தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

களைகட்டிய கம்பன் விழா 2023

2 mins read
b57b3ab8-c971-4155-9ad6-5abcc428a7b5
(வலமிருந்து) பட்டிமன்றப் பேச்சாளர்கள் முனைவர் இரத்தின வேங்கடேசன், முனைவர் ந. செல்லக்கிருஷ்ணன், நடுவர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், முனைவர் மன்னை க. இராஜகோபாலன். - படங்கள்: நாதன் ஸ்டுடியோ

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் பத்தாவது ஆண்டாக நடத்திய கம்பன் விழாவில் இடம்பெற்ற குறுநாடகமும் சிறப்புப் பட்டிமன்றமும் அனைவரையும் கவர்ந்தன.

செட்பம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்ற கம்பன் விழாவில் இராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள், இலங்கை மன்னன் இராவணன், சீதையைக் கடத்தும் காட்சியைக் குறுநாடகமாகப் படைத்தனர்.

விழாவின் இறுதி அங்கமாக இடம்பெற்ற ‘தியாகத் தம்பி என்னும் பட்டத்திற்குப் பெரிதும் உரியவன் பரதனா? கும்பகர்ணனா?’ என்னும் பட்டிமன்றம் விறுவிறுப்புக்குக் குறைவில்லாமல் இருந்தது.

சீதையைக் கடத்திச் செல்லும்போது இராவணன், ஜடாயுவுடன் மோதும் காட்சி.
சீதையைக் கடத்திச் செல்லும்போது இராவணன், ஜடாயுவுடன் மோதும் காட்சி. - படங்கள்: நாதன் ஸ்டுடியோ

‘பரதனே’ என்னும் தலைப்பில் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் ந. செல்லக்கிருஷ்ணனும் முனைவர் இரத்தின வேங்கடேசனும் வாதிட்டனர்.

‘கும்பகர்ணனே’ என்னும் தலைப்பில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனும் முனைவர் மன்னை க. இராஜகோபாலனும் வாதிட்டனர்.

கம்ப இராமாயணத்தில் ஆழங்கால்பட்ட அறிஞரும் ஆன்மிகப் பேச்சாளருமான இலங்கை ஜெயராஜ் நடுவராகச் செயல்பட்டார்.

இரு பாத்திரங்களுமே பெருந்தியாகம் செய்துள்ளனர் என்ற நடுவர், எனினும், பரதன் இறுதியில் இழந்தவற்றை எல்லாம் மீண்டும் பெற்றுவிட்டான், ஆனால் கும்பகர்ணன் பெறாமலேயே இறந்துவிட்டான், அதனால் தியாகத் தம்பி என்ற பட்டத்திற்குப் பெரிதும் உரியவன் கும்பகர்ணனே என்று தீர்ப்பு வழங்கினார்.

விழாவில் முன்னாள் நியமன நாடாளுமன்றஉறுப்பினரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக மதியுரைஞருமான முனைவர் இரா. தினகரன், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.

சிறப்பு வருகைபுரிந்து உரையாற்றிய மலேசியக் கம்பன் அறவாரியம், மலேசியக் கண்ணதாசன் அறவாரியம் ஆகியவற்றின் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சரவணன், இளங்கோவடிகள், கம்பன், பாரதி ஆகியோரின் வழிகாட்டுதலைத் தமிழ்ச் சமூகம் பின்பற்றியிருந்தால் அது எப்போதோ முன்னேறியிருக்கும் என்று கூறினார்.

தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், தமிழ் தொடர்ந்து வாழும் மொழியாக நிலைத்து நிற்பது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது என்றும் அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தமிழில் பேசினால்தான் அடுத்த தலைமுறையும் தமிழ் பேசும் என்றும் சொன்னார்.

பார்வையாளர்களுக்கு ‘காஹூட்’ வழியில் நடத்தப்பட்ட கம்ப இராமாயணப் புதிர்ப் போட்டியில் முதல் மூன்று நிலைகளில் வந்த வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்