பார்வை இல்லாதவர் மனத்தையும் குளிரவைப்பது இசை.
அப்படிப்பட்ட இசையை, பார்வைத்திறன் குறைபாடுள்ள 72 வயது மோகன் நாராயணசாமி நேரடியாக ஒரு கச்சேரிக்குச் சென்று கேட்டு ரசித்த தருணத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கப்போவதில்லை.
இதற்கு முன்பு பல கச்சேரிகளுக்குச் செல்ல அவர் ஆசைப்பட்டதுண்டு. ஆனால், தன்னைக் கச்சேரிக்கு அழைத்துச் செல்பவரின் நேரம், நுழைவுச்சீட்டு விலை போன்றவற்றைக் கருதி அந்த ஆசையை மனத்தில் மட்டுமே வைத்திருந்தார்.
ஆண்டுகள் பல கடந்த பிறகு அண்மையில் அவரது ஆசை நிறைவேறியது.
‘8 பாயிண்ட் என்டர்டெய்ன்மண்ட்’, ‘எம்எம்எம் ஒப்பந்தச் சேவைகள்’ ஆகியவை நவம்பர் 4ஆம் தேதியன்று இணைந்து வழங்கிய டாக்டர் வைக்கம் விஜயலட்சுமி கச்சேரிக்குச் சிறப்பு நுழைவுச்சீட்டுகள் பெற்ற பயனாளிகளில் இவரும் ஒருவர்.

“இந்தக் கச்சேரி எனக்கு மலரும் நினைவுகளைத் தந்தது. நான் பெரிதும் ரசித்தேன்,” என்றார்.
‘ரெட்டினைட்டிஸ் பிக்மன்டோசா’ எனும் கண் நோயினால் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பார்வையைப் படிப்படியாக இழந்து தற்போது உலகை நிழல்களாக மட்டுமே காண்கிறார் இவர்.
இவரைத் தவிர்த்து, ‘சிற்பிகள்’ மன்றத்தின் உதவியோடு சிங்கப்பூர்ப் பார்வைத்திறன் குறைபாடுள்ளோர் சங்கத்திலிருந்து (எஸ்ஏவிஎச்) இரு பார்வையற்றவர்களும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
விற்கப்பட்ட நுழைவுச்சீட்டுகளிலிருந்து பெறப்படும் பணத்தில் ஒரு பங்கு ‘எஸ்ஏவிஎச்’சுக்குச் சென்றது.
மேலும், ‘நெட்கோ ஸ்டூடியோஸ்’ நிகழ்ச்சியில் ‘எஸ்ஏவிஎச்’சுக்கு $2000 நன்கொடையும் வழங்கியது.
தனித்துவமிக்க இசை நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் ‘காயத்ரி வீணை’ எனும் ஒற்றைக் கம்பி வீணையையும் ‘கசூ’ எனும் ஊதுகுழலையும் வாசித்து வந்தவரைக் கவர்ந்தார் பல விருதுகளை வென்றுள்ள பார்வையற்ற டாக்டர் வைக்கம் விஜயலட்சுமி.
அவருடன் பார்வைத்திறன் குறைபாடுள்ள இர்வின் விக்டோரியா, சிங்கப்பூர்ப் பாடகர்கள் பரசு கல்யாண், சுதாஷினி ராஜேந்திரன், கலையரசி சொக்கலிங்கம் ஆகியோரும் பாடல்கள் பாடி வந்திருந்தோரை மகிழ்வித்தனர்.
பாடகர்களின் விறுவிறுப்பான நவீன பாடல்களுக்குப் பார்வையாளர்கள் ஆரவாரத்தோடு ஆடினர்.

சின்னதிரை நட்சத்திரங்கள் குரேஷி, ஜாக்குலின் இருவரும் நிகழ்ச்சி நெறியாளர்களாகச் செயல்பட்டு, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். திரு குரேஷி, பிரபல திரையுலக நட்சத்திரங்களின் குரல்களில் பேசி அசத்தினார்.
வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து பாடகர்களுக்குப் பலத்த கைதட்டலோடு ஆரவாரம் செய்து ஆதரவளித்தனர்.
சிறப்புத் தேவையுடைய கலைஞர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வண்ணம் நிகழ்ச்சி அமைந்திருந்தது.