மலச்சிக்கலுக்கான காரணங்களும் தீர்வுகளும்

3 mins read
20a18af2-e5e7-4a45-80eb-bd3f3f63ec40
மலம் கழிப்பதற்கு என போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். - படம்: ஐஸ்டாக்ஃபோட்டோ
multi-img1 of 2

வழக்கத்துக்கு மாறாக உடலில் இருந்து மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது. மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது, மலம் முழுவதுமாக வெளியேறாததுபோன்ற ஓர் உணர்வு, மலம் சிறிதும் வெளியேறாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற அறிகுறிகள் மலச்சிக்கல் என்று அழைக்கப்படுகின்றன.

மருத்துவ மொழியில் சொன்னால், ஒருவருக்கு வாரத்துக்கு மும்முறைக்குக் குறைவாக மலம் வெளியேறினால் மலச்சிக்கல் இருப்பதாகக் கருதப்படுகிறது.

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று சென்று தன்னிடம் உள்ள சத்துகளை ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும்.

அதில் ஏறக்குறைய 80 விழுக்காடு தண்ணீர்தான் இருக்கும். அதன் பெரும்பகுதியை உறிஞ்சிக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மட்டும் மலத்தை வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை.

சில வேளைகளில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் மலம் கட்டியாகி மலச்சிக்கல் ஏற்படுகிறது. தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை ஊக்கப்படுத்தப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

காரணங்கள்

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது, பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது, தண்ணீர் குறைவாகக் குடிப்பது, காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற உணவுப் பழக்கங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன.

தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு ஏற்படும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது.

மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படக்கூடும்.

வேறு உடல் பிரச்சினைகளுக்காக நாம் சாப்பிடும் மருந்தும் மலச்சிக்கலுக்கு வித்திடலாம். எடுத்துக்காட்டாக, வயிற்றுப் புண்ணுக்கு உட்கொள்ளப்படும் ‘ஆன்டாசிட்’ மருந்துகள், இரும்புச்சத்து மாத்திரைகள், வயிற்றுவலி மாத்திரைகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்த மருந்துகள், ‘ஓப்பியம்’ கலந்த வலிநிவாரணிகள் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடிய மருந்து வகைகளில் முதன்மையானவை.

நார்ச்சத்து உதவும்

உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.

வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரை வகை, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம்.

தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காப்பி, தேநீர், மென்பானங்களைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.

தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

மலம் கழிப்பதற்கு என போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். வேலை அவசரம் காரணமாக குறைந்த நேரத்தில் மலம் கழிக்கக்கூடாது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்காதீர்கள்.

காலை நேரம், மாலை நேரம் என தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாள்களிலும் அதே நேரத்தில் மலம் வந்துவிடும்.

குறிப்புச் சொற்கள்