அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ள வெளிநாட்டு ஊழியர்களில் 31 வயது மாலிக்கர்ஜுனா ரெட்டியும் ஒருவர்.
அவர் உட்பட மொத்தம் 40 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மளிகைப் பொருள்களை வாங்க தலா $70 பற்றுச்சீட்டுகளையும் மதிய உணவையும் வழங்கினர் 40 ‘சிங்லேண்ட்’ தொண்டூழியர்கள்.
வெஸ்ட் மால் பேரங்காடியில் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சி, ‘சிங்லேண்ட் எலிவேட்ஸ்’ எனும் ‘சிங்லேண்ட்’ சமூக சேவைத் திட்டத்தின் ஓர் அங்கம்.
கடந்த ஆண்டு தொடங்கிய இத்திட்டத்தின்வழி ‘சிங்லேண்ட்’ இவ்வாண்டு முதல் 2025 வரை, வெளிநாட்டு ஊழியர்களுக்கு சேவையாற்றும் ‘ஹெல்த்செர்வ்’ அறநிறுவனத்துக்கு ஆண்டுதோறும் $50,000 வழங்கவுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு சமூக உதவி, இலவச மனநலச் சேவைகள், கட்டுப்படியான விலையில் மருத்துவச் சேவைகள் போன்றவற்றை வழங்கிவரும் ‘ஹெல்த்செர்வ்’ இதனால் பயன்பெறும்.
பங்குபெற்ற 40 வெளிநாட்டு ஊழியர்களும் ‘ஹெல்த்செர்வ்’ அறநிறுவனத்தின் பயனாளிகளாவர்.
‘எங்கள் கட்டடங்களை அமைக்கப் பாடுபடும் வெளிநாட்டு ஊழியர்களது மனநலத்தில் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம்,” என்றார் சிங்லேண்ட் தலைமை நிர்வாகி ஜானத்தன் இயூ.
“வெளிநாட்டு ஊழியர்களின் முகத்தில் தென்பட்ட புன்சிரிப்பு எங்களையும் மகிழ்வித்தது,” என்றார் ஹெல்த்சர்வ் தலைமை நிர்வாகி டாக்டர் பெஞ்சமின் குவான்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 தொற்றுக் காலத்தில் ‘எஸ்டிஐ அகாடமி’யுடன் இணைந்து ‘லிங்கர்’ எனும் செயலியைத் தொடங்கி, 4,500 வெளிநாட்டு ஊழியர்களுக்கு இணையவழி ஆங்கிலமொழிப் பாடங்களை சிங்லேண்ட் வழங்கியது.
கொவிட்-19 வெளிநாட்டு ஊழியர் ஆதரவுக் கூட்டணியுடன் இணைந்து, தங்குவிடுதிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கும் அது ஆதரவளித்தது.
இவ்வாண்டு சிங்லேண்ட், அறநிறுவனங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் S$318,000 வழங்கியதோடு நேரடித் தொண்டூழியத்தில் மொத்தம் 1,000 மணி நேரத்தைக் கடந்துள்ளதாகவும் தெரிவித்தது.

