தமிழ் இளையர் விழாவின் இறுதி நிகழ்ச்சிகளில் ஒன்றான இளையர் அழகு பட்டிமன்றம், இம்மாதம் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்றது. இணையத்தில் ‘ஸூம்’ நேரலையாகவும் ஒளிபரப்பானது.
தமிழர் தகவல் தொழில்நுட்பச் சமுதாயம், சிங்கப்பூர் இப்பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்தது.
இலாவணி எனும் பாடல்கள், எளிய நடனங்கள், நடிப்பு, கவிதை, புதிர், இசைக்கருவிகள் முதலியவை கலந்த குழு பட்டிமன்றத்தை இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது. இலாவணி வடமொழிச்சொல், தமிழில் அழகு எனப்பொருள்படும். ஆகவே இந்நிகழ்ச்சி ‘இளையர் அழகு பட்டிமன்றம்’ என்று பெயர்பெற்றது.
இப்போட்டியில் தொடக்கநிலை 1 முதல் உயர்நிலை 4 வரை மாணவர்கள் பங்கெடுத்தனர். மேலும், அவர்களது குழுக்களில் மாணவர்கள் அல்லாதோரும், பெற்றோர்களும், ஆசிரியர்களும்கூட கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர். ஆனால், வயது 35க்குக் கீழ் இருக்கவேண்டும்.
இப்போட்டிக்கு எட்டு நடுவர்கள் உதவினர். இறுதிச்சுற்றுகளுக்கு வழக்கறிஞர் கோவிந்தராசு, டாக்டர் செல்வி, டாக்டர் பொன்னி, எழுத்தாளர் தவமணி ஆகியோர் பணிபுரிந்தனர்.
மாணவர்கள் பலரும் இலாவணி முறையில் பட்டிமன்றத்தில் கலந்துகொண்டனர். தேர்வுச் சுற்றுகளில் கலந்துகொண்ட 30க்கும் மேற்பட்ட அணிகளிலிருந்து நான்கு அணிகள் இறுதிச் சுற்றுகளுக்குத் தகுதிபெற்றனர்.
‘இளையர் முன்னேற இளையர்கள் உதவவேண்டும், சமுதாயமல்ல’, ‘நம் நாட்டில் தமிழ் மொழியை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இளையர்கள் வாழவைப்பது சாத்தியமா?’ என்ற தலைப்புகளில் மாணவர்கள் இறு சுற்றுகளில் விவாதித்தனர்.
பட்டிமன்றத்தின் இறுதியில் சமுதாயத்தின் துணைச் செயலாளரும் தமிழர் பாரம்பரிய இசை, நடன பயிற்றுவிப்பாளருமான திரு ரமேஷ் மற்றும் குழுவினர் சிறிய இலாவணி பட்டிமன்றம் ஒன்றையும் நடித்துக் காட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளர் திருவாட்டி மரியா பவானி தாஸ் கலந்துகொண்டார்.
“மாணவர்களிடையே முத்தமிழிலும் நாட்டு நடப்புகளிலும் அவர்களது எதிர்காலத்திலும் நாட்டம் உண்டாக்குவதே இப்பட்டிமன்றத்தின் முக்கிய நோக்கம்,” என்றார் தமிழர் தகவல் தொழில்நுட்பச் சமுதாயத்தின் தலைவரும், முன்னாள் பிரபல தொலைக்காட்சி நெறியாளர் ஆனந்த கண்ணனின் தந்தையுமான கேப்டன் மா. கோவிந்தராசு.
முதல் பரிசை வென்ற ரிவர்சைட் உயர்நிலைப் பள்ளி மாணவர் க. ஆதித்தியா, அனைவரும் சிறப்பாகப் பேசியதாகவும் தன் குழுவினரின் உழைப்புக்குக் கிடைத்த சிறந்த வெகுமதியாகக் கருதுவதாகவும் கூறினார்.
இரண்டாம் பரிசை வென்ற ‘பிரபஞ்சம்’ குழுவினர், “தமிழ் பற்றிய பல செய்திகளையும் இலக்கியக் கூறுகளையும் கற்றுக்கொண்டோம். எங்கள் தமிழ்ப் பற்றும் வளர்ந்துள்ளது,” என்றனர்.
ஆனந்த கண்ணன் பட்டிமன்ற சவால் கேடயத்தினை இந்த ஆண்டும் ரிவர்சைட் உயர்நிலைப் பள்ளிக் குழுவே வென்றது.
“இப்பட்டிமன்றத்தின் சிறப்பு அம்சமே இக்கேடயம்தான். இதை முழுதாக நிரப்பினால் இது எங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ,” என்றார் செயலாளர் திருவாட்டி ரேணுகா.

