இந்தியாவின் முன்னாள் அதிபரும் தலைசிறந்த அறிவியல் வல்லுநருமான டாக்டர் அப்துல் கலாமின் 92வது பிறந்தநாளையொட்டி, இம்மாதம் 15ஆம் தேதி ஞாயிறு மாலை, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிறப்புப் பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இது அவ்வமைப்பின் 123வது பட்டிமன்றம்.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார்.
‘கலாம் ஐயாவின் பெரும்புகழுக்குக் காரணம் அறிவியல் சாதனையா? மனிதாபிமானப் பண்பா?’ என்பதே பட்டிமன்றத்தின் தலைப்பு. நகைச்சுவை நாவலர் புலவர் இரெ.சண்முகவடிவேல் பட்டிமன்றத்தின் நடுவராகச் சிறப்பித்தார்.
“எல்லாருக்கும்தான் மனிதாபிமானம் உள்ளது. அனைவராலும் அறிவியல் சாதனை படைக்க முடியுமா?” என்ற கேள்வியுடன் வாதத்தைத் தொடங்கினார் முத்துக்குமார் மகிஷா.
“‘எத்தகைய சூழ்நிலையிலிருந்து வந்தாலும் திறனிருந்தால் சாதிக்கமுடியும்’ என அறிவியல் சாதனைகளால் நிரூபித்தவர் டாக்டர் கலாம்,” என அடுக்கினார் கண்ணன் வைஷ்ணவி.
“உலகத்தினர் இந்தியாவை வல்லரசாக மதிக்கச் செய்த அறிவியல் சாதனைகளுக்கே டாக்டர் கலாம், பாரத ரத்னா, பத்மபூஷன் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்,” என வாதத்தை முடித்தார் அணித் தலைவர் முனைவர் இரா.அன்பழகன்.
ஆனாலும், அவர்களது வாதங்களை ஏற்காமல் எதிரணியினர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மனிதாபிமானப் பண்புதான் டாக்டர் கலாமின் பெரும்புகழுக்குக் காரணம் என்ற அணி சார்பில் பேசிய காமேஷ்வரன், தம்முடைய வாகன ஓட்டுநரைப் பேராசிரியராக உயர வித்திட்ட அவரது மனிதாபிமானத்தைச் சுட்டினார் .
சமயங்களைக் கடந்தவர், மரம் நடும் இயக்கத்தைத் தொடங்கியவர் என டாக்டர் கலாமின் பெருமைகளை அடுக்கினார் தக்ஷினி முத்துகுமார்.
அணித்தலைவர் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அறிவியலைச் சரியான பாதையில் இட்டுச் சென்றது டாக்டர் கலாமின் மனிதாபிமானமே என்றார்.
“மனிதன் இல்லையென்றால் சாதனை யாருக்காக?” என ஆணித்தரமாக அவர் முடித்துவைத்தார்.
‘பல சாதனைமிக்க அறிவியலாளர்களும் குடியரசுத் தலைவர்களும் இருந்தாலும், மக்களோடு மக்களாய் ஒன்றிணைந்து புகழ்பெறச் செய்தது டாக்டர் கலாமின் மனிதப் பண்பே,” என தீர்ப்பு வழங்கினார் புலவர் சண்முகவடிவேல்.
இம்மாதம் 16ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு சந்திர மஹாலில் புலவர் சண்முகவடிவேலுடன் ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது.

