சென்னைப் புத்தகக் காட்சியுடன் சிங்கப்பூர்ப் படைப்புகள் பற்றிய கருத்தரங்குகள்

சென்னைப் புத்தகக் காட்சியுடன் சிங்கப்பூர்ப் படைப்புகள் பற்றிய கருத்தரங்குகள்

3 mins read
74153f9a-1f38-441f-9af8-8204f57fd138
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைறெவிருக்கும் சென்னைப் புத்தகக் காட்சியில் சிங்கப்பூர்ப் படைப்புகளை மீண்டும் காட்சிப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்குமான ஏற்பாடுகளைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் செய்து வருகிறது - படம்: தமிழ் முரசு

அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் சென்னைப் புத்தகக் காட்சியில் சிங்கப்பூர்ப் படைப்புகளை மீண்டும் காட்சிப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்குமான ஏற்பாடுகளைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் செய்து வருகிறது. சென்னைப் புத்தகக் காட்சி 5.1.2024 முதல் 22.1.2024 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளுடன் இவ்வாண்டு ஜனவரியிலும் சென்னைப் புத்தகக் காட்சிகளில் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகள், தேசியக் கலை மன்ற ஆதரவுடன் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதேபோல் அடுத்த ஆண்டும் சென்னைப் புத்தகக் காட்சியில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் தேசியக் கலை மன்ற ஆதரவுடன் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே எழுத்தாளர்களும் வெளியீட்டாளர்களும் படைப்புகளைத் தங்களிடம் அளிக்குமாறு எழுத்தாளர் கழகம் கேட்டுக்கொள்கிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே விற்பனையாகும் நூல்களுக்கு உரிய தொகை அந்தந்த எழுத்தாளரிடம் வழங்கப்படும்.

அதனால் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் ஒவ்வொன்றிலும் அதிகபட்சமாக 10 படிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் இருக்கும் படிகளைக் கொடுக்கலாம். தயவுசெய்து கறையில்லாத, சுத்தமான நூல்களையே வழங்கும்படி வேண்டுகிறோம். நூல்களில் இந்திய ரூபாயில் விலை குறிப்பிடப்படவில்லை என்றால் முதல் பக்கத்தில் மேல் வலது மூலையில் ரூபாய் விலையைக் குறிப்பிட வேண்டுகிறேன்.

நீங்கள் குறிப்பிடும் விலையிலிருந்து 10 விழுக்காடு கழிவு விலையில் நூல்கள் விற்கப்படும். இது புத்தகக் காட்சிகளில் வழக்கம். நூல்களைச் சென்னைக்கு அனுப்பவும், காட்சிக்கு வைக்கவும், விற்பனை செய்யவும் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்யும்.

ஆகவே தாங்கள் வெளியிட்டுள்ள நூல்களை வரும் 30.11.2023ஆம் தேதிக்குள் 32, அப்பர் டிக்சன் சாலையிலுள்ள ஆரியா கிரியேஷன்ஸ் (திருவாட்டி பிரேமா – 91696996) கடையில் கொடுக்க வேண்டும். நூல்களுடன் என்னென்ன நூல்கள், ஒவ்வொன்றிலும் எத்தனை படிகள் என்ற பட்டியலையும் கொடுக்கவும்.

நீங்கள் ஏற்கனவே கொடுத்த நூல்களையும் புதிதாக வெளியிட்டுள்ள நூல்களையும் கொடுக்கலாம்.

கருத்தரங்குகள்

புத்தகக் காட்சியின் போது சிங்கப்பூர்ப் படைப்புகள் பற்றிய இரண்டு, மூன்று கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்து வருகிறோம். அதற்கு தமிழ் மின் மரபுடைமை இலக்கியத் தொகுப்பிலுள்ள நூல்கள் பயன்படுத்தப்படும். எனினும் அத்தொகுப்பில் 2015 வரை வெளியிடப்பட்ட நூல்களே இடம்பெற்றுள்ளன. ஆகையால் அதன் பிறகு 2016 முதல் 2023 வரை எழுத்தாளர்கள் வெளியிட்ட நூல்களின் மின்னிலக்க வடிவத்தை (PDF Format) aavanna19@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அதிலிருந்து அண்மை நூல்களைக் கருத்தரங்க ஆய்வுக்குத் தேர்வுசெய்ய உதவியாக இருக்கும். ஆகவே 2015க்குப் பிறகு வெளியான நூல்களின் 10 படிகளைக் கொடுப்பதுடன் அவற்றின் மின்னிலக்க வடிவத்தையும் அனுப்பி வைக்கவும்.

காலம் குறைவாக இருப்பதால் விரைந்து செயல்படும்படியும் உங்கள் படைப்புகளைத் தமிழக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த மீண்டும் கிடைத்துள்ள இந்த நல்ல வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்றும் எழுத்தாளர்களை எழுத்தாளர் கழகம் கேட்டுக் கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்