தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘இறுதி மூச்சு வரை சமூக சேவை’: வாழ்வை அர்ப்பணித்த தொண்டூழியர்கள்

4 mins read
bb66a19b-26ef-4bff-9e9a-877c78e44300
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃபிலி (வலது), தலைசிறந்த வாழ்நாள் தொண்டூழியர் விருதை டாக்டர் எஸ் வாசுவிற்கு வழங்கினார். - படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

சமூக சேவைக்குத் தன் வாழ்வையே அர்ப்பணித்த டாக்டர் எஸ் வாசுவிற்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு (எம்எஸ்எஃப்) தலைசிறந்த வாழ்நாள் தொண்டூழியர் விருதை வழங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை பிப்ரவரி 2ஆம் தேதி மரினா பே எக்ஸ்போ, கண்காட்சி மையத்தில் நடைபெற்ற வருடாந்தர ‘எம்எஸ்எஃப்’ தொண்டூழியர், பங்காளி விருது விழாவில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃபிலி மொத்தம் 298 விருதுகளை வழங்கினார்.

எம்எஸ்எஃப் பங்காளிகள், தொண்டூழியர்கள், எம்எஸ்எஃப் திட்டங்களுக்குப் பெரிதளவில் துணைபுரிந்துவரும் அமைப்புகள் ஆகிய தரப்புகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

2024ஐ தொண்டூழியர்களைப் பாராட்டும் ஆண்டாகவும் அறிவித்தார் அமைச்சர் மசகோஸ். தேசிய சமூகச் சேவை மன்றத்தின் தொண்டூழியர் வளர்ச்சி வழிகாட்டியையும் அவர் அறிமுகப்படுத்தினார். இவ்வழிகாட்டி, தொண்டூழியர்களை நீடிக்க வைப்பதற்கான உத்திகளைப் பரிந்துரைக்கும்.

சிங்கப்பூரின் சமூக சேவைத் துறையின் முன்னோடி

“சமூக சேவையின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் வாசு, 1976ல் சிங்கப்பூரின் முதல் சமூக சேவை செயலகம் (Volunteer Service Bureau) தொடங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர்,” என டாக்டர் வாசுவை அறிமுகப்படுத்தினார் அமைச்சர் மசகோஸ்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகச் சமூக சேவையாற்றிவரும் டாக்டர் வாசு, சிங்கப்பூரின் முதல் முதியோர் சமூக இல்லமான ஹெண்டர்சன் முதியோர் சமூக இல்லத்தை 1974ல் தொடங்கினார்.

இன்று சிங்கப்பூர் முழுவதும் குடும்பச் சேவை நிலையங்கள் இயங்குவதற்கு வித்திட்டவரும் டாக்டர் வாசு. சமூக சேவைகளை வட்டாரங்களுக்குக் கொண்டுவரும் முயற்சியின் தொடக்க பரிசோதனைக் கூடமாக, 1976ல் மூன்று பங்காளிகளோடு அங் மோ கியோ சமூக சேவை நிலையத்தைத் தொடங்கினார்.

டாக்டர் வாசு (நடுவில்) அன்று தொடங்கிய அங் மோ கியோ சமூக சேவை நிலையம் இன்று ‘ஆல்கின்’ என அழைக்கப்படுகிறது. சென்ற ஆண்டு ‘ஆல்கின்’ வாழ்நாள் தொண்டூழியர் விருதைப் பெற்றார் டாக்டர் வாசு.
டாக்டர் வாசு (நடுவில்) அன்று தொடங்கிய அங் மோ கியோ சமூக சேவை நிலையம் இன்று ‘ஆல்கின்’ என அழைக்கப்படுகிறது. சென்ற ஆண்டு ‘ஆல்கின்’ வாழ்நாள் தொண்டூழியர் விருதைப் பெற்றார் டாக்டர் வாசு. - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூர் சமூக சேவையாளர்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் 1984 முதல் 2001 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார் இவர்.

‘மைண்ட்ஸ்’, ‘டவுன் சிண்ட்ரோம்’ சங்கம், ‘பியோண்ட் சோஷல் சர்விசஸ்’, அங் மோ கியோ குடும்ப சேவை நிலையம், மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம், சமூகப் பராமரிப்பு கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கு ஆலோசகராக இருந்துள்ளார். தேசிய கீல்வாத அறநிறுவனத்தின் துணைத் தலைவராகவும் சேவையாற்றினார்.

ஓய்வுபெற்ற பேராசிரியரான டாக்டர் வாசு, தற்போது சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் சமூக மேம்பாடு பற்றிக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

‘மூப்படையும் சமுதாயத்தில் முதியோர் நலன் முக்கியம்’

சமூக சேவை அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட, தரவுகளைக் கூடுதலாக ஆராய்ந்து புதிய தேவைகளுக்குப் புதிய தீர்வுகளை வழங்கவேண்டும்.
டாக்டர் எஸ் வாசு

டாக்டர் வாசு அண்மையகாலமாக முதியோர் நலனில் அதிக அக்கறை செலுத்திவருகிறார். அங் மோ கியோ குழுத்தொகுதிக்கு கௌரவ அடித்தள ஆலோசகராகவும் சேவையாற்றுகிறார்.

தனிமை, மனநலம், உடல் ஊனம், ஆரோக்கியம், பொருளாதாரம், அடிப்படைத் தேவைகள் போன்ற பலவித சவால்களை முதியோர் எதிர்நோக்குவதாகக் கூறினார் டாக்டர் வாசு.

திங்கள் முதல் வெள்ளி வரை, முதியோருக்கான ‘ஹெல்ப்லைஃப்’ எனும் தொலைபேசி உதவிச் சேவையை வழிநடத்தும் தொண்டூழியர்களுடன் டாக்டர் எஸ் வாசு (நடுவில்).
திங்கள் முதல் வெள்ளி வரை, முதியோருக்கான ‘ஹெல்ப்லைஃப்’ எனும் தொலைபேசி உதவிச் சேவையை வழிநடத்தும் தொண்டூழியர்களுடன் டாக்டர் எஸ் வாசு (நடுவில்). - படம்: ரவி சிங்காரம்

அண்மையில், ‘ஏசஸ் கேர்ஸ்’ எனும் அறநிறுவனத்தைத் தொடங்கி, சிங்கப்பூர் முழுவதும் வாழும் முதியோருக்கான ‘ஹெல்ப்லைஃப்’ எனும் தொலைபேசி உதவிச் சேவையை அறிமுகப்படுத்தினார் டாக்டர் வாசு. திங்கள் முதல் வெள்ளி வரை, வயதான தொண்டூழியர்களின் உதவியோடு காலை 9 மணி முதல் 5 மணி வரை இயங்குகிறது இச்சேவை.

இளையர்களும் இதுபோன்ற பணிகளில் கூடுதலாக பங்கேற்கவேண்டும் என விரும்புகிறார் டாக்டர் வாசு.

சிங்கப்பூரில் கூடுதலானோர் சமூக சேவையில் ஈடுபடவேண்டும். சமூக சேவையாளர் பணக்காரராக இருக்கத் தேவையில்லை. சமுதாயம் மீதுள்ள அக்கறைதான் முக்கியம்.
டாக்டர் எஸ் வாசு

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம், மனநலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என விரும்புவதாகவும் கூறினார் டாக்டர் வாசு.

தலைசிறந்த தொண்டூழியர் விருதைப் பெற்ற வளர்ப்புப் பெற்றோர்

2003 முதல் 20க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு வளர்ப்புப் பெற்றோராக இருந்துள்ள அனிதா சிவதாசன், 62 (நடுவில்), சிவசந்திரன் பழனிசாமி, 64 (இடம்) தலைசிறந்த தொண்டூழியர் விருதுகளைப் பெற்றனர்.
2003 முதல் 20க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு வளர்ப்புப் பெற்றோராக இருந்துள்ள அனிதா சிவதாசன், 62 (நடுவில்), சிவசந்திரன் பழனிசாமி, 64 (இடம்) தலைசிறந்த தொண்டூழியர் விருதுகளைப் பெற்றனர். - படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

2003 முதல் 20க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு வளர்ப்புப் பெற்றோராக இருந்துள்ள அனிதா சிவதாசன், 62, சிவசந்திரன் பழனிசாமி, 64, தம்பதியர், தலைசிறந்த தொண்டூழியர் விருதுகளைப் பெற்றனர்.

பாரபட்சம் பாராது சொந்த பிள்ளைகள் போன்று சிறார்களை வளர்த்துள்ள இவர்கள், தற்போது ‘ஏடிஹெச்டி’ எனும் கவனக்குறைபாடு உள்ள 14 வயது சிறுவரையும் ‘டவுன் சிண்ட்ரோம்’ கொண்ட மூன்று வயது சிறுவரையும் வளர்த்துவருகின்றனர்.

“சிறுவர்கள் வளர்ப்புப் பெற்றோருடன் வளர்வதால் அன்பைப் பெற்று, அவர்களுக்கென ஒரு குடும்பத்துக்குச் சொந்தம் கொண்டாடமுடிகிறது,” என்றார் அனிதா.

வளர்ப்புப் பெற்றோராக இருப்பது முக்கியப் பொறுப்பு. சிறுவர்களுக்காக நேரம் ஒதுக்கவேண்டும். தியாகங்களைச் செய்யவேண்டும். பல எதிர்பாராச் சவால்களையும் சந்திக்க நேரிடும். ஆனால் அலாதி மனநிறைவைக் கொடுக்கும்.
அனிதா சிவதாசன், 62

“எம்எஸ்எஃப் இப்பயணத்திற்குப் பெரிதும் உதவுகிறது. பல பயிலரங்குகளை நடத்துகிறது. சிறுவர்கள் பல மருத்துவச் சலுகைகளைப் பெறுவதற்கும் துணைபுரிகிறது,” என்றார் சிவசந்திரன்.

இன்றுவரை தாம் வளர்த்த சிறுவர்கள் பலரும் தங்களைக் காணத் திரும்பிவருவதாக மனம் நெகிழ்ந்து கூறினர் தம்பதியர்.

இளங்குற்றவாளிகளை நல்வழிப்படுத்திய நெடுநாள் சேவையாளர்கள்

45 ஆண்டுகால நீண்டகால சேவையாளர் விருதுகளைப் பெற்றனர் தவமணி வேலாயுதம் (இடம்), 75, மற்றும் லெட்சுமணன் மாரியப்பன், 83 (வலம்).
45 ஆண்டுகால நீண்டகால சேவையாளர் விருதுகளைப் பெற்றனர் தவமணி வேலாயுதம் (இடம்), 75, மற்றும் லெட்சுமணன் மாரியப்பன், 83 (வலம்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

45 ஆண்டுகால நெடுநாள் சேவையாளர் விருதுகளைப் பெற்றனர் லெட்சுமணன் மாரியப்பன், 83, மற்றும் தவமணி வேலாயுதம், 75.

நீதிமன்ற உத்தரவுபடி சமூகத்தில் கண்காணிப்பில் இருக்கும் இளங்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் தொண்டூழியர்களாக 1970களிலிருந்து சேவையாற்றிவருகின்றனர் இவர்கள்.

அந்த இளையர்கள் நேரத்திற்குப் பள்ளி செல்கிறார்களா, வீடு திரும்புகிறார்களா போன்றவற்றைக் கண்காணித்து, அவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலிருக்க இருவரும் பெரும் பங்காற்றியுள்ளனர்.

“நாம் அன்பாக புத்திமதி கூறுவதால், வலுவான பந்தம் ஏற்படுகிறது. இன்றுவரை சிலர் தொடர்பில் இருக்கிறார்கள்,” என்றார் முன்னாள் ஆசிரியை திருவாட்டி தவமணி.

“அவர்களில் சிலரை வீட்டிற்கு அழைத்து என் மகன்களுக்கு அறிமுகப்படுத்துவேன். வயிறார உணவு கொடுப்பேன். என் மகன்களின் புத்தகங்களைக் கொடுப்பேன். அவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வேன்,” என்றார் முன்பு 10 ஆண்டுகளுக்குக் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த திரு லெட்சுமணன்.

 ‘எம்எஸ்எஃப் நண்பர்கள்’ விருது

‘பியூடிஃபுல் பீபல்’ அமைப்பின் சார்பாக  ‘எம்எஸ்எஃப் நண்பர்கள்’ விருதைப் பெற்றுக்கொண்ட அதன் வாரியத் தலைவர் டாக்டர் பிரியங்கா ராஜேந்திரம், 36.
‘பியூடிஃபுல் பீபல்’ அமைப்பின் சார்பாக ‘எம்எஸ்எஃப் நண்பர்கள்’ விருதைப் பெற்றுக்கொண்ட அதன் வாரியத் தலைவர் டாக்டர் பிரியங்கா ராஜேந்திரம், 36. - படம்: ரவி சிங்காரம்

ஐந்தாண்டு நெடுநாள் சேவையாளர் விருதையும் ‘எம்எஸ்எஃப் நண்பர்கள்’ விருதையும் பெற்றது ‘பியூடிஃபுல் பீபல்’.

2017ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் பெண்கள் இல்லத்தில் உள்ள இளையர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்துவருகின்றனர் இவ்வமைப்பின் தொண்டூழியர்கள்.

“நாங்கள் அவர்களுடன் உருவாக்கும் பந்தம், வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. அந்த இளையர்கள் முன்னேறி நல்ல நிலைக்கு வரும்போது பெருமகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் அமைப்பின் வாரியத் தலைவர் டாக்டர் பிரியங்கா ராஜேந்திரம், 36.

வீடு இல்லாத சிங்கப்பூரர்களுக்கு வசிக்க இடம் வழங்கியதற்காக ‘லைஃப் செண்டர்’ சமூக சேவைகள் ‘எம்எஸ்எஃப் நண்பர்கள்’ விருதைப் பெற்றது. அதன் சார்பாக விருதைப் பெற்றார் ரெவ்ரண்ட் சேமுவல் கிஃப்ட் ஸ்டீஃபன்.
வீடு இல்லாத சிங்கப்பூரர்களுக்கு வசிக்க இடம் வழங்கியதற்காக ‘லைஃப் செண்டர்’ சமூக சேவைகள் ‘எம்எஸ்எஃப் நண்பர்கள்’ விருதைப் பெற்றது. அதன் சார்பாக விருதைப் பெற்றார் ரெவ்ரண்ட் சேமுவல் கிஃப்ட் ஸ்டீஃபன். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்