குழந்தைகள் மனநலம் பேண மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் முயற்சி

3 mins read
83e2b4c8-0159-44e6-b93d-dbe81c19a74c
நமக்கு இருக்கும் உணர்வுகளைப் பொறுத்து சில கேள்விகள் அட்டைகளில் எழுதப்படும். அவற்றுக்குப் பதில் அளிப்பதன் மூலம் நம் உணர்வுகளுக்கான காரணங்களை தெரிந்துகொள்ளலாம் - படம்: மெக்டோனல்ட்ஸ் நிறுவனம்

குழந்தைகளுக்கிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் அரசாங்கம் மட்டும் இன்றி சமூக அமைப்புகளும் நிறுவனங்களும் ஒன்றுசேர்ந்து பல முயற்சிகளை எடுத்து வர வேண்டும் என்ற நம்பிக்கையில் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. 

மனநல மருத்துவர்களின் பரிந்துரையில் குழந்தைகளுக்கு உதவும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் முயற்சிகளையும் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் எடுத்து வருவதாக கூறினார் சிங்கப்பூர் மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் செயலாளர் திரு பெஞ்சமின். 

“குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது மெக்டோனல்ட்ஸ். ஒரு தந்தையாக என் குழந்தையுடன் நல்ல உறவை வளர்க்க வேண்டிய அவசியத்தை அறிந்துள்ளேன். குழந்தைகளுக்கு மனநலப் பிரச்சினைகள், மன உளைச்சல் வரும் இக்கால கட்டத்தில் தங்களின் உணர்வுகளை சரியான முறையில் பகிர்ந்துகொள்ள எங்கள் முயற்சிகள் உதவும் என்று நம்புகிறோம்,” என்று கூறினார் திரு பெஞ்சமின்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நமக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த கேள்வி அட்டைகளை மெக்டோனல்ட்ஸ் தயாரித்தது என்று சொன்னார் திரு பெஞ்சமின். 

“இந்த அட்டைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் உதவும் என்று நம்புகிறோம். நமக்கு இருக்கும் உணர்வுகளைப் பொறுத்து சில கேள்விகள் அட்டைகளில் எழுதப்படும். அவற்றுக்குப் பதில் அளிப்பதன் மூலம் நம் உணர்வுகளுக்கான காரணங்களை தெரிந்துகொள்ளலாம்,” என்று அந்த அட்டைகளின் முக்கியத்துவத்தை கூறினார் திரு பெஞ்சமின். 

நமக்கு ஏன் இந்த உணர்வுகள் தோன்றுகின்றன என்று தெரிந்தால் மன உளைச்சல் இல்லாமல் நம் பிள்ளைகளுடன் இருக்கும் உறவு மேம்படும் என்பதையும் திரு பெஞ்சமின் குறிப்பிட்டார். 

“நானும் இந்த அட்டைகளை என் பிள்ளைகளுடன் பயன்படுத்துவேன். வேலை முடிந்து மன உளைச்சலுடன் வீடு திரும்பும் எனக்கு என் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க உதவியுள்ளது” என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 

இதுபோன்ற பல விளையாட்டுகளுக்கும் நூல்களுக்கும் சமூக நிகழ்ச்சிகளுக்கும் இந்த நிறுவனம் தொடர்ந்து ஏற்பாடு செய்யும் என்று உறுதி தெரிவித்தார் திரு பெஞ்சமின். 

இந்த முயற்சிகள் குடும்பங்களை சென்றடையவும் அவர்களுக்கு பயன்படவும் பல மனநல ஆலோசகர்களுடன் கலந்துரையாடிய பிறகு அமைக்கப்பட்டுள்ளன என்று நிறுவனத்தின் செயல்முறையை குறிப்பிட்டார். 

அதில் ஒருவரான குழந்தைகளுக்கான மனநல ஆலோசகர் டாக்டர் யாங் யாங் சிங்கப்பூரில் அதிகரிக்கும் மன உளைச்சல் குழந்தைகளை பெரிதளவில் பாதித்துள்ளது என்ற கருத்தை பகிர்ந்துகொண்டார். 

டியூக்-என்யுஎஸ், மனநல மருத்துவமனை நடத்திய ஆய்வில் கிட்டத்தட்ட 12% இளைஞர்கள் மனச்சோர்வுக்கான அறிகுறைகளைக் கொண்டுள்ளதாகவும் 13% இளைஞர்கள் கவலை தொடர்பான அறிகுறிகளைக் கொண்டிருந்தனர் என்றும் தெரிய வருகிறது என்பதைச் சுட்டினார் டாக்டர் யாங். 

“இந்த உணர்வுகளை அதிக அளவில் அவர்கள் அனுபவிக்கும்போது அதற்கான காரணங்கள் தெரியாமல் இருப்பது வழக்கம். ஆனால் அக்காரணங்களை கண்டறிந்து அவற்றை பற்றி பெற்றோருடன் கலந்துரையாடுவது நல்லது. இந்த தொடர்பை வலுப்படுத்தினால் பிள்ளைகள், பெற்றோர் இடையிலான உறவு மேம்படும், உணர்வுகளை தாராளமாக பேசிக்கொள்ளும் பழக்கம் ஏற்படும்,” என்றார் டாக்டர் யாங்.

எந்த வயதிலும் நாம் எதிர்மறையான உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் சமூகத்திலுள்ள பல மனநல சிக்கல்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ந்து உதவலாம் என்று குறிப்பிட்டார் டாக்டர் யாங். 

குறிப்புச் சொற்கள்