சிங்கப்பூரின் இரு முன்னணித் தமிழ்ச் சமூக வரலாற்றாளர்களின் பங்களிப்புகளை நினைவுகூறும் உரையாடல், சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஓரங்கமாக நடக்கவுள்ளது.
இந்நிகழ்ச்சி, ஞாயிறு நவம்பர் 19ஆம் தேதி காலை 11 முதல் 12.30 மணி வரை இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெறும்.
உரையாடலை வழிநடத்தவுள்ள சிவானந்தம் நீலகண்டன், “திரு பாலபாஸ்கரன், திரு சுப்பையா இருவரும் பெருங்கனவுகளுடன் இறுதிமூச்சுவரை வாழ்ந்த ஆய்வு முன்னோடிகள்,” என போற்றுகிறார்.
உரையாடலில் ஆய்வாளர்கள் அருண் மகிழ்நன், நெடுமாறன்,செய்தித்துறையில் பெயர்பெற்ற பவளகாந்தம் அழகர்சாமி, லதா ஆகியோர் பங்குகொள்வர்.
நிகழ்ச்சி நாயகர்களைப் பற்றி...
இலக்கியப் பரிசுடன் பாலபாஸ்கரன், எளிய எழுத்தோட்டத்துடன் வாசகர்களைக் கவரும் வரலாற்று ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியவர்.
வசீகரிக்கும் குரலில் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் படைத்து மலேசியா, சிங்கப்பூரில் பலரையும் ஈர்த்தவர்.
‘தமிழவேள் கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும் - இன்றைய பார்வை’ என்ற ஆய்வு நூலுக்காக சிங்கப்பூர் இலக்கியப் பரிசை (2018) வென்ற திரு பாலபாஸ்கரன், கணையாழி விருது, கரிகாற்சோழன் விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர்.
தமிழில் ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்’ (1995), ‘சிங்கப்பூர் - மலேசிய தமிழ் இலக்கியத் தடம் - சில திருப்பம்’ (2018), ஆங்கிலத்தில் ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் 1930-1980’ (2006), உள்ளிட்ட ஆய்வுநூல்களையும் எழுதியவர்.
திரு லெட்சுமணன் சுப்பையா, சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்தியவர்.
‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற ‘மீடியாகார்ப்’ 13-பாகத் தொடர், ‘அடையாளம்’ போன்ற தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளுக்கும் வரலாற்றுக் குறிப்புகள் சேகரித்து பெரும்பங்காற்றினார்.
சிங்கப்பூர் வரலாற்றினைப் பற்றி ‘ஸ்மித்சோனியன்’ போன்ற வெளிநாட்டு ஊடகங்களிலும் பேசி நாட்டின் பெருமையைப் பறைசாற்றினார்.
சிங்கப்பூர்த் தேசிய வரலாறு அரும்பொருளகத்திற்கு செட்டியார்களைப் பற்றிய கண்காட்சியை அமைத்தும் கொடுத்தார்.
நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: singaporewritersfestival.com/programme-details-2023/conversations/path-through-history-in-memory-of-bala-baskaran-subbiah-lakshmanan


