முகத்துக்கு அழகு தரும் உதடுகள் உடல் நலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும் திகழ்கின்றன. உதட்டின் நிறமும் தன்மையும் ஒருவரது உடல்நலத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன.
நலமான உதடுகள் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் அதாவது ரோஜா நிறத்தில், பளபளப்பாக ஈரப்பசையுடன் இருக்கும். உடல்நலம் பாதிப்படையும்போது உதட்டின் இந்த நிறமும் தன்மையும் மாறுகிறது.
வெளிறிய உதடுகள்
உதடுகள் நிறமிழந்து வெளுத்துப்போய் இருந்தால், அது ரத்த சோகைக்கான அறிகுறி. உடலில் ஹீமோகுளோபின், ரத்தச் சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் உதடுகள் வெளிறிப்போய் இருக்கும். இரும்புச்சத்து, வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.
செந்நிறம்
ஒருவரது உதடுகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிவந்து காணப்பட்டால் அவருக்கு உடல் வெப்பம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். கல்லீரலும் மண்ணீரலும் அளவுக்கு அதிகமாக வேலை செய்யும்போதும் உதடுகள் சிவந்து காணப்படும்.
பழுப்பு, சாம்பல்
பழுப்பு நிறத்திலோ அல்லது சாம்பல் நிறத்திலோ உதடுகள் இருந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்தும் அறிகுறியாகும்.
ஊதா- பச்சை நிற உதடுகள்
உதடுகள் சற்று ஊதா- பச்சை நிறத்தில் இருந்தால் அதற்கு முக்கியக் காரணம் உடலின் வெப்பநிலை சீராக இல்லாமல் இருப்பதுதான். அதிக குளிர்ச்சியான இடங்களில் உள்ளவர்களுக்கு உதடுகள் சற்று ஊதா நிறத்தில் இருக்கலாம்.
பெரும்பாலும் இம்மாதிரியான உதடுகள் குளிர்காலங்களில்தான் ஏற்படும். ஆனால், உதடுகள் தொடர்ந்து ஊதா-பச்சை நிறத்தில் இருந்தால், உடலில் ஏதோ பிரச்சினை உள்ளது என்று அர்த்தம். குறிப்பாக இதயப் பிரச்சினைகள் அல்லது சுவாசப் பிரச்சினைகளைக் குறிக்கிறது. உதடுகள் இந்த நிறத்தில் இருந்தால் உடனே மருத்துவரைக் காண வேண்டும்.
ஒமேகா3 சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கும் உதடுகள் கொஞ்சம் நீல-ஊதா நிறமாக இருக்கும். ஒமோகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
தொடர்புடைய செய்திகள்
கருமை
உதடு கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உதடு கருமையாக இருக்கும். அதேபோல அதிகம் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் உதடு கருமையாக இருக்கும்.
கறுப்பு நிறத்தில் உதடுகளைக் கொண்டவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
உதடுகளைச் சுற்றி ஏதோ கறுப்பு நிறக் கோடு புதிதாக ஏற்பட்டிருந்தால், உடல் சமநிலையில் இல்லை என்று பொருள். அதாவது ஒரே நேரத்தில் மிகுந்த குளிராகவும், மிகுந்த வெப்பத்தை உணரக்கூடும். மிகவும் காரமான, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
வறட்சி, வெடிப்பு
உதடுகள் வறட்சியாகவும் வெடிப்புடனும் இருந்தால், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை, நீர்ச்சத்துக் குறைபாட்டின் முக்கியமான அறிகுறியாகும்.
வெடிப்பு
உதடு முழுமையும் வெடிப்போடு இல்லாமல் உதட்டின் இரண்டு ஓரங்களிலும் வெடிப்புகள் இருக்கும். இது வைட்டமின் பி12 ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகளில் ஒன்றாகும்.
அன்றாட உணவில் வைட்டமின் பி12 நிறைந்த முட்டை மஞ்சட்கரு, கீரைகள், பாலாடைக்கட்டி போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது பலன் தரும்.