தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘லிஷா’ தீபாவளி விருந்தில் அதிபர் தர்மன்

2 mins read
e5903c5e-eed7-4b62-8f2e-757c666e0ff5
‘லிஷா’ தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவருடைய துணைவியாரும் கலந்துகொண்டனர். - படம்: லிஷா
multi-img1 of 3

லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்ட, ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் முக்கியத் தூணாக இருக்கிறது.

அமைப்புடன் வெவ்வேறு பங்குதாரர்களும், ஆதரவாளர்களும் கைகோத்து ஒவ்வோர் ஆண்டும் தீபாவளித் திருநாளை ஒட்டிய நிகழ்ச்சிகளை வழிநடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு நன்றி நல்கும் வகையில் லிஷா அண்மையில் ‘தீபாவளி காலா டின்னர்’ என்னும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆண்டுதோறும் தீபாவளிக்குப் பிறகு நடைபெறும் அந்த நிகழ்வானது, கொவிட்-19 கட்டுப்பாடுகளால் கடந்த நான்கு ஆண்டுகளாக இடம்பெறவில்லை.

இந்நிலையில், இம்மாதம் 22ஆம் தேதி பார்க்ராயல் கலெக்க்ஷன் மரினா பே வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிட்டத்தட்ட 420 பேர் கலந்துகொண்டனர்.

அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவருடைய துணைவியாரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நீண்ட இடைவெளிக்குப்பின் திரும்பிய இந்நிகழ்வில் இந்த ஆண்டு புதிதாக தீபாவளிக்காக லிஷா ஏற்பாடு செய்திருந்த ‘தேக்கா ராஜா’ என்னும் யானை உருவம் கொண்ட அடையாளச் சின்னம் அதிபரை நிகழ்வுக்கு வரவேற்றது.

கலாசாரப் படைப்புகள் அரங்கேறிய நிகழ்ச்சியில் உள்ளூர்க் கலைஞர்களும் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களும் பங்குபெற்று ஆடல் பாடலுடன் நிகழ்ச்சிக்கு மேலும் அழகுசேர்த்தனர்.

பங்குதாரர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவர்கள் அளித்த உதவிக்கு லிஷா அன்பளிப்பு வழங்கி நன்றி தெரிவித்தது.

லிஷா தலைவர் ரகுநாத் சிவா, “கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் இந்நிகழ்வை இந்த ஆண்டு தொடங்கினோம். எங்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் இல்லாமல் லிஷாவால் தீபாவளிக் கொண்டாட்டங்களைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்க முடியாது. மீண்டும் அடுத்த ஆண்டும் புதிய முயற்சியோடு நாங்கள் மக்களுக்கு தீபாவளி உணர்வைக் கொண்டு சேர்ப்போம்,” என்று பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்