உள்ளூர்க் காற்பந்து ரசிகர்களின் கதைகளை உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்திய ‘காக்கி போலா’ தொலைக்காட்சி நாடகத் தொடருக்கு நான்காவது அனைத்துலக விருது கிடைத்துள்ளது.
செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்பட்ட ஆசிய கலைக்கழக புத்தாக்கத்திற்கான விருதுகளில் ‘சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை ‘காக்கி போலா’வில் நடித்த யுவராஜ் கிருஷ்ணசாமி வென்றார்.
டிசம்பர் 7ஆம் தேதி நடக்கவிருக்கும் மாபெரும் இறுதிச் சுற்றில் அவர் தலைசிறந்த நகைச்சுவை நடிகர் விருதுக்குப் போட்டியிடுவார்.
இதற்கு முன்பு, நியூயார்க் திரைப்பட விருதுகள் 2023ல் சிறந்த முன்னோடித் தொடர், ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு விருதுகள் 2023ல் சிறந்த தொடர் தயாரிப்பு (சிங்கப்பூர்), ஜெர்மனியின் உலக ஊடக விழா 2023ல் தங்கம் ஆகிய விருதுகளைப் பெற்றது ‘காக்கி போலா’.
‘மில்லெனியா மோஷன் பிச்சர்ஸ்’ வழங்கிய நாடகம் ‘காக்கி போலா’, 13 பாகத் தொடராக, ‘சூரியா’ மலாய் ஒளிவழியில் ஒளிபரப்பப்பட்டது. எனினும், மலாய் மொழி மட்டுமன்றி தமிழ், ஆங்கில வசனங்களும் அதில் இடம்பெற்றன.
புகழ்பெற்ற உள்ளூர்க் காற்பந்தாளர்களின் பெயர்களைக் கொண்ட இருவர், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திக்கும்போது நடக்கும் சம்பவங்களை இந்நாடகம் விவரிக்கிறது.
‘காக்கி போலா’ நாடகம் இயக்குநரான யாசிர். எம், 39, தீவிர காற்பந்து ரசிகர். 1990களில் சிங்கப்பூர்க் காற்பந்து ரசிகர்களின் உணர்வுகளைத் தன் நாடகம்வழி வெளிக்கொணர அவர் விரும்பினார்.
நாடகத் தொடரை https://www.mewatch.sg/show/Kaki-Bola-327093 தளத்தில் காணலாம்.
தொடர்புடைய செய்திகள்
யாசிர்.எம் இயக்கத்தில், மாயா நடன அரங்கு வெளியிட்ட ‘வாடிவரும் பூ’ குறும்படம், ஜப்பானில் அக்டோபர் 14, 15ஆம் தேதிகளில் நடந்த ‘நடனத்தில் பெண்மணிகள்’ விழாவிலும் இடம்பெற்றது. இதைக் காண: https://www.youtube.com/watch?v=Kh3sa8IKLxI


