ் உலகில் வகிக்கும் பங்கு, அழகுத் தமிழில் கட்டுரை எழுதுதல், பாரம்பரியக் கதை சொல்லுதல் முதலானவற்றை ஆராயும் பயிலரங்குகள் நடைபெறவுள்ளன.

சிந்தையைக் கவரும் நாடகங்கள், சிந்தனைக் கோடுகளை எழுப்பும் பட்டிமன்றங்கள், சிந்தனைத் திறனை சீர்ப்படுத்தும் போட்டிகள் எனப் பல்வகையான சுவையான நிகழ்ச்சிகள் இளையர்களுக்காகக் காத்திருக்கின்றன.

தமிழின் அழகைப் பறைசாற்ற இளையர்கள் பாடுபடுவதும் பெரும் அழகு.

அவர்களது முயற்சிகளின் பலனாக நிகழவிருக்கும் இவ்விழாவை நேரில் காண்பதிலும் உள்ளது ஒரு தனி அழகு.

குறிப்புச் சொற்கள்