‘மொழிபெயர்ப்புத் தேவை என்றும் இருக்கும்’

3 mins read
68d79457-abcf-42a4-b90a-a349f3bd8ab1
சனிக்கிழமை தி ஆர்ட்ஸ் ஹவுசில் நடைபெற்ற சிங்கப்பூர் மொழிபெயர்ப்பு கருத்தரங்கில் தலைமை உரையாற்றிய அமெரிக்க அறிஞர் தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா. - படம்: சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு மன்றம்

மொழிபெயர்ப்பு என்பது ஒரு சொல்லின் அல்லது சொற்றொடரின் பொருளை மட்டும் மொழிபெயர்ப்பது மட்டுமல்ல. மூலச் சொல்லின் சரியான பொருளுடன் அச்சொல்லின் ஓசையும் நயமும் அம்மொழியின் பயன்பாடும் மாறாமல் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

அப்படிச் செய்யும்போதே மூல மொழியில் இடம்பெற்றுள்ள செய்தியும் அதன் அழகும் மற்ற மொழிக்குக் கடத்தப்படும். அதுவே மொழிபெயர்ப்பை அர்த்தமுள்ளதாகவும் வாசிக்க இனிமையானதாகவும் ஆக்குகிறது. புதிய மொழிக்கும் வளம் சேர்க்கிறது.

மொழிபெயர்ப்பின் நோக்கம் இதுவாகவே இருக்கவேண்டும்.

மொழிபெயர்ப்பு மொழிகளுக்கு வளம் சேர்க்கிறது. வெவ்வேறு மொழிப் பிரிவினருடனான உரையாடல்களையும் புரிதல்களையும் வளர்க்கிறது.

சிங்கப்பூர் மொழிபெயர்ப்பு கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் இவை.

சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் 30, அக்டோபர் 1ஆம் தேதிகளில் ஆர்ட்ஸ் ஹவுசில் ஆண்டு மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

‘உலகளவிலான உரையாடல்கள்: மொழிபெயர்ப்பும் பாட்டுக் கற்பனைத் திறனும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார் அமெரிக்க அறிஞர் தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா.

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பலதிறன் கலைஞர் என பன்முகம் கொண்ட அறிஞர் புரூக்ஸ்மாவின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறளுக்கும் தமிழுக்கும் உலகளவில் பெருமையையும் சிறப்பையும் பெற்றுத் தந்துள்ளது.

தமிழ், ஸ்பானிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு ஆக்கங்களைச் செய்திருக்கும் திரு புரூக்ஸ்மா, எழுத்தாளராகவும் கவிஞராகவும் பரிணமிக்க மொழிபெயர்ப்பு எவ்வாறு உதவியது என்பதை பகிர்ந்துகொண்டார்.

ஔவையார் இன்றளவும் தனக்கு ஆசானாக விளங்குவதாகக் கூறிய அவர், திருக்குறளில் செய்யுள் சிறப்பும் மொழி அழகும் ஓசை நயமும் தன்னை எப்படி கவிஞனாக்கியது என்பதை விவரித்தார்.

வள்ளுவரின் சொல்லுக்கு ஈடான சொல்லைத் தேடும் பயணத்தில் தனது சொல்வளம் பெருகியது என்றார்.

குறளின் சொற்கட்டையும் ஓசையையும் அப்படியே ஆங்கிலத்தில் கொண்டுவர, தாம் மேற்கொண்ட முயற்சியை எடுத்துரைத்தார்.

குறளைப் பாட முடிவதுபோல், அதன் மொழிபெயர்ப்பும் பாடக்கூடியதாக இருக்க வேண்டும் என்று வேண்டும் என்று சிந்தித்து சிந்தித்து தாம் ஆக்கிய மொழிபெயர்ப்பு பற்றிப் பேசினார்.

சொற்களுக்கு இடையே உள்ள எல்லைகளை இசைவரிகளுக்கான கற்பனை மீறும்போது உண்டாகும் அழகையும் பொருட்செறிவையும் எடுத்துக்கூறினார். குறளையும் அதன் மொழி பெயர்ப்பையும் பாடிக்காட்டினார்.

கவிதை மொழிபெயர்ப்பில் மொழியின் ஓசையைக் கொண்டு வருவது முக்கியம் என்றார் திரு புரூக்ஸ்மா.

இசையும் மாயாஜாலமும் மொழிச் சிந்தனையும் நிறைந்த விருந்தாக மொழிபெயர்ப்புக் கருத்தரங்கை முன்னிட்டு திரு புரூக்ஸ்மா சனிக்கிழமை நிகழ்த்திய உரையும் முன்னதாக அவர் படைத்த உரை, வாசிப்பு நிகழ்வுகளும் அமைந்திருந்தன.

மூல மொழியின் கூறுகளுடன் மொழிபெயர்ப்பு

சனிக்கிழமை இடம்பெற்ற இலக்கிய இதழ்களில் மொழிபெயர்ப்புக்கான இடம் குறித்த கலந்துரையாடலில் இயோ காய் சாய், கோபிகா ஜடேஜா, ஷெல்லி பிரையன்ட் ஆகியோர் பேசினர்.

இதழ்கள் தகுந்த மொழிபெயர்ப்புகளுக்கு இடமளிப்பதாக கூறிய ‘பரோட்டா’ இதழின் கோபிகா ஜடேஜாவும் இயோ காய் சாய் ஆகிய இருவரும் தங்கள் இதழில் மொழிபெயர்ப்பு இடமளிப்பது பற்றிக் கூறினர்.

மற்ற மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதுடன், சீனம்- தமிழ் போன்ற மற்ற மொழிகளுக்கு இடையிலான மொழிபெயர்ப்புகளுக்கும் அதிகம் இடம்பெற வேண்டும் என்ற கருத்து இக்கருத்தரங்கில் முன் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, விளிம்புநிலை மக்களின் இலக்கியங்களை முக்கிய மொழிகளில் மொழிபெயர்ப்பது பற்றிய கலந்துரையாடலில் அல்வின் பாங், கோபிகா ஜடேஜா இருவரும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

குஜராத் மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் கோபிகா ஜடேஜா விளிம்புநிலை மக்களின் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதன் அவசியம் குறித்துப் பேசினார்.

மேலும், மற்ற மொழிகளின் கூறுமுறைகளைப் பயன்படுத்துவதால் ஆங்கிலம் வளம் பெறுகிறது என்றும் அவர் சொன்னார்.

நல்ல மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பு போல் இருக்கக்கூடாது என்பது சரியல்ல. அதில் மூல மொழியின் தன்மை தெரியவேண்டும் என்பது அவரது கருத்து.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனித மொழிபெயர்ப்பின் தேவை குறையாது

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் பங்கு குறித்துப் பேசிய எஸ்யுஎஸ்எஸ் சூசன் ஸு யுன், மனித மொழிபெயர்ப்புக்கு என்றைக்குமே தேவையிருக்கும் என்று கூறினார்.

இயந்திர மொழிபெயர்ப்பு மனித மொழிபெயர்ப்புக்கு ஈடாகாது என்ற அவர், மொழிபெயர்ப்புக்கு என்றைக்குமே தேவையிருக்கும் என்று குறிப்பிட்டார்.

மொழிபெயர்ப்பு கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமையும் ஆர்ட்ஸ் ஹவுசில் நடைபெறுகிறது.

திரு புரூக்ஸ்மா 2024 பிப்ரவரி முதல் மே 2024 வரை இணைய வழிகாட்டல் திட்டத்திலும் பங்கேற்று, வளர்ந்துவரும் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆதரவும் வழங்குவார். இதற்கான பதிவு வரும் நாட்களில் தொடங்கும்.

இந்த வழிகாட்டல் திட்டத்தில் பதிந்துகொள்ளவும் மேல்விவரங்களுக்கும் காண்க: https://www.bookcouncil.sg/sbc-academy/sbc-mentorships

குறிப்புச் சொற்கள்