அக்கரைச் சீமையிலிருந்து அயலான் வரை

சிங்கப்பூரில் கலை ஆர்வம் மிக துடிதுடிப்பான ஒன்று. நவீன சிங்கப்பூர் பல கலைஞர்களின் படைப்பாற்றலைக் கண்டுள்ளது. மேலும் சிலர், அனைத்துலகப் புகழ் எட்டியுள்ளனர். இன்னும் எழப் பாடுபடுகின்றனர்.  

சிங்கப்பூரின் ‘ஹிப்ஹாப்’ களத்தில் ஐந்து ஆண்டுகளாக சாதனை படைத்து வருகிறார் யங் ராஜா.

தமிழும் ஆங்கிலமும் கலந்த சொல்லிசையில் சிறக்கும் யங் ராஜா, அதைத் தனது சிறப்பு அடையாளமாகக் கருதி வெற்றிக் கனியைப் பலமுறை சுவைத்துள்ளார். தாம் கடந்து வந்த பாதையைப் பற்றி தமிழ் முரசுடன் அவர் பகிர்ந்துகொண்டார். 

ஏ.ஆர்.ரகுமான் இசையில் கால் பதித்த தருணம்

கடந்த டிசம்பர் மாதம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணிபுரிந்தார் யங் ராஜா. சிறு வயதிலிருந்தே ஏ.ஆர்.ரகுமான் இசைமீது அதிக நாட்டம் இருந்த அவருக்கு, அந்த அனுபவம் ஒரு கனவுபோல இருந்தது. 

“அவர் காணொளி அழைப்பின் மூலம் என்னைத் தொடர்புகொண்டது இன்னும் நினைவிருக்கிறது. ‘அயலான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு விறுவிறுப்பான காட்சிக்கு ‘ஹிப்ஹாப்’ இசைப் பகுதி வேண்டும் எனக் கூறி, அதற்கான எதிர்பார்ப்புகளையும் அவர் விளக்கினார். அன்றிரவே நான் என் குழுவினருடன் சேர்ந்து அதை நிறைவேற்றினேன்,” என்று உற்சாகம் ததும்பக் கூறினார் யங் ராஜா.

தனது இசைப்பயணம் எதிர்பாரா தருணத்தில் அங்கீகரிக்கப்பட்டது, தனது கடின உழைப்பின் விளைவு என இவர் கருதுகிறார்.  

யங் ராஜா பிறந்தார்

முதல் தலைமுறை சிங்கப்பூரரான யங் ராஜா, முதன்முதலாக உள்ளூர் தொலைக்காட்சியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆனால், இளமைப் பருவத்தில்தான் இசைமீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது.

“அடிப்படை ராணுவப் பயிற்சியின்போது நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் நான் மேடையேறினேன். ஒரு கலைஞராக வேண்டும் என்ற எனது ஆர்வத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.”

புதிய ஆர்வத்துடன் மலர்ந்த யங் ராஜா, தனது திறமையை பல இரவுநேர கேளிக்கை விடுதிகளில் நடைபெற்ற ‘ஹிப்ஹாப்’ நிகழ்ச்சிகளில் வெளிக்காட்டினார்.

“அந்நிகழ்ச்சிகளின் வழியே நான் என் நண்பர்களைச் சந்தித்தேன். மேலும், பல இசை அமைப்பாளர்களையும் சந்தித்தேன். இசை எங்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த இலக்காக இருந்ததால் என் கனவுகள் மெய்ப்படத் தொடங்கின. இதுதான் என் தொடக்க காலம்.

2018ஆம் ஆண்டில், ‘முஸ்தபா’ எனும் ‘ஹிப்ஹாப்’ பாடலைத் தொகுத்து ‘யூடியூப்’ தளத்தில் வெளியிட்டார் யங் ராஜா. தமிழும் ஆங்கிலமும் ஒன்றிணைந்த சொல்லிசை பல சிங்கப்பூரர்களைச் சென்றடைந்தது. ‘யங் ராஜா’ எனும் கலைஞனை பலரும் அடையாளம் காணத் தொடங்கினார்கள், வெளிநாட்டவர்கள் உட்பட.

 “நான் கேட்டு வளர்ந்த ‘ஹிப்ஹாப்’ பாடல்களில் மேற்கத்தியத் தாக்கம் அதிகம் இருந்தது. இருப்பினும், என் தமிழ் அடையாள ‘ஹிப்ஹாப்’ இசையின் மூலம் நான் தனித்துவமாக விரும்பினேன்,” என்றார் யங் ராஜா.

சந்தித்த சவால்கள்

ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல மொழி வளம் பெற்ற யங் ராஜா, அதனைத் தனது பக்கபலமாக அமைத்துக் கொண்டார்.  அவரது ‘ஹிப்ஹாப்’ கனவு ஒரு நீண்ட பயணமாக மாறியது. இருந்தும், இது ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை என்பதால் அச்சம் உருவெடுத்தது.

“ஆங்கிலமும் தமிழும் கலந்த சொல்லிசைக் கலைஞனை நம் சிங்கப்பூர் இந்திய சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. மேலும், தனித்துவம் வாய்ந்த இந்த ‘ஹிப்ஹாப்’ இசையைத் தொடர்ந்து மக்கள் ஆதரிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்தது. கலை ஆர்வத்தை வெளிக்காட்டும் கலைஞனான எனக்கு இன்றும் அந்த அச்சம் உள்ளது. இது எல்லாக் கலைஞர்களும் தொடர்ந்து அனுபவிக்கும் ஒன்று!” என்று சிரித்தவாறே சொன்னார் இவர்.

பல மாதங்களாக, தனது அடையாளத்தை இசையின் மூலம் கண்டறிய, தனது தனிப்பட்ட நேரத்தையும் ஒதுக்கி பல முயற்சிகளில் இவர் ஈடுபட்டார். இவ்வாறு எழும் ஐயங்களைத் தாண்டி, அவர் தனது உள்ளூர்க் கனவுகளை அனைத்துலக அளவில் வளர்த்தார்.

துணை நின்றோர்

அன்பான குடும்பம், மிகுந்த ஆதரவு அளித்த நண்பர்கள் இந்த மகத்தான வெற்றியை அடைய தொடர்ந்து பக்கபலமாக நிற்கின்றனர் என்று யங் ராஜா திடமாக நம்புகிறார். 

“நான் தனி ஒரு மனிதனாக இயங்கவில்லை. என் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் எனக்கு மிகப் பெரிய துணையாக இருந்தார்கள். என் குழுவினர்கள் என்னுடன் பல ஆண்டுகளாக இணைந்து, பல தடங்கல்கள் கடந்து வந்துள்ளார்கள். ‘யங் ராஜா’ என்ற கலைஞனின் பெருமை என் குடும்பம் மற்றும் இசைத் துறையில் என்னுடன் பயணம் செய்யும் என் குழுவினர்களைச் சேரும்,”  என்று இவர் பெருமையாகச் சொன்னார்.

“சிங்கப்பூர் கலைஞர்களுக்கு செயலில் ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்று எனக்கு ஆசை. விடாமுயற்சி, நம்பிக்கை, நல்ல ஆதரவு இருந்தால் சிங்கப்பூர் அனைத்துலக அரங்கில் புகழ்பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” 

“சாதாரணமாக, கலைத் துறையில் சாதிப்பது எளிதானதன்று. தொடர்ந்து சவால்களை எதிர்நோக்க நேரிடும். நம் தனிப்பட்ட வாழ்க்கையில் பலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். இருப்பினும், அந்த கனவுகள் மெய்ப்பட உழைக்கத் தயாராக வேண்டும். நம் அடையாளத்தை ஏற்றுக்கொண்டு துணிந்து சென்றால், போகும் பாதை எளிதாகும்,” என்றார் யங் ராஜா.

கடந்த ஆறாண்டுகளாக, யங் ராஜா தனக்கு மட்டுமல்லாமல், சிங்கப்பூருக்கான அங்கீகாரத்தை தனது தனித்துவமான ஆங்கில - தமிழ் சொல்லிசையினால் அடைந்து வருகிறார். கடந்து வந்த பாதை செழிப்பான ஒன்றாக இருப்பினும், இனிதான் ஆரம்பம் என்கிறார் இந்த மகுடம் சூடா ராஜா. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!