தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொரு மொழியினரும் ஒவ்வொரு காரணமும் சடங்குகளும் கொண்டுள்ளனர். தமிழர்களைப் பொறுத்தமட்டில், தீபாவளி ஓர் ‘எண்ணெய் நீராடல்’ திருநாள்.
‘நீராடல்’ தமிழ்ச் சமூகத்தின் ஓர் அங்கமாகவே இருந்திருக்கிறது. மார்கழி நீராடல், தை நீராடல், வைகை நதியில் புதுப்புனல் ஆடிய மகளிர், வெண்கடுகை அப்பி எண்ணெய் தேய்த்து நீராடும் மகப்பேறுற்ற மகளிர், கடல் நீராடும் பரதவ மகளிர், சுனையில் நீராடிய குறிஞ்சி நில மகளிர் என சங்க காலம் தொட்டே நீராடல் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.
உடல் தூய்மையோடு, ரத்த ஓட்டம் சீராக்கம் உள்ளிட்ட நலவாழ்வு நோக்கில் செய்யப்படும் எண்ணெய் நீராடல், அருவி நீராடல், கடல் நீராடல், இன்று மறுவடிவம் பெற்று வெப்பக் குளியல், நீராவிக்குளியல், மூலிகைக் குளியல் எனப் புழக்கத்தில் இருந்து வருகின்றன.
இவ்வகையில் தீபாவளியும் எண்ணெய் நீராடலுடன் தொடர்புடைய பண்டிகை. அதற்கென ஒரு முறை வகுக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.
எண்ணெய்க் குளியல்
நல்லெண்ணெய்யில் ஒரு வெற்றிலை, சிறிதளவு மிளகு, சீரகம், ஒரு பல் வெள்ளைப் பூண்டு சேர்த்து மிதமான தீயில் காய்ச்சி எடுத்து, வெதுவெதுப்பாகத் தலை முதல் கால் வரை தேய்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், சீயக்காய்த் தூளுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தண்ணீர்விட்டுக் கலந்து தேய்த்துக் குளிக்க வேண்டும்.
எண்ணெய்க் குளியலுக்கு மிதமான வெந்நீர் சிறந்தது.
தீபாவளி லேகியம்
எண்ணெய்க் குளியலைப் போலவே தீபாவளியின் மற்றொரு சிறப்பம்சம் இந்த தீபாவளி லேகியம். எண்ணெய்க் குளியல் முடித்த கையுடன் ஓர் உருண்டை தீபாவளி லேகியம் உண்பது பண்டிகைக்குச் சிறப்பான ஒரு தொடக்கம்.
தொடர்புடைய செய்திகள்
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் உண்ணப்படும் எண்ணெய்ப் பலகாரங்கள், கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள், செரிமானக் கோளாறு உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அவற்றிலிருந்து உடலை மீட்கும் அருமருந்து இந்த லேகியம்.
தேவையான பொருள்கள்
மிளகு - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி - 1.5 தேக்கரண்டி
ஓமம் -1.5 தேக்கரண்டி
கண்டந்திப்பிலி - 5-6 குச்சிகள்
அரிசித்திப்பிலி - சிறிதளவு
சுக்கு - சிறிய துண்டு
ஏலக்காய் (தேவைப்பட்டால்)
வெல்லம் - 50-60 கிராம்
நெய் - தேவையான அளவு
செய்முறை
வெல்லம், நெய், ஏலக்காய் தவிர மற்றப் பொருள்களைத் தண்ணீர் ஊற்றி ஆறு மணி நேரம் ஊறவிட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, அதைச் சட்டியில் சேர்த்து கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் இப்பொழுது ஏலக்காய் பொடி சிறிது சேர்க்கலாம்.
அடிகனமான ஒரு சட்டியை எடுத்து, அரைத்த மருந்து கலவை சேர்த்து, அதை மூடும் அளவுக்கு நீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
அதில் வெல்லப்பாகைச் சேர்த்து, விடாமல் கிளறவும். திரண்டு வரும்பொழுது சிறிது சிறிதாக நெய் சேர்த்து சட்டியில் ஒட்டாமல் லேகியம் பதத்துக்கு வரும்பொழுது அடுப்பை அணைத்துவிடவும்.
தேவைப்பட்டால் தீயை அணைத்த பின்பு சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

