கல்விக்கு வயது ஒரு தடையல்ல

2 mins read
7d4fd91b-ba30-4c46-8dda-8ad4d6a47f91
திரு நடராஜு சிவானந்தன். - படம்: கப்லான் சிங்கப்பூர்
multi-img1 of 2

அரை நூற்றாண்டுக்கும் மேல் நீதிமன்ற உரைப்பெயர்ப்பாளராகப் பணியாற்றிய நடராஜு சிவானந்தன், 2018ஆம் ஆண்டில் பணிஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் இளம் வயதில் தான் பாதியில் விட்ட கல்வியைத் தொடர முனைந்தார்.

தற்போது 75 வயதாகும் இவர், தன்னுடைய 70வது வயதில் கப்லான் சிங்கப்பூர் கல்வி நிலையத்தில் சட்டக்கல்வி துறையில் பட்டயக்கல்வி பயிலத் தொடங்கினார். 

கடைசியாக, 1967ஆம் ஆண்டில் தம் கல்வியைக் கைவிட்ட திரு சிவானந்தன், பல ஆண்டுகள் கழித்து வகுப்பறைக்குச் செல்லத் தயங்கினார்.

“ஆசிரியர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் என்னைவிட மிகவும் இளையர்களாக இருந்தனர். என்னுடன் படித்த 30 மாணவர்களில் அனைவருமே 20 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருந்தனர். அவர்களுடன் இணைந்து பயணிக்க மிகுந்த தயக்கம் இருந்தது,” என்று பகிர்ந்துகொண்டார். 

அதுமட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதிக சிரமம் இருந்ததாகவும் அதனால் கணினியைத் தொடவே பயமாக இருக்கும் என்றும் இவர் நினைவுகூர்ந்தார். 

“இக்காரணங்களினால் இம்முயற்சியைக் கைவிட்டுவிடலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் வகுப்புத் தோழர்களும் ஆசிரியர்களும் குடும்ப உறுப்பினர்களும் அளித்த ஊக்கத்தால் தொடர்ந்து நடைபோட்டேன்,” என்றார் இவர்.  

தன்னம்பிக்கையைக் கைவிடாது சில மாதங்களிலேயே தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார் இவர். மனைவி, மகள், மகன், பேரப்பிள்ளைகள் என அனைவரும் தன் முயற்சிக்கு உறுதுணையாக இருந்ததாவும் இவர் தெரிவித்தார். 

தொடர்ந்து கற்று 2019ஆம் ஆண்டு இவர் பட்டம் பெற்றார். கொவிட்-19 நெருக்கடி காலமாதலால் அந்த ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. அதனால் இவ்வாண்டு நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவருக்குப் பட்டமளித்து ஆச்சரியமளிக்கும் வகையில் கெளரவப்படுத்தியது கப்லான் சிங்கப்பூர் கல்வி நிலையம். 

தற்போது பகுதிநேர மொழிப்பெயர்ப்பாளராக இருக்கும் இவர், கல்விக்கு வயதும் வேறு எதுவும் தடையாக இருந்திட முடியாது என்பதற்கு நானும் ஒரு சான்று என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். 

கல்வி மட்டுமல்லாமல் இவர் எழுத்தாளராகவும் தன் திறமையைப் பதித்து வருகிறார். இளம் வயதிலிருந்தே ஒரு புத்தகமாவது எழுதி வெளியிட வேண்டும் என்ற தன் ஆசையையும் இவர் நிறைவேற்றியுள்ளார். 

நீதிமன்ற உரைபெயர்ப்பாளராக 51 ஆண்டுகள் பணியாற்றிய திரு சிவானந்தன், தாம் சந்தித்த நீதிமன்ற வழக்குகளிலிருந்து 15 சுவாரசியமான வழக்குகளைப் பற்றிய தமது அனுபவங்களை ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ளார். ‘பியோன்ட் ஏ ரீசனபல் டவுட்’ என்ற இந்த ஆங்கிலப் புத்தகத்தை 2019ஆம் ஆண்டு வெளியிட்டார் இவர். 

இதற்கு முன் ‘மெமுவோர்ஸ்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் இவர் வெளியிட்டுள்ளார். மேலும், ‘எண்ண அலைகள்’ என்ற தமிழ்க் கவிதைத் தொகுப்பு புத்தகத்தையும் இவர் வெளியிட்டுள்ளார். 

தொடர்ந்து துடிப்புடன் செயல்பட்டுவரும் இவர், “இக்கால இளையர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வியே ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். ஆகவே, சிங்கப்பூரில் உள்ள வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்,” என்று இளையர்களிடம் திரு சிவானந்தன் கேட்டுக்கொண்டார்.  

குறிப்புச் சொற்கள்