திருக்குறள் அறிஞர் புரூக்ஸ்மாவிடம் மொழிபெயர்ப்பு பயில அரிய வாய்ப்பு

தமிழ் மக்களே வியக்கும் அளவுக்கு தமிழில் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்க்கும் அமெரிக்க - ஜப்பானிய அறிஞர் 47 வயது தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா.

புரூக்ஸ்மாவின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறளுக்கும் தமிழுக்கும் உலகளவில் பெருமையையும் சிறப்பையும் பெற்றுத் தந்துள்ளது.

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பலதிறன் கலைஞர் என பன்முகம் கொண்ட அறிஞர் புரூக்ஸ்மா சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் முதல் உடனிருந்து பயிற்றுவிக்கும் மொழிபெயர்ப்பாளராக, இவ்வார இறுதி முதல் இங்கு மொழிபெயர்ப்பு பயிலரங்கு, உரைகள் நடத்த உள்ளார்.

திருக்குறளுக்கு பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளபோதும், திருக்குறளை உலகெங்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் பொருள் விரித்து எளிமையாகவும் கவிநயத்தோடும் இவர் செய்துள்ள மொழிபெயர்ப்பு தமிழரல்லாத இன்றைய தலைமுறை மற்ற மொழியினரையும் பரவலாகச் சென்றடைந்து வருகிறது.

அதற்கு முன் 2009ல் ‘Give, Eat and Live’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட ஒளவையாரின் மூதுரை, நல்வழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2002இல் தமது தமிழாசிரியர் முனைவர் கு.வே.இராமகோடியுடன் இணைந்து இவர் தயாரித்த ‘A Feast for the Tongue’ பேச்சுத் தமிழ்-ஆங்கில அகராதிதான் இவரது முதல் தமிழ் நூல் முயற்சி.

தற்செயலாகத் தமிழ் படித்தார்

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த புரூக்ஸ்மா 22 வயதில் தமிழ் படிக்கத் தொடங்கியது ஒரு தற்செயல்.

1998ல் இளநிலைப் படிப்பை முடித்ததும் ஸ்பானிஷ் படிக்க விரும்பிய புரூக்ஸ்மாவுக்கு அதற்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை. தமிழுக்கு உதவித்தொகை கிடைத்ததால் ஈராண்டுகள் மதுரை ‘அமெரிக்கன் கல்லூரி’யில் ஆங்கிலம் கற்பித்துக்கொண்டே தமிழ் கற்றார்.

வட அமெரிக்காவில் திருக்குறளுக்கு முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு எளிதில் கிடைக்காத குறையை நிவர்த்தி செய்ய 2016ல் திருக்குறளை மொழிபெயர்க்கத் தொடங்கினார். பல மூல நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் படித்துத் தெளிந்து, குறளைமொழிபெயர்க்க இவருக்கு ஐந்தாண்டு காலம் ஆனது.

திரு புரூக்ஸ்மாவின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘கினோகுனியா’ நூல் நிலையங்களில் கிடைக்கும். அவரிடமும் நேரில் வாங்கலாம். படம்: ‘பீக்கன்’ பதிப்பகம் (Beacon Press)

“மற்ற மொழிபெயர்ப்புகளைப் போல திருக்குறளின் கருத்தை மட்டுமின்றி, குறளின் ஓசை நயத்தையும் மொழி அழகையும் மொழிபெயர்ப்பிலும் கொண்டுவந்தால்தான் படிப்பவருக்கு ஈர்ப்பு ஏற்படும்,” என்ற நோக்கில் மொழிபெயர்ப்பைச் செய்துள்ளதாக புரூக்ஸ்மா குறிப்பிட்டார்.

மதுரை, வலையப்பட்டி கிராமத்தில் தங்கி தமிழ் பேசப் பழகிய புரூக்ஸ்மாவின் தமிழைக் கேட்கும்போது இனிக்கிறது. இலக்கியமும் சொல்வளமும் கேட்க கேட்க இனிமையாய் உள்ளது.

பேச்சுத் தமிழ் மட்டுமே கற்க விரும்பிய திரு புரூக்ஸ்மாவுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்தியவர் மதுரையில் அவருக்குத் தமிழ் சொல்லித் தந்த முனைவர் கு.வே.இராமகோடி.

திரு புரூக்ஸ்மாவின் ஒளவையாரின் மூதுரை, நல்வழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு, ‘Give, Eat and Live’ 2009ல் வெளிவந்தது. படம்: ‘ரெட் ஹென்’ பதிப்பகம், ஓவியம்: சி.எஃப்.ஜான்

குறளை மொழிபெயர்ப்பதில் எதிர்கொண்ட சவால்

மீண்டும் 2004ல் அமெரிக்க ஃபுல்ப்ரைட் கல்வி உபகாரச் சம்பளம் பெற்று, முனைவர் இராமகோடியின் வீட்டிலேயே தங்கி திருக்குறள் படித்தார்.

“திருக்குறளை யாராவது கவிநயத்தோடு மொழிபெயர்த்தால் நன்றாக இருக்குமே என்று முனைவர் இராமகோடி அடிக்கடி சொல்வார். அவர் மறைமுகமாக என்னைத்தான் குறிவைத்துச் சொல்லியிருக்கிறார் என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது,” என்றார் திரு புரூக்ஸ்மா.

“எதுகை மோனையுடன் மொழிபெயர்ப்பது கடினமாக இருந்தது. ஆனால் அப்பணியில் இருமொழிகளின் பெருமையையும் தனித்தன்மையையும் இன்னும் ஆழமாக அறிந்தேன்,” என்றார் அவர்.

இந்த மொழிபெயர்ப்பில் அவர் எதிர்நோக்கிய முக்கிய சவால், ‘தவம்’ போன்ற சொல்லின் முழு அர்த்தத்தை வெளிப்படுத்தும் சொல் ஆங்கிலத்தில் இல்லாததால் அப்பொருளை விளக்குவது.
அத்தகைய சொற்களின் பொருளை குறிப்புரையாக எழுதியுள்ளார் திரு புரூக்ஸ்மா.

சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள்

செப்டம்பர் 23 முதல் 29 வரை புரூக்ஸ்மா நடத்தும் பயிலரங்குகளில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். கட்டணம் இல்லை.

செப்டம்பர் 30ம் தேதி, சிங்கப்பூர் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கில் திரு புரூக்ஸ்மா விரிவுரை நிகழ்த்துகிறார். மேலும், வாசிப்பு, உரை நிகழ்ச்சிகளையும் அவர் ஆற்றுகிறார்.

மொழிபெயர்ப்பு பயிலரங்கிற்குப் பதிவு செய்யவும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களுக்கும்: https://www.bookcouncil.sg/sbc-academy/translation-programmes/sbc-trans…

அவரது திருக்குறள், ஒளவையாரின் கவிதை மொழிபெயர்ப்புகளையும் கவிதைகளையும் நிகழ்ச்சியில் வாங்கலாம்.

திரு புரூக்ஸ்மாவுடன் மூன்று மாத மொழிபெயர்ப்பு வழிகாட்டல் திட்டத்திற்கு சிங்கப்பூர் புத்தக மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் காண்க: https://www.bookcouncil.sg/sbc-academy/sbc-mentorships தளத்திற்குச் செல்லலாம்.

திரு புரூக்ஸ்மா பற்றி மேலும் அறிந்துகொள்ள: thomaspruiksma.com

மாயாஜாலத்துடன் கவிதை நிகழ்ச்சியை அமெரிக்காவில் வாஷிங்டனில் நடத்தினார் திரு புரூக்ஸ்மா. படம்: ஜெஃப் டன்னிக்லிஃப்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!