தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளிச் சந்தையில் பலகாரங்கள் பலவிதம்

2 mins read
fa4394ae-784e-4ba2-bf85-a4567eb55dee
பலகாரக் கடைகள். - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 3

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மக்கள் பெரும்பாலும் வீட்டில் தயாரிப்பதைவிட கடைகளுக்குச் சென்று பலகாரங்கள் வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர்.

இந்நிலையில், லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளிச் சந்தையில் இயங்கிவரும் பலகாரக் கடைகளில் கடைக்காரர்கள், விலையேற்றத்தின் மத்தியில் புதுமையான வடிவில் பலகாரங்களை இம்முறை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

‘சதீஷ் டிரேடிங்’ பலகாரக் கடையில் காலை முதல் மாலை வரை வாடிக்கையாளர் கூட்டம் குறைவதே இல்லை. மூவகை பலகாரங்களை வாங்க விரும்புவோர் அக்கடையில் $10க்கும் குறைவாகச் செலுத்துகின்றனர்.

கடையில் பணிபுரியும் ஊழியரான ரமேஷ் ஐயம்பெருமாள், 43, “தீமிதித் திருவிழாவுக்குப் பிறகு எங்கள் கடையில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. நாங்கள் மலிவான விலையில் பலகாரங்களை விற்பதால் வாடிக்கையாளர்கள் அதிகம் வருகிறார்கள்,” என்று தெரிவித்தார்.

‘ஆர்டபிள்யூ செல்மோர்’ பலகாரக் கடையில் அதிகம் விற்கப்படுவது வடஇந்திய பலகாரங்களான பாணி பூரி, பாவ் பஜ்ஜி, சமோசா போன்ற வகைகளாகும். இதனால் வடஇந்திய வாடிக்கையாளர்களும் சுற்றுப்பயணிகளும் அங்கு அதிகம் வருகை அளிக்கின்றனர்.

“சென்றாண்டை ஒப்புநோக்க இவ்வாண்டு வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதைக் காண முடிகிறது. தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் மேலும் அதிகமானோர் வருகை புரிவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார் அங்கு பணியாற்றும் ஊழியர் ராஜகோபால், 29.

‘பாவாஸ் டெலிகசி’ கடையில் விற்கப்படும் பலகாரங்களில் சில, முட்டை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டவை. முட்டை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பலகாரங்களும் முட்டையுள்ள பலகாரங்களும் ஒரே விலையில் விற்கப்படுகின்றன.

தீமிதித் திருநாளுக்கு முன்பு பக்தர்கள் பலர் முட்டை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்ட பலகாரங்களை அதிகம் வாங்கியதாகக் கடையில் பணிபுரியும் ஊழியர் பானு, 38, கூறினார். அதோடு, வியாபாரம் சற்று மந்தமாக இருந்தாலும் கடையில் தனித்துவமிக்க இனிப்பு வகைகளும் விற்கப்படுவதால் வியாபாரம் சில நாள்களில் சூடுபிடிக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் பானு.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்