தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரமலான் மாத இரவு நேரங்களில் இரண்டாவது ‘தராவீஹ்’ தொழுகை

1 mins read
173ae150-29d1-47ae-ba73-c20ca1d871d0
அப்துல் கஃபூர் பள்ளிவாசல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புனித ரமலான் மாதத்தின் இரவுநேர ‘தராவீஹ்’ தொழுகை, திங்கட்கிழமை (மார்ச் 11) முதல் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை நடத்தப்படும் என்று அப்துல் கஃபூர் பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

வழக்கமாக இரவு ஒன்பது மணிக்கு நடைபெறும் முதல் ‘தராவீஹ்’க்குப் பிறகு புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது ‘தராவீஹ்’, இரவு 11 மணிக்குத் தொடங்கும் என்று பள்ளிவாசல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அறிவித்தது.

வேலை அல்லது சூழ்நிலை காரணமாக இரவு 9 மணிக்கு வர இயலாதவர்கள், இரண்டாவது ‘தராவீஹ்’க்கு வரும்படி முஸ்லிம் அன்பர்களைப் பள்ளிவாசல் கேட்டுக்கொண்டது.

லிட்டில் இந்தியா வட்டாரத்தின் டன்லப் சாலையிலுள்ள இந்தப் பள்ளிவாசல், இந்த ஏற்பாட்டினை முதல்முறையாகச் செய்கிறது. இதற்கு ஆண்களும் பெண்களும் வரவேற்கப்படுகின்றனர்.

முதல் தொழுகையின்போது நடத்தப்படுவதுபோல இரண்டாது தராவீஹ்யின்போதும் 20 ‘ரகாஅத்’ தொழுகை நடத்தப்படும்.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதும் ‘தராவீஹ்’ தொழுகையில் பங்கேற்பதும் இரண்டு முக்கிய நற்செயல்களாக இஸ்லாமிய சமயம் குறிப்பிடுவதாக அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் தலைமை இமாம் அஜீஜுல்லாஹ் ஹஸனி தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், மார்ச் 12ஆம் தேதி ரமலான் மாதத்தின் முதல் நாள் நோன்பு தொடங்கும் என்று சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் நசிருதின் முஹம்மது நசிர் மார்ச் 10ஆம் தேதி அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்