தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவால்களை வென்று சாதனை படைத்தவர்

2 mins read
c16d797c-efd6-4f50-bb7e-b813923bfc07
எஸ்ஐடியில் மின்னாற்றல் பொறியியல் படிப்பில் இவ்வாண்டு தலைசிறந்த மாணவரான பாலகணேஷ், 27, தன் குடும்பத்தினருடன். - படம்: சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
multi-img1 of 2

சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (எஸ்ஐடி), அக்டோபர் 12ஆம் தேதி நடத்திய பட்டமளிப்பு விழாவில் இரு விருதுகளைப் பெற்ற பாலகணேஷ், 27, தோல்விகளைக் கண்டு துவளாமல் முயன்று சாதித்துள்ளார்.

இவர், எஸ்ஐடியும் நியூகாசல் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கிய மின்னாற்றல் பொறியியல் படிப்பில் உயர் தேர்ச்சியுடன் கௌரவநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.

இவ்வாண்டின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கான எஸ்ஐடி-கெப்பல் தங்கப் பதக்கத்தையும் மின் இயந்திர வகுப்பில் முதல் நிலைக்கு சிங்கப்பூர் ஆலோசனைப் பொறியாளர் சங்கம் வழங்கிய புத்தகப் பரிசையும் பெற்றார் பாலகணேஷ்.

இவற்றை அடையும் பாதையில் இவர் சந்தித்த சவால்கள் ஏராளம்.

கரடுமுரடான கல்விப் பயணம்

சிறு வயதில் படிப்பின்மீது நாட்டம் கொள்ளாததால் இவரது உயர்நிலைப் பள்ளிப் பருவம் ஆறாண்டுகளுக்கு நீடித்தது. ஒருநாள் சண்டையில் ஈடுபடும் அளவிற்கு வாழ்க்கை தடம்புரண்டது. அப்போது தெளிவடைந்த பாலகணேஷ், குடும்பப் பொறுப்புகளை ஏற்க முடிவெடுத்தார்.

உயர்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியரை முன்னுதாரணமாகக் கொண்டு, சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின், மின்னணுப் பொறியியல் பயின்றார்.

அதைத் தொடர்ந்து, தேசிய சேவை. சிங்கப்பூர்க் கடற்படையில் மின், கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு நிபுணராக, ‘சார்ஜன்ட்’ பதவியில் பணியாற்றினார்.

பட்டப்படிப்புக்கு, தொழில்துறையை மையமாகக் கொண்ட எஸ்ஐடியின் ஒன்றிணைந்த வேலைப் படிப்புச் செயல்திட்டத்தில் சேர்ந்தார்.

முதலாம் ஆண்டில் எஸ்ஐடி ‘கேகேஎச்’ உபகாரச் சம்பளத்தைப் பெற்ற இவர், இரண்டாம் ஆண்டில் சிங்கப்பூர்த் தொழில்துறை இடைக்கால உபகாரச் சம்பளத்தை ‘என்ஜி தென்கிழக்காசியா’ நிறுவனத்திடமிருந்து பெற்றார்.

சிங்கப்பூர்த் தொழில்துறை இடைக்கால உபகாரச் சம்பளப் பரிசளிப்பு விழாவில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்குடன் பாலகணேஷும் அவர் தாயாரும் (வலது).
சிங்கப்பூர்த் தொழில்துறை இடைக்கால உபகாரச் சம்பளப் பரிசளிப்பு விழாவில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்குடன் பாலகணேஷும் அவர் தாயாரும் (வலது). - படம்: என்ஜி தென்கிழக்காசியா

இதர சில நிறுவனங்களில் வாய்ப்புகள் கிடைத்தாலும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியிலும் நீடித்த நிலைத்தன்மையிலும் அதிக ஆர்வம் இருந்ததால் ‘என்ஜி’ நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தார் பாலகணேஷ்.

கல்வி மட்டுமே வெற்றிக்கான பாதை அன்று

பாலகணேஷின் வெற்றிக்கு அவர் பெற்ற பலதரப்பட்ட அனுபவங்களும் காரணம் என்றால் மிகையில்லை.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிர்காப்பாளர்க் குழு, நடனக்குழு, இந்திய கலாசார மன்றம் போன்றவற்றில் உறுப்பினராக இருந்தார்.

அதன்பின், ‘கிரேப்’/’ஊபர்’ வாகனம் ஓட்டினார். பட்டப்படிப்பின்போது நிதி ஆலோசகராகவும் பணியாற்றினார். எஸ்ஐடி இந்திய கலாசார மன்றத்தைத் தம் இரண்டாம் ஆண்டில் சக மாணவர்களுடன் நிறுவினார்.

சிண்டாவில் தற்போது தொண்டூழியராகப் பணியாற்றிவருகிறார். சிண்டா விளையாட்டுத் திட்டம் (ஸ்பின்) 2017ல் தொடங்கி, இளையர்களுக்கான தலைமைத்துவத் திட்டங்களிலும் முகாம்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

சிண்டா பாராட்டுவிழா 2023ல் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா மற்றும் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரனிடமிருந்து பரிசு பெறும் பாலகணேஷ் (வலது).
சிண்டா பாராட்டுவிழா 2023ல் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா மற்றும் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரனிடமிருந்து பரிசு பெறும் பாலகணேஷ் (வலது). - படம்: சிண்டா

எஸ்ஐடி பட்டக் கல்வியின் முதலாம் ஆண்டு நிறைவில் இவருக்குத் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து கணவன், மகன், தொண்டூழியர், செயற்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை வெற்றிகரமாகச் சமாளித்துவந்துள்ளார்.

‘கொவிட்-19’ தொற்றுக்காலத்தில் பாலகணேஷ் தன் மனைவியுடனும் அண்ணனோடும் சேர்ந்து ‘நாசி லமாக்’ இல்லம் சார்ந்த வணிகத்தையும் நடத்தினார்.

குடும்பத்தில் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்துக்கும் சென்ற முதல் உறுப்பினர் இவர்தான். தன் வெற்றிகளுக்குக் குடும்பத்தினர், நண்பர்கள், கல்வி நிலையங்கள் அளித்த ஆதரவைக் காராணமாகச் சுட்டுகிறார்.

“எஸ்ஐடி விரிவுரையாளர்கள் வார இறுதிகளில்கூட பாடச் சந்தேகங்களைத் தீர்த்துவைத்துத் துணைபுரிந்தனர்,” என்றார் பாலகணேஷ்.

குறிப்புச் சொற்கள்