ஓய்வு என்பது மாற்று வேலையே. சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பதே உடலளவிலும் மனதளவிலும் நம்மை நலமுடன் வைத்திருக்கும் என்று கூறுகிறார் சிங்கப்பூர் ஆயுதப் படையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு ஆர் அழகப்பன், 60.
பணிஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே புக்கிட் பாத்தோக் பகுதியில் உள்ள லியன்ஹுவா தொடக்கப்பள்ளியின் செயல் மேலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் திரு அழகப்பன். தன்னுடைய வாழ்வின் இந்த புதிய அத்தியாயம் மிகவும் சுவாரசியமாக இருப்பதாகக் கூறும் இவர் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களைக் காண்பதே அதிக உற்சாகமளிப்பதாக தெரிவித்தார்.
தன்னுடைய 16 வயதிலிருந்து சிங்கப்பூர் ஆயுதப் படையில் இருந்த இவர் தன்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். ஏறத்தாழ 120திற்கும் மேற்பட்டோர் இவருக்கு கீழ் பணிபுரிந்தனர். பின்னர் 55ஆவது வயதில் வாரண்ட் அதிகாரியாக பணிஓய்வு பெற்றார்.
“அப்போது ஒவ்வொரு நாளும் அதிக அளவு பணி இருக்கும். காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து வேலைசெய்த பின்னரும் இரவில் பயிற்சிகள் இருக்கும். நாட்டிற்காக சேவையாற்றுகிறோம் என்ற எண்ணமே தொடர்ந்து பணியில் ஓடுவதற்கான ஊக்கமளித்தது“ என்றார் திரு அழகப்பன்.
தேசிய தின அணிவகுப்பில் அணிவகுத்துச் செல்லும் படைப்பிரிவுகளில் பலமுறை இவர் பங்குகொண்டுள்ளார். பணி நிமித்தமாக அடிக்கடி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பல வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இவர், ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் அங்கு தங்குவார். அந்தந்த நாடுகளின் தட்பவெப்ப நிலையை உடல் ஏற்காத சூழலிலும்கூட கடும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூ.றுகிறார்.
பணிஓய்வு பெற்றபோது தன்னுடைய மனைவி, ஒரு மகன், இரு மகள்கள், நான்கு பேரப்பிள்ளைகள் என அனைவருமே ‘இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்து களைத்துவிட்டீர்கள். இனி ஓய்வெடுங்கள்!’ என்று கூறியதாக நினைவுகூர்ந்தார். குடும்பத்தினரின் அக்கறை புரிந்தாலும் தான் உழைத்ததாக அவர்கள் கூறியதை மட்டுமே தன் மனம் ஏற்றதாகவும் களைத்துவிடவில்லை என்றும் தான் நினைத்துக்கொண்டதை எண்ணி புன்னகை பூத்தார் திரு அழகப்பன்.
பணிஓய்விற்குப் பின்னர் நண்பர்களின் ஆலோசனைப்படி கல்வி அமைச்சின் பணிகளுக்கு விண்ணப்பித்தார் இவர். இவருடைய அனுபவத்தினால் மிக எளிதாக பல வேலைகளுக்கான நேர்காணல்களில் தேர்ச்சி பெற்றார்.
பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளியின் துப்புரவு, வகுப்புத் தேவைகள் உள்ளிட்ட இதர வசதிகளின் நிர்வாகம் போன்ற பொறுப்புகளை உடைய பள்ளியின் செயல் மேலாளர் பணியே இவரைக் கவர்ந்தது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு பணியைத் தொடங்கும் இவருக்கு கீழ் ஏறத்தாழ 15 பேர் பணிபுரிகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“ஒவ்வொரு நாளும் பல மாணவர்கள் என் முன்னைய பணி அனுபவங்களை வந்து ஆர்வமுடன் கேட்டுச் செல்கிறார்கள். அவர்களுக்கு என் கதையுடன் சேர்த்து அடிப்படை வாழ்வியல் விழுமியங்களையும் முடிந்தவரை கூறி வருகிறேன். இதில் கிடைக்கும் மனநிறைவு புதிதாகவும் உற்சாகமளிப்பதாகவும் உள்ளது,” என்றும் இவர் கூறினார்.
இந்த வேலை புதிதாக இருக்கிறது என்றும் முன்பைவிட வேலைப்பளு பன்மடங்கு குறைந்துள்ளது என்றும் இவர் தெரிவித்தார். அதனால் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அதிக நேரம் செலவழிக்க முடிகிறது என்றும் இவர் பகிர்ந்துகொண்டார்.
வாரத்திற்கு மூன்று முறையேனும் உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று பயிற்சி எடுத்துக்கொள்வதை இவர் வழக்கமாக வைத்திருக்கிறார். மற்ற நாள்களில் நடைப்பயிற்சியும் யோகா போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். வயது ஏற ஏற உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று இன்றைய தலைமுறையினருக்கு அறிவுறுத்துகிறார் திரு அழகப்பன்.
இவர், தமது 40 ஆண்டுகாலப் பணிக்காக இவ்வாண்டிற்கான அரசாங்க சேவை ஆணையத்தின் பொதுச் சேவை விருது, 2022ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் தலைசிறந்த பங்களிப்பிற்கான விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
“என்னைப் பொறுத்தவரை பணி என்பது ஒருவருக்கு அன்றாட ஒழுக்கத்தை வகைப்படுத்த உதவும் கருவி. பணியின் பொறுப்புகள் நம் இருப்பை உறுதிசெய்யும். இவையே ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்” என்று திரு அழகப்பன் கூறுகிறார்.

