தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நண்பர்களுடன் தனலட்சுமி உடற்பயிற்சி, விருந்துணவு

2 mins read
79336731-b7ff-4656-bdd3-d1af8ea4f469
அண்டை வீட்டாருடன் ‘லோ ஹெய்’ செய்யும் தனலட்சுமி சுப்ரமணியன், 73. - படம்: சன்லவ் இல்லம்

அக்கம்பக்கத்தாருடன் உடற்பயிற்சி செய்யும் வழக்கமுடைய இல்லத்தரசி தனலட்சுமி சுப்ரமணியன், 73, அண்மையில் அவர்களுடன் சீனப் புத்தாண்டு விருந்துண்டு மகிழ்ந்தார்.

அங் மோ கியோ வட்டாரத்தில் 83 வயது கணவருடன் வசிக்கிறார் இவர். சன் லவ் அங் மோ கியோ துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தினர் இவரை அணுகியதை அடுத்து உடற்பயிற்சி வகுப்புகளில் சேர முடிவு செய்தார் தனலட்சுமி. தற்போது இவர் வாரத்திற்கு மூன்று முறை புளோக்கிற்குக்கீழ் சுமார் 20 பேருடன் கூடி, எளிய உடற்பயிற்சிகளைச் செய்து வருகிறார்.

“முதலில் நேரமில்லை என்று நினைத்தேன். கணவரைப் பார்த்துக்கொள்வதற்கும் பேரப்பிள்ளைகளுக்குச் சமைப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. ஆனால், நிலையத்தினர் எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து இதில் சேரவைத்தனர்,” என்று அவர் கூறினார்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் அங் மோ கியோவிலுள்ள காப்பிக் கடை ஒன்றில் சீனப் புத்தாண்டுக்காகக் கூடினர். சன் லவ் அங் மோ கியோ துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்திற்குப் பக்கத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 முதியோர்கள் அந்த விருந்தில் கலந்துகொண்டனர். கலந்துகொண்டோரின் தேவைக்கேற்ப உணவு வழங்கப்பட்டது.

உணவுக்குப்பின் ‘லோ ஹெய்’ செய்து அவர்கள் மகிழ்ந்தனர். விருந்து நிகழ்ச்சியில் அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நடியா அஹமது சம்டின் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

“முதன்முறையாக செய்யப்படும் இத்தகைய ஏற்பாட்டிற்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. சமூக ஒற்றுமையை ஊக்குவிக்க முற்படும் இந்த நிகழ்ச்சிக்கு அடுத்தமுறை அதிகமானோர் வரவேண்டும் என விரும்புகிறோம்,” என்றார் சன் லவ் இல்லத்தின் துணை மேலாளர் மகாலட்சுமி அண்ணாமலை.

வீட்டைக் கவனிப்பதிலேயே காலத்தைச் செலவிடும் வயது முதிர்ந்த இந்தியப் பெண்கள், தங்கள் சொந்த நலனிலும் அக்கறை செலுத்த இத்தகைய உடற்பயிற்சி வகுப்புகள் ஒரு வழி என்று அவர் கூறினார்.

“நான் பார்த்தவரை என் சீன அண்டை வீட்டுக் குடும்பத் தலைவிகளுக்கு அளவுக்கதிகமான வீட்டுவேலை இருக்காது. ஆனால், நம் தமிழ்ச் சமூகத்துத் தாய்மார்கள் வீட்டு விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்துவதால் சோர்ந்துவிடுகிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் தங்கள் மனைவியரையும் தாய்மாரையும் ஊக்குவித்தால் அவர்களது தயக்கம் குறையக்கூடும் என எண்ணுகிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்