பாடலுக்கும் மனிதனுக்கும் தபேலாவே உயிர்நாடி

1 mins read
8915747b-4bd4-4dc4-b26b-e29b7ab7bb2e
ஆண்டுதோறும் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தின் காவடி பஜனைகளில் தபேலா வாசித்துவருகிறார் நா.சோம.கணேசன், 66 (நடுவில்). - படம்: ரவி சிங்காரம்

கவிஞர் வாலி, எம்.எஸ்.விசுவநாதனின் இசை - இரண்டும் கலந்த பாடல்கள்வழி தபேலாவின்மீது இவருக்கு மோகம் ஏற்பட்டது.

“1970களில் வந்த அவர்களது திரைப்படப் பாடல்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. அவற்றைக் கேட்டு கேட்டு நான் மனப்பாடமே செய்தேன்,” என நினைவுகூர்கிறார் 66 வயது நா.சோம.கணேசன்.

அப்பாடல்களுக்கு உயிர்கொடுத்து கவி ரசனையை மெருகேற்றியது தபேலாவின் தாளமே எனக் கருதிய திரு கணேசன், தம் தேசிய சேவையை முடித்த கையோடு ஓராண்டுகாலம் தபேலாவை முறைப்படி கற்றார்.

வாலியின் கவிநயத்தையும் தனித்துவத்தையும் பற்றி சிங்கப்பூர் மக்கள் மேலும் அறியவேண்டும். அவருக்குக் கூடுதல் அங்கீகாரம் தேவை.
நா.சோம.கணேசன்

ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே அவருக்கு நிகழ்ச்சிகளில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வரதராஜூ எனும் முகவீணை வித்தகருடன் கிட்டத்தட்ட 10 கோவில்களில் நவராத்திரி நிகழ்ச்சிகளிலும் பஜனைகளிலும் தபேலா வாசித்தார்.

42 ஆண்டுகள் எச்எஸ்பிசி வங்கியில் பணியாற்றிய இவர் ஓய்வுபெற்றுவிட்டதால், தபேலா வாசிக்கக் கூடுதல் நேரம் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சியடைகிறார்.

சிங்கப்பூரில் குறைவான தபேலா கலைஞர்கள் இருப்பதாக கணேசன் கருதுகிறார். “தபேலாவைக் கற்றுக்கொள்வது கடினம்தான். ஆர்வம் இருந்தால்மட்டுமே முடியும்,” என்று திரு நா.சோம.கணேசன் கூறுகிறார்.

தமக்கு தபேலா கற்றுக்கொள்ள உந்துதல் வழங்கிய வாலிக்கு ஒரு நாள் சிங்கப்பூரில் ‘வாலி விழா’ பிறக்கும் என்பதே தம் கனவு என்கிறார் அவர்.

தாம் தொடர்ந்து தபேலா வாசிக்கும் வாய்ப்புகளை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் அவர் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்