பாரம்பரியத்தில் நவீனத்தை புகுத்தி அசத்தும் பெண்கள்

3 mins read
c80f6a32-881d-4338-aa4a-a529a0d49a87
மேற்கத்திய பாணி கலவையில் ஜொலிக்கும் பாரம்பரியச் சேலைகள். - படம்: தப்லா

வீட்டை அழகுபடுத்துவது, புதுத் துணிகள் வாங்குவது, பலகாரங்கள் தயாரிப்பது என தீபாவளிப் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழரின் பாரம்பரிய உடையான சேலையை நவீன வடிவமைப்புடன் கலந்து, இந்த தீபாவளிக்குத் தயாராகி வருகின்றனர் பெண்கள்.

கால் சட்டைகளுடன் அணியப்படும் மேலாடையை சேலைகளுடன் அணிவது, சேலையுடன் பெரிய குளிர் கண்ணாடிகள் அணிவது, சேலையுடன் ‘பெல்ட்’ எனும் இடுப்பு பட்டி அணிவது, பிரகாசமான நிறங்களில் விதவிதமாக கைப்பைகள் வைத்துக் கொள்வது, ‘ஸ்னீக்கர்கள்’ என்றழைக்கப்படும் காலணிகளை அணிவது என பாரம்பரியத்தில் புதுமையைப் புகுத்தி வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய ‘அக்ஷா வீவ்ஸ்’ துணிக்கடை உரிமையாளர் திருமதி ஜெசிகா பார்த்திபன், “கோவில் போன்ற இடங்களுக்குச் செல்லும்பொழுது சேலை அணிவதும், குழுவாகச் சேர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபடும்பொழுது நவீனமாகவும், தனித்துவமாகவும் இருப்பதும் வழக்கமானது. பண்டிகைக் காலங்களில் இவ்விரண்டும் நடைபெறுவதால், இரண்டையும் இணைத்தவாறு உடை அணிவது ஒரு தனி அழகியல் தான்” என்கிறார்.

மேலும் அவர், முன்பெல்லாம் சேலைகளில் வெறும் தங்கம், வெள்ளி நிறங்களில் இருந்த அலங்காரங்கள் தற்பொழுது புது வடிவம் பெற்று, ‘ரோஸ் கோல்ட்’ எனப்படும் சிவப்பேறிய தங்க நிறம், செம்பு உள்ளிட்ட நவீன ரக அலங்காரங்களுடன் வருகின்றன என்கிறார்.

எப்பொழுதுமே பெண்கள் வித விதமான புதிய அலங்கார முறைகளை சோதித்துப் பார்ப்பதை அதிகம் விரும்புவதாகக் கூறும் ஒப்பனைக் கலைஞர் சாந்தினி சாஹு, தற்பொழுது பெண்கள் தங்கள் இயல்பான தோற்றத்தை சற்றே மெருகேற்றிக் காட்டும் வகையிலான ஒப்பனைகளை அதிகம் விரும்புவதாகக் குறிப்பிடுகிறார்.

கொண்டாட்ட காலங்களில் பெண்கள் அழகைத் தாண்டி வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர் என்று குறிப்பிட்ட கதக் நடனக் கலைஞரும் ஆசிரியையுமான ஷைலி பட்குல், பெண்கள் கொண்டாட்டங்களில் சமரசம் செய்து கொள்ளாமல் பங்கெடுக்க ஏதுவாகவே தளர்வான சட்டை, காலணிகள், குளிர் கண்ணாடி போன்றவற்றை சேலையுடன் அணிவதாகக் கூறுகிறார்.

‘ஆக்‌ஷன் ரிப்ளை’ எனும் பொழுதுபோக்கு நிறுவன உரிமையாளரான திருமதி அனு சம்தானி, “சேலை, பெண்களின் தன்னம்பிக்கையைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய அடையாளம். எனவே இந்த தீபாவளிக்கு என்னுடைய தேர்வு ‘ஜம்தானி’ ரக சேலையுடன் என் ரசனைக்கும் வசதிக்கும் ஏற்ற ஸ்னீக்கர்கள் தான்” என்கிறார்.

கடந்த 2023ல் அனைத்துலக அளவிலான திருமதி ஆசியா பட்டம் வென்ற சிலக்கல் விஜய துர்கா, “விளக்கொளிகளால் வீட்டையும், தனித்துவமாக ஆடை வடிவமைப்பினால் உங்களையும் அலங்கரிக்க ஏற்ற தருணம் இந்த தீபாவளிப் பண்டிகை என்கிறார். தொடர்ந்து, ‘ஃபியூஷன்’ எனும் பல வடிவமைப்புக் கூறுகளை ஒன்றிணைத்து உருவாக்கும் பாணி, பாரம்பரியத்தை கைவிடாமல், அதே சமயம் புதுமையிலிருந்து விலகாமல் இருக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பை அளித்துள்ளது என்கிறார்.

கிராபிக்ஸ் டிசைனர் ஷில்பி சேத், இந்த தீபாவளிக்கு தனது ஜொலிக்கும் சேலைக்கேற்ற மேற்கத்திய பாணி ஸ்னீக்கர்களை வடிவமைத்து அணிய உள்ளதாகக் கூறுகிறார்.

கமலா கிளப் தலைவரும், தொழில்முனைவோருமான பத்மஜா எர்ரம்செட்டி கூறுகையில், ஆடம்பர நகைகளைக் காட்டிலும், கண்களை உறுத்தாமல் ஒட்டுமொத்த உடையை நிறைவு செய்யும் சிறிய, நுட்பமான நகைகளையே பெண்கள் தேர்வு செய்வதாகக் குறிப்பிடுகிறார்.

குறிப்புச் சொற்கள்