தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுபான்மைச் சிங்கப்பூர் சீக்கியர்களின் அரும்பங்களிப்பு

2 mins read
e4db4b6d-0740-467c-b767-79fc5f696801
விறுவிறுப்பான நடனத்தை வழங்கியது ஷேர்-இ-பஞ்சாப் பாங்ரா குழு. - படம்: ரவி சிங்காரம்

சீக்கியர்களின் பண்பாட்டு நெறிகளை மற்ற இனத்தவர்க்கும் உணர்த்தும்வகையில் ‘சிங்கப்பூர் சீக்ஸ்’ என்ற நிகழ்ச்சி தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 முதல் 8.30 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் ‘கல்சா’ சங்கம், சீக்கிய ஆலோசனை மன்றம், இளம் சீக்கியர் சங்கம் ஆகியவை இணைந்து வழங்கின.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே சீக்கியப் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும் பல சாவடிகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

பார்வையாளர்கள் சீக்கியர்களின் தலைப்பாகையை அணிந்து, இனிப்புப் பண்டங்களை உண்டு, இசைக் கருவிகளை வாசித்து, ஆடை அணிகலன்களையும் தற்காப்புக் கலைப்பொருள்களையும் கண்டு ரசித்தனர்.

சிங்கப்பூர் டோல் அணி, ஷேர்-இ-பஞ்சாப் பாங்ரா சிங்கப்பூர் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தோர், குமாரி ஜஸ்லீன் கோர் நூருல்லா ஆகியோர் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். சுவையான சீக்கிய உணவும் பரிமாறப்பட்டது.

சீக்கியர்களின் தற்காப்புக் கலைகள் பற்றிய சாவடியும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
சீக்கியர்களின் தற்காப்புக் கலைகள் பற்றிய சாவடியும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது. - படம்: ரவி சிங்காரம்

சீக்கியர்களைப் பற்றிச் சிறப்புரை ஆற்றினார் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) தெற்காசியக் கல்விக் கழகம் ஆகியவற்றின் தலைவர் பேராசிரியர் டான் டாய் யோங். இவர் சிங்கப்பூர் கல்சா சங்கம் பற்றிய நூலையும் வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாகச் சுவையான கலந்துரையாடலும் நடைபெற்றது. அதற்கு ‘என்யுஎஸ்’ தெற்காசியக் கல்விக் கழக இயக்குநர் இணைப் பேராசிரியர் இக்பால் சிங் சேவா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாகச் சுவையான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாகச் சுவையான கலந்துரையாடலும் இடம்பெற்றது. - படம்: ரவி சிங்காரம்

இன்றைய காலகட்டத்தில் சீக்கிய அடையாளம் என்றால் என்ன, எவ்வாறு சீக்கிய பண்பாட்டைக் கட்டிக்காத்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசெல்வது, சீக்கிய சமுதாயத்தில் அதிகரித்துவரும் சமூக - பொருளாதாரப் பிரிவினையை எவ்வாறு சமாளிப்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

தன் ஆசிரியர் ம தியாகராஜனுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி சுவன் டிங், “எனக்குச் சீக்கியப் பண்பாடு பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த ஆர்வம் மேலும் கூடியுள்ளது,” என்றார்.

பல பண்பாட்டினரும் சீக்கியர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முன்வந்ததை வெகுவாகப் பாராட்டினார் சிங்கப்பூர் கல்சா சங்கத் தலைவர் ஹெர்னைக் சிங்.

குறிப்புச் சொற்கள்