தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குதூகலம் அளிக்கும் புது வருகை

2 mins read
16cf46f0-a849-4792-b5fb-83dd277d5319
குழந்தையின் வருகை இந்த தீபாவளிக்குச் சிறப்பு சேர்த்துள்ளதாக தம்பதியர் கூறுகின்றனர். - படம்: அனுபிரியா

இந்தத் தீபாவளி புதிதாகப் பிறந்துள்ள தங்களின் பெண் குழந்தையுடன் கொண்டாட உள்ளனர் மதிவண்ணன் அனுபிரியா தம்பதியர்.

இவர்கள் மணமுடித்து ஏறத்தாழ 13 ஆண்டுகள் கழித்து பெற்றோராகியுள்ளதில் மனநிறைவு அடைகின்றனர்.

கைரா அனன்யா என்ற தங்கள் ஐந்து மாத மகளுடன் தீபாவளியைக் கொண்டாடும் உணர்வே தம்மை நெகிழ வைப்பதாகக் கூறினார் 40 வயதுடைய திரு மதிவண்ணன்.

“சென்ற ஆண்டு வரை எங்களின் குழந்தைகள் போல் வளர்க்கும் இரு செல்லப் பிராணிகளுடன் தீபாவளியைக் கொண்டாடி வந்தோம். இவ்வாண்டு மகளையும் சேர்த்து மூன்று குழந்தைகளுடன் கொண்டாடுகிறோம்,” என்றார் அவர்.

இவ்வாண்டு தீபாவளி தங்களின் குழந்தையை மையமாகக் கொண்டே திட்டமிடப்படுவதாகக் கூறினர் தம்பதியர். குழந்தைக்குப் பாவாடை சட்டை, வண்ண வளையல்கள், பொட்டு, நகைகள் ஆகியவற்றை அணிவித்து அலங்கரிக்கக் காத்திருக்கின்றனர் இந்தப் புதுப் பெற்றோர்.

நிறங்களை கைரா பார்க்கத் தொடங்கியுள்ளதால் வீட்டைக் கண்கவர் அலங்காரங்களால் நிரப்புவதோடு, வண்ண மீன்கள் கொண்ட தொட்டியும் வாங்கியுள்ளனர் இவர்கள்.

குழந்தையின் வருகை இந்த தீபாவளியைச் சிறப்பாகியுள்ளது என்றனர் தம்பதியர்.
குழந்தையின் வருகை இந்த தீபாவளியைச் சிறப்பாகியுள்ளது என்றனர் தம்பதியர். - படம்: அனுபிரியா

இதுவரை தம்பதியர் தங்களின் பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்று வந்தனர். இவ்வாண்டு மூவரும் ஒரே வண்ண உடைகளில் மற்ற உறவினர் வீடுகளுக்கும் செல்ல உள்ளதாக‌த் தெரிவித்தனர். தங்கள் குழந்தையின் வருகை அனைவரையும் குதூகலப்படுத்தும் என நம்புகின்றனர் இருவரும்.

சில வாரங்கள் முன் முதன்முறையாக தீபாவளி ஒளியூட்டைக் காண குழந்தையை தேக்காவிற்கு அழைத்துச் சென்றதாகவும் தீபாவளியன்று சிறப்புப் புகைப்படங்கள் எடுக்க அழைத்துச் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர்.

“பண்டிகைக் காலத்தில் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்கும்போது சிலரைக் காயப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்கும் போக்கு இருந்து வந்தது. ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகள் கேட்பதை நிறுத்த வேண்டும் என்ற வலியுறுத்து பாராட்டிற்குரியது. பண்டிகைக் கால மகிழ்ச்சியைக் குலைக்கும் வகையில் இத்தகைய கேள்விகளைத் தவிர்க்கலாம்,” என்றார் அனுபிரியா, 40.

“உடல்நிலை, நிதிநிலை, திருமணம், குழந்தை என ஒருவர் தனிப்பட்ட வகையில் எடுக்கும் முடிவுகளுக்குக் காரணங்கள் இருக்கலாம். அவற்றை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிடுவதே நல்லது,” என்றார் திரு மதிவண்ணன்.

வாழ்வின் அனைத்து தருணங்களிலும் வாழ்க்கைத் துணைக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சிக்கு வித்து என்று நம்புகின்றனர் மதிவண்ணன் அனுபிரியா தம்பதியர்.

குறிப்புச் சொற்கள்