புதிய அம்சங்களுடன் ‘ஓப்போ’ திறன்கருவிகள் அறிமுகம்

புதிய அம்சங்களுடன் ‘ஓப்போ’ திறன்கருவிகள் அறிமுகம்

3 mins read
ad72bfef-4450-4973-87ac-9b445045bed6
கண்கவர் தோற்றத்துடன் வெளியாகியுள்ள ஓப்போ திறன்கருவிகள். - படம்: ஓப்போ நிறுவனம்

ஓப்போ நிறுவனம் தற்போது, ‘நியோ பேடு’ எனும் 11.4” திரை கொண்ட கைக்கணினியை அறிமுகம் செய்துள்ளது.

மின்னணுக் கருவிகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள், தொலைபேசிக்கும் மடிக்கணினிக்கும் இடைப்பட்ட, அவ்விரு கருவிகளின் பணிகளையும் செய்யக்கூடிய இவ்வகைக் கைக்கணினிகளை வடிமைத்துள்ளன.

அந்த வரிசையில், பல்வேறு சிறப்பம்சங்களுடன், ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வந்துள்ள இந்த நியோ பேடு, நீண்ட நேரப் பயன்பாட்டுக்கு சிறந்ததாக அமைந்துள்ளது.

கண்களை உறுத்தும் ஒளியைக் கட்டுப்படுத்தி, புத்தகம் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, குறுந்தொடர்களை ‘பிஞ் வாட்ச்’ செய்வது உள்ளிட்டவற்றுக்கு சிறந்த தேர்வு இது.

‘டால்பி’ ஒலியமைப்பிலான நான்கு ஒலிபெருக்கிகள், சிறந்த உணர்திறன், அதிவேக மின்னூட்டம் எனப் பல கூறுகளுடன் வருகிறது இக்கருவி.

குறிப்பாக, பல நிறுவனங்கள் அளிக்கும் ‘ஈக்கோ சிஸ்டம்’ எனும் கருவிகள் ஒன்றோடொன்று தொடர்புடன் இயங்கும் அமைப்பை, இந்த கைக்கணினி உறுதிசெய்கிறது. ஓப்போ நிறுவனத்தின் திறன்பேசியும், இந்த நியோ பேடும் இருந்தால், ஒன்றோடொன்று இணைத்தும், திறன்பேசியை கைக்கணினியில் இருந்து இயக்கவும் முடியும். இது, தகவல் பரிமாற்றத்துக்கு மிகவும் உதவுகிறது.

இது தவிர, நியோ பேடில், ‘ஸ்பிலிட் ஸ்கிரீன்’ எனும் பிரிதிரை அம்சம் மூலம் இரு செயலிகளையும் ஒரே திரையில் பயன்படுத்த முடிகிறது. இது படித்துக்கொண்டே குறிப்புகள் எடுப்பது, படம் பார்த்தபடியே குறுந்தகவல் அனுப்புவது என பல வகைகளில் உதவும்.

இதன் அடுத்த சிறப்பம்சம், ‘புளோட்டிங்’ எனும் மிதக்கும் திரை. அதாவது, ஒரு செயலியையோ, இணையப்பக்கத்தையோ பயன்படுத்தும்போது, அதனை மாற்றாமல், அதன் மேலே மற்றொரு செயலியைச் சிறு அளவில் பயன்படுத்துவது. இது, குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கும்போது, சட்டென நாட்காட்டியைத் திறந்து பார்ப்பது, முக்கியப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, தேவையான சிறு தகவலை இணையத்தில் தேடுவது உள்ளிட்ட பலவற்றுக்கு உதவியாக இருக்கும்.

ஏற்புடைய விலை, ‘கலர் ஓஎஸ்’ எனும் எளிய இயக்க முறைமை, ‘வைஃபை’, ‘வைஃபை + சிம் கார்டு’ என இருவகைகளிலும், போதிய சேமிப்பு அளவுடன் வரும் இந்த நியோ பேடு, மாணவர்கள், பணியாற்றுபவர்கள், மின்னிலக்கக் கருவியை பயன்படுத்தும் அனைவருக்கும் சிறந்த தேர்வு.

3 ‘கேமராக்களுடன்’ தரமான புகைப்படம் எடுக்கும் அமைப்பும் கொண்ட ஓப்போ ரெனோ 11 புரோ திறன்பேசி.
3 ‘கேமராக்களுடன்’ தரமான புகைப்படம் எடுக்கும் அமைப்பும் கொண்ட ஓப்போ ரெனோ 11 புரோ திறன்பேசி. - படம்: ஓப்போ நிறுவனம்

இத்துடன் அறிமுகம் கண்டுள்ள ‘ஓப்போ ரெனோ 11 புரோ’ திறன்பேசி கண்கவரும் தோற்றத்துடன், 3 ‘கேமராக்களுடன்’ தரமான புகைப்படம் எடுக்கும் அமைப்பும் கொண்டுள்ளது. கனமாக இல்லாமல், குறைவான எடை கொண்ட இந்த திறன்பேசி, உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பல அம்சங்களுடன் வந்துள்ளது.

திறன்பேசியில் பணிகளைச் செய்ய ஏதுவாக, கைக்கணினிகளில் வரும் பிரிதிரை, மிதக்கும் திரை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

கூடுதலாக, ஒருவர் தமது விருப்பத்திற்கேற்ப, எளிதில் பயன்படுத்த ஏதுவாக தொடுசெய்கைகளை (Touch actions) அமைத்துக்கொள்ள முடிகிறது. இது சிறந்த பயனர் அனுபவத்தைத் தருகிறது.

இரவு நேரக் காட்சிகளைப் புகைப்படமெடுக்கவும், தற்படம் எடுக்கவும் அதிகம் பயன்படுத்துவோருக்கு இது நல்ல தெரிவு.

4 ஜிபி தொடங்கி 12 ஜிபி வரை விரிவுபடுத்திக்கொள்ளக்கூடிய ‘ரேம்’, இந்தத் திறன்பேசியை இணைய விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்புடையதாக்குகிறது.

மேலும், இத்திறன்பேசியின் நவீன தோற்றத்துக்கு ஈடுகொடுக்க, என்கோ ஏர் 3 எஸ் எனும் ‘காதொலிக் கருவி’யை (இயர் பட்ஸ்) அறிமுகம் செய்துள்ளது ஓப்போ நிறுவனம்.

அதிவேகமாக மின்னூட்டம் செய்ய முடிவதும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் மின்கலமும் குறைந்தது 25 மணி நேரம் தொடர்பயன்பாட்டுக்கு வழிவகுக்கிறது.
அதிவேகமாக மின்னூட்டம் செய்ய முடிவதும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் மின்கலமும் குறைந்தது 25 மணி நேரம் தொடர்பயன்பாட்டுக்கு வழிவகுக்கிறது. - படம்: ஓப்போ நிறுவனம்

இதன் ‘டீப் நியூரல் நெட்வொர்க்’ அமைப்பு, பாடல்கள் கேட்கும்போதும் ஒலி, அல்லது காணொளி அழைப்பில் உரையாடும்போதும், சுற்றுப்புற ஒலியின் தொந்தரவின்றி அமைதியாகப் பேச உதவுகிறது.

இந்த என்கோ ஏர் 3 எஸ் ஒரு நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைப்பு ஏற்படுத்த உதவுகிறது. இதனால் இரு சாதனங்களுக்கிடையில் சிரமமின்றி இணைப்பை மாற்றிப் பயன்படுத்த முடிகிறது.

இதன் குறைந்த எடையும், வடிவமைப்பும், அன்றாடப் பயன்பாட்டால் காதுகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதால், பாடல், ஒலிநூல், வலையொளி விரும்பிகளுக்கு இது சிறந்த தெரிவாக விளங்கும்.

குறிப்புச் சொற்கள்