கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டை வரவேற்க மரினா பே சாண்ட்ஸ் வளாகத்தில் உள்ளூர் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட கலைப் படைப்புகள், வாண வேடிக்கைகள், ஒளிவீச்சுப் படங்கள், இசைக் கச்சேரிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
‘தி மெஜூரிட்டி டிரஸ்ட்’ எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், மெர்லியன், மரினா பே சாண்ட்சில் உள்ள கலை அறிவியல் அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் ஒளிவீச்சுப் படங்கள் டிசம்பர் 26 முதல் 31 வரை காட்சிப்படுத்தப்படுகின்றன.
சமூக அக்கறை, நம்பிக்கை, மீள்திறன் உள்ளிட்ட கூறுகளை அடிப்படையாகக் கொண்ட ஐந்து உள்ளூர் கல்லூரி மாணவர்களின் 21 கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இவை இளையரின் மனநலம், தனிமையில் வாழும் மூத்தோரின் மீதான அக்கறை, அதிகம் பேசப்படாத வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வியல் என பல்வேறு சமூகக் கருத்துகள் கொண்ட கதைகளைச் சித்திரிக்கின்றன.
சிங்கப்பூர் நகர வடிவமைப்புக்கு அயராது உழைக்கும், கட்டுமானப் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் லாசால் கலைக் கல்லூரி மாணவி வடிவமைத்த கலைப்படைப்பு ஃபுல்லர்ட்டன் ஹோட்டல் முகப்பில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
வீட்டுக்குப் போகும் வழியைக்கூட நினைவில் வைக்கப் போராடும் மறதிநோய் கொண்ட மூத்தோர் சந்திக்கும் சவால்கள், அவர்களுக்கு வழிதேட உதவும் அந்நியரின் இரக்க குணம் உள்ளிட்டவற்றைச் சித்திரிக்கும் நன்யாங் கலைக் கல்லுரி மாணவியின் படைப்பு மெர்லயனில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
மரினா பே சாண்ட்ஸ் கலை அறிவியல் அருங்காட்சியகத்தில், தெமாசெக் கல்லூரி மாணவர் வடிவமைத்த, வலிமையையும் மீள்திறனையும் பேசும் ஆர்க்கிட் மலர்களைக் கருப்பொருளாகக் கொண்டு, மனநலப் பிரச்சினைகளைக் கையாளும் முறை குறித்த புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் கலைப்படைப்பு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
வாண வேடிக்கைகள், உற்சாக நிகழ்வுகள்
தீவு முழுதும் பல இடங்களிலிருந்து கண்டுகளிக்கும் விதமாக, புத்தாண்டை வரவேற்கும் வாண வேடிக்கைகள், பேஃபிரன்டில் அமைக்கப்பட்டிருக்கும் பனிச்சறுக்கை மையமாகக் கொண்ட விளையாட்டுத் திடல், கோ கார்ட் பந்தயம் என, இவ்வாண்டின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்வுகளில் சாகச அம்சங்களுக்கு பஞ்சமில்லை.
தொடர்புடைய செய்திகள்
எஸ்ப்ளனேட் அரங்கம், டிபிஎஸ் அரங்கம் உள்ளிட்ட இடங்கள் உள்ளூர் - வெளிநாட்டுக் கலைஞர்களின் இலவச இசை நிகழ்வுகளால் நிரம்ப உள்ளன.
தொடர் நிகழ்வுகள் மூலம் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் புத்தாண்டை வரவேற்று, மறக்க முடியாத அனுபவத்தை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்களின் பாதுகாப்பைக் கருதி ஆளில்லா வானூர்திகள் உள்ளிட்டவற்றை அப்பகுதிகளில் இயக்க வேண்டாம் எனவும் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் வேகமாக மிதிவண்டியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

