தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒற்றுமைக்குப் பங்களிப்பதை சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தொடரவேண்டும்: தர்மன்

2 mins read
3dd95637-e178-4279-8035-cd181e983c81
சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்புரை ஆற்றினார். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

சிங்கப்பூரின் மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தொடர்ந்து தன்னை மாற்றிக்கொள்வது அவசியம் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

மக்கள்தொகை மூப்படைந்துவரும் வேளையில், வாய்ப்புகளைத் தேடி இளம் தலைமுறையை ஈர்ப்பதுடன் இச்சங்கம் புதிய சிங்கப்பூர் குடிமக்களைச் சமுதாயத்தில் ஒருங்கிணைக்க உதவி, ஒற்றுமையை வலுப்படுத்துவதில் தன் பங்கை தொடர்ந்து ஆற்றவேண்டும் என்று திரு தர்மன் கூறினார்.

சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் நூறாண்டு நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய திரு தர்மன், அச்சங்கத்தின் நீண்ட வரலாற்றைப் பாராட்டிப் பேசினார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு, புகழ்பெற்ற வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பெரியவர்களுக்கும் இந்தச் சங்கத்துக்கும் தொடர்பு இருந்ததையும் அவர் சுட்டினார்.

‘ஹாக்கி’ விளையாட்டை ஒருகை பார்க்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
‘ஹாக்கி’ விளையாட்டை ஒருகை பார்க்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

1923ல் சிங்கப்பூரில் காலனித்துவ ஆட்சி நடைபெற்றபோது சங்கம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதைக் குறிப்பிட்ட திரு தர்மன், சங்கத்தின் முன்னைய தலைவர்களான திரு எஸ்.ஏ. நாதன், திரு எஸ்.எஸ். தில்லன், திரு எட்டி ராஜ், திரு லெஸ்லி நெட்டோ ஆகியோருக்குப் புகழாரம் சூட்டினார்.

ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் சனிக்கிழமை (டிச.9) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 600 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் 27 பேருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டது.

முன்னைய விளையாட்டாளர்கள் மைமூன் பக்கார், காற்பந்து விளையாட்டாளர் ஆர். சூரியமூர்த்தி உள்ளிட்டோருடன் கிரிக்கெட் விளையாட்டாளர் ஜி.கே.திவ்யா, காற்பந்து வீரர் ஹரிராஜ் நாயுடு முதலியோர் கெளரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்ட தேசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி பெரேரா, தாம் கடந்து வந்த பாதை குறித்து மேடையில் பகிர்ந்தார்.

“தற்போதைய சிறந்த நிலையை அடைவதற்குமுன் நான் பல சாவல்களைச் சந்தித்து நிதானம் அடைவதற்கு சிறிது காலம் பிடித்தது. என்னால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்துவேன்,” என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சங்கத்தின் துணைத் தலைவர் பார்த்திபன் முருகையன், நூற்றாண்டு நிறைவு விழாவின் தொடர்பில் சங்கம் பணித்திட்டம் ஒன்றை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.

“இந்தச் சங்கத்தின் செயற்குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டபோது, சங்கத்தை அடுத்த நூறு ஆண்டுகளுக்கு வழிநடத்தத் தேவைப்படும் நல்ல உருமாற்றத்தை வழங்கும் பொறுப்பு எங்களிடம் உள்ளது என்பதை அறிந்தோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்