“உலகின் எல்லாப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் ரசனை ஒன்றுதான். அதிலும் ‘ரெட்ரோ’ எனும் 80-90 காலகட்டங்களில் பிரபலமடைந்த பாடல்கள், படங்களை இன்றும் கொண்டாடுகிறார்கள். அவற்றைக் கோத்து ஒரு முழுமையான நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்குவது பெருமை என்கிறார் நகைச்சுவைக் கலைஞர் ஆதவன்.
நகைச்சுவைக் கலைஞர்கள் ஆதவன், ஜெயச்சந்திரன், லோகேஷ் அம்பிகாபதி இணைந்து ‘ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் கோலிவுட்’ எனும் இரண்டரை மணி நேர நகைச்சுவை விருந்தை அளிக்க உள்ளனர்.
“சிங்கப்பூருக்கு ஒவ்வொரு முறை வரும் பொழுதும், முதன்முறை வருவது போல் வரவேற்பு கிடைக்கும். இங்குள்ள தமிழ் மக்களைச் சந்திப்பது நெருங்கிய ஒருவரைச் சந்திக்கும் உணர்வைத் தரும். அவர்களிடையே இந்நிகழ்வை மேடையேற்றுவதற்கு ஆவலாக இருக்கிறோம்,” என்றார் ஜெயச்சந்திரன்.
பொதுவாக தனித்தனியாக அல்லது இருவர் இணைந்து நடத்தும் நகைச்சுவை நிகழ்வைப் போல இல்லாமல், நாடக பாணியில், பாடல்கள், இசை, தனிக்குரல் நகைச்சுவை, பிரபலமானவர்களின் குரல்களில் பேசி சிரிக்கவைப்பது என அனைத்தும் கொண்ட தொகுப்பாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து பேசிய லோகேஷ் அம்பிகாபதி, “நண்பர்கள் இணைந்து திரைப்படம், இசை குறித்து பேசுவது இயல்பிலேயே மிகவும் நகைச்சுவையாக இருக்கும். அப்படி நாங்கள் பேசுவதை, சுவைபட ரசிகர்கள் முன்பு படைக்கிறோம். மக்களுக்கு இது மிகவும் பிடிக்குமென நம்புகிறோம்,” என்றார்.
செப்டம்பர் 16 ஆம் தேதியன்று கார்னிவல் சினிமாஸில் நடக்கவிருக்கும் இந்நிகழ்வைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.