சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நான்கு முக்கிய விழாக்களில் ஒன்றான கவியரசு கண்ணதாசன் விழா வரும் 18ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. 2, பீட்டி சாலையில் அமைந்துள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் விழா நடைபெறும்.
ஜோஸ்கோ பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் புரவலருமான தமிழ் வள்ளல் நாகை திரு. தங்கராசு எனும் திரு. போப் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
கவியரசரின் புதல்வர் டாக்டர் கண்ணதாசன் இராமசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.
பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராகத் திகழ்ந்த கவியரசு கண்ணதாசன் இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர்.
“நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று அறுதியிட்டுக் கூறிய கவியரசு சாகா வரம்பெற்றவர். அவரது படைப்புகள் மூலம் குறிப்பாகத் திரைப்பாடல்கள், கவிதைகள் மூலமாக அவர் இன்னும் தமிழ் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அத்தகைய மாபெரும் கவிஞரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கவியரசு கண்ணதாசன் விழாவை எழுத்தாளர் கழகம் நடத்தி வருகிறது. இது எழுத்தாளர் கழகம் எடுக்கும் 25ஆவது விழா.
கண்ணதாசன் விழாவை ஒட்டி இவ்வாண்டும் 40 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்குக் கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.
எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்பட்ட சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டியின் முடிவுகள் கண்ணதாசன் விழாவில் அறிவிக்கப்படுவதுடன் முதல் பரிசு பெற்ற பாடல் இசையமைக்கப்பட்டு ஒலியேற்றப்படும்.
கவியரசு கண்ணதாசன் விழாவை ஒட்டி இவ்வாண்டும் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டியை இரு பிரிவுகளாக நடத்தினோம். இரு பிரிவுகளுக்குமான இறுதிச் சுற்று அன்றைய விழாவில் அரங்கேற்றம் காணும்.
தொடர்புடைய செய்திகள்
கவியரசு கண்ணதாசன் விழாவைக் கண்டு களிக்க அவரது ரசிகர்களையும் இலக்கியவாதிகளையும் தமிழ் அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.

