விழாக்கோலம் பூண்ட இந்திய மரபுடைமை நிலையம்

விழாக்கோலம் பூண்ட இந்திய மரபுடைமை நிலையம்

2 mins read
c74e819d-0b45-4e4d-bc45-768f0ed854c4
‘டமரு சிங்கப்பூர்’ குழுவினர் பறை வாசிக்க, கூட்டம் திரண்டது. கூடியிருந்த மக்களில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட பத்துப் பேரை அழைத்து இலவசப் பயிற்சி வழங்கி, பின்னர் மாலை 5.40 மணிக்கு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அவர்களையும் ஒன்றிணைத்தனர். ‘டமரு’ குழுவினர் ஒவ்வொரு ஞாயிறும் பயிற்சி செய்து புதியவர்களுக்குக் கற்றும் தருகின்றனர். - படம்: ரவி சிங்காரம்

இந்திய மரபுடைமை நிலையத்தின் இவ்வாண்டுக்கான தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.

அவ்வகையில், இம்மாதம் சனிக்கிழமை அக்டோபர் 14 காலை முதல் மாலைவரை பல நிகழ்ச்சிகள் இந்திய மரபுடைமை நிலையத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலும் நடைபெற்றன.

அடுத்த நான்கு வார இறுதிகளில், தீபாவளிவரை வெவ்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து களைகட்டவுள்ளன.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஏற்பாடு செய்திருந்த தீபாவளிப் புதையல் வேட்டை சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. அணிக்கு இருவரென அனைத்து வயதினரும் பங்குபெற்ற நிகழ்ச்சியாக இடம்பெற்றது. முதல் பரிசாக $150, இரண்டாம் பரிசாக $100, மூன்றாம் பரிசாக $50 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அடுத்த புதையல் வேட்டை அக்டோபர் 28ஆம் தேதியன்று இடம்பெறும். பதிவுசெய்ய: https://event.deepavali.sg/

தீபாவளிப் புதையல் தேடல்.
தீபாவளிப் புதையல் தேடல். - படம்: ரவி சிங்காரம்

காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிவரை சிறுவர்களுக்கென கதை சொல்லுதலோடு, லட்டு உருட்டுதல் பயிலரங்கு நடைபெற்றது.

14 வயதுக்கு மேற்பட்டோருக்குக் காலையில் லிட்டில் இந்தியா உணவுநடையும் இடம்பெற்றது.

சிண்டா ‘புரோஜெக்ட் கிவ்’வுடன் ‘ஓம்கார் கலைகள்’, சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம், டமரு சிங்கப்பூர், களரிப் பயிலகம் ஆகியவை இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளியே கோலாகலமாக நிகழ்ச்சிகளை வழங்கின. அவற்றைக் காண கூட்டம் வெகுவாகத் திரண்டது.

சுவையான சைவ பிரியாணி சமையல் பயிலரங்கில் தமிழரும் பிற இனத்தவரும் கலந்துகொண்டு இந்தியச் சமையலின் சுவையை அறிந்துகொண்டனர். 
சுவையான சைவ பிரியாணி சமையல் பயிலரங்கில் தமிழரும் பிற இனத்தவரும் கலந்துகொண்டு இந்தியச் சமையலின் சுவையை அறிந்துகொண்டனர்.  - படம்: ரவி சிங்காரம்

இந்திய மரபுடைமை நிலையத்தில் சமையற்கலை நிபுணர் தேவகி சண்முகம் நடத்திய சைவ பிரியாணி சமையல் பயிலரங்கும் சிறப்பாக நடைபெற்றது. தமிழரும் பிற இனத்தவரும் கலந்துகொண்டு இந்திய சமையலின் சுவையை அறிந்துகொண்டனர்.

ஞாயிறு அக்டோபர் 15, இந்திய மரபுடைமை நிலையத்தில் காலை 11 மணிக்கு ஆனந்த் வழங்கிய தோசை சட்னி சமையல் பயிலரங்கும், 1 மணிக்கு முறுக்குப் பயிலரங்கும் நடைபெற்றன.

நிலையத்தின் வெளியே நாட்டியரஞ்சினி நடனப் பள்ளி, இந்திச் சமூகம், தெலுங்கு சமாஜம் ஆகியவை சிண்டாவுடன் இணைந்து நிகழ்ச்சிகள் படைத்தன. சிண்டா ‘புரோஜெக்ட் கிவ்’ சாவடியில் பல நடவடிக்கைகளும் நடைபெற்றன.

மக்கள் கழக நற்பணிப் பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசகர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, பிற்பகல் சிண்டா ‘புரோஜெக்ட் கிவ்’ சாவடிக்கு வருகையளித்துச் சிறப்பித்தார்.

சிங்கப்பூர் மலையாளிச் சங்கக் குழுவினர்.
சிங்கப்பூர் மலையாளிச் சங்கக் குழுவினர். - படம்: ரவி சிங்காரம்

இந்திய மரபுடைமை நிலையத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் 5 மணிவரை வண்ணம் தீட்டுதல், தீபம் அலங்கரித்தல் போன்ற கைவினை நடவடிக்கைகளும் இலவச அன்பளிப்பு உறை வழங்குதலும் நடைபெறும். முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணிவரை இலவச முறுக்குகளும் வழங்கப்படும்.

இந்திய மரபுடைமை நிலையத்தின் மற்ற நிகழ்ச்சிகளுக்குப் பதிவுசெய்ய: https://ihc deepavaliopenhouse.peatix.com/

குறிப்புச் சொற்கள்