சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் தமிழ் மொழிப் போட்டிகள் 2023

2 mins read
80d4a123-5f7c-4d96-8f87-c712ae138a0b
பாலர் பள்ளிகளில் இருந்து 37 மாணவர்கள் கலந்துகொண்டு மழலை மொழியில் அமரர் திரு லீ குவான் இயூவை பற்றி பேசினார்கள். - படம்: சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சனிக்கிழமை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் ‘தமிழ் மொழிப் போட்டிகள் 2023’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாலர் பள்ளி K2 வகுப்பு மாணவர்கள், தொடக்கநிலை 3, 4 மாணவர்கள், உயர்நிலை 1, 2 மாணவர்கள் போட்டிகளில் பங்குபெற்றார்கள்.

நவீன சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் ‘நம் தேசத் தந்தை திரு லீ குவான் இயூ’ என்ற தலைப்பில் தமிழ் பேச்சுப் போட்டி பாலர் பள்ளியில் K2 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

அதில் சிங்கப்பூரில் உள்ள பாலர் பள்ளிகளில் இருந்து 37 மாணவர்கள் கலந்துகொண்டு மிகவும் சிறப்பாக மழலை மொழியில் நம் தேசத்தின் தந்தை திரு லீ குவான் யூவை பற்றி சுமார் 2 நிமிடங்கள் மிகச் சிறப்பாக பேசினார்கள். ஆசிரியர்கள் திருமதி லீலாராணி, திருமதி சக்திதேவி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை நடத்தினார்கள்.

தொடக்கப் பள்ளி 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “தமிழ் பாட்டு போட்டி” நடத்தப்பட்டது, இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட நல்ல கருத்துள்ள 15 தமிழ் பாடல்களில் இருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து சிறப்பாக ஒவ்வொரு மாணவரும் பாடினார்.

சிங்கப்பூரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் இருந்து 27 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். ஆசிரியர்கள் திருமதி ஸ்வப்னா ஆனந்த், திருமதி சந்தியாசிவா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை நடத்தினார்கள்

உயர்நிலை 1, 2 மாணவர்களுக்கு தமிழ் வாசிப்புப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட நல்ல கருத்துள்ள 20 பெரியார் பொன்மொழிகளை வாசித்தனர். மேலும், மாணவர்கள் வாசித்த பொன்மொழிகளில் இருந்து நடுவர் கேட்ட இரு பொன்மொழிகளுக்கு விளக்கமளித்தனர்.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஐந்து வெற்றியாளர்களை நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர். வெற்றிபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் நவம்பரில் நடைபெறவுள்ள பெரியார் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

இப்போட்டிகளில் 63 பள்ளிகளைச் சேர்ந்த 90 மாணவர்கள் கலந்துகொண்டனர். பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிள்ளைகளுடன் அவர்களின் பெற்றோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்